Saturday, November 25, 2017

மூவேந்தர் யார்? பகுதி-34

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

குலப்பட்டங்கள்
தமிழகத்தில் இன்று ஒவ்வொருவகுப்பினருக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குலப் பட்டங்கள் வழக்கில் இருந்து வருகின்றன. ஒரே குலப்பட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்பினர் பூண்டு வருவதையும் நாம் அறிவோம். ஒருவர் மரபைத் தெரிந்துகொள்ள முதன் முதல் அவரது குலப்பட்டத்தைத்தான் வினவுவர். அப்பட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்பாருடையதாய் இருப்பின், அடுத்து அவரது மரபைக் கேட்பர்.
இன்று சமூகத்தில் உயர்வாகக் கருதப்படும் குலப்பட்டங்கள் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, முதலியார், பிள்ளை, செட்டியார் ஆகும். எல்லா சமூகத்தாராலும் உயர்வாக்க் கருதப்படவும், வாழ்க்கையில் முன்னேறவும் இப்பட்டங்களில் ஒன்றை ஒருவர் தரித்திருப்பது இன்றியமையாத ஒன்றாகின்றது.
அய்யர் என்ற பட்டம் இன்றையப் பார்ப்பனர் தவிர்த்து, பட்டு நூல் நெசவாளரும் தரித்து வருகின்றனர். தேவேந்திர குலத்தார் குருக்களுக்கும், தென் இந்திய கிருத்துவசபைக் குருக்களுக்கும் அது தொழிலை உணர்த்தும் பட்டமாக அமைந்துள்ளது.
அதே போன்று முதலியார், பிள்ளை, கவுண்டர், தேவர், சேர்வை, மூப்பன், அம்பலகாரர், என்ற பட்டங்களை ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்பார் பூண்டு வருகின்றனர். எனவே இக்குலப்பட்டங்களைக் கொண்டு ஒருவரின் வகுப்பை சுலபமாய்த் தெரிந்து கொள்ள இயலாது. தமிழகத்தில் வாழும் சில வகுப்பினரின் இன்றையக் குலப்பட்டங்களைக் கீழே காண்போம்.
அகம்படியார்
பாண்டிநாடு 
- அகம்படியன், சேர்வை, தேவர்,
சோழநாடு 
- தேவர், பல்லவராயன், பிள்ளை
தொண்டைநாடு 
- முதலியார், உடையார்


அம்பலகாரர், வலைஞர், முத்திரியர் 
- அம்பலகாரன், சேர்வை, மழவராயன், மூப்பன், பிள்ளை, வன்னியன்,


இசைவேளாளர், தேவரடியார், மேளக்காரர்

வடமாவட்டங்கள் 
- முதலியார். 
தென்மாவட்டங்கள் 
- பிள்ளை.


இடையர் 
- கோனார், கரையாளர், சேர்வை, மணியக்காரர், மன்றாடி, முக்குந்தன், பிள்ளை.


இலைவாணியர், இல்லத்துப் பிள்ளைமார், ஈழவர்
- பணிக்கன், பிள்ளை, மூப்பனார்


கம்மாளர் 
- ஆசாரி, ஆச்சாரி, நயினார், பத்தர்.


கள்ளர்:
- பாண்டிநாடு பிறமலைக் கள்ளர் - தேவர். 
- ஈசநாட்டுக்கள்ளர், மேலூர் கள்ளர் - அம்பலகாரர்,


வெள்ளூர்க்கள்ளர்
- உறங்காப்புலி, சம்மட்டி மக்கள், சாயும் படைதாங்கி, சாமிப்புலி, செம்புலி, திருமான், பூலான், முன்டேர்சி, மழவராயன், வெக்காலிப்புலி, வேங்கைப்புலி, ரெக்கான்.

சோழநாடு 
- அம்பலகாரர், கவுண்டர், களங்காப்புலி, சிங்கராயன், சோழகர், தஞ்சைராயர், தென்கொண்டார், தேவர், மழவராயர், முதலியார், வன்னியர், காடுவெட்டி மண்கொண்டார், மூவராயர், தொண்டைமான், நாட்டார், நாயக்கர் வாண்டையார், ராசாளியார் என நூற்றுக்கு மேற்பட்ட குலப்பட்டங்கள் வழங்கிவருகின்றன.


கிராமணி, சாணார்
- கிராமணி, சாணார், சேர்வை, நாடார், நாடாவி, முக்குந்தன், மூப்பன்.


குயவர்
- வேளார், செட்டி, மன்னுடையார், உடையார், பிள்ளை.


சாலியர் 
- அடவியர்


செட்டியார்
- ஆரியவைசிய செட்டியார், காசுக்காரர் செட்டியார், கரையான் செட்டியார் கோமுட்டி செட்டியார், சோழியன் செட்டியார் நாட்டுக்கோட்டை செட்டியார், பனிரெண்டாம் பேரி செட்டியார், மஞ்சக்குப்பம் செட்டியார் மளிகை செட்டியார், வாணியன் செட்டியார், வெள்ளான் செட்டியார்


செம்படவர் 
- நாட்டார், கவுண்டர், பிள்ளை, மணியக்காரன்.


சேனைக்குடையார் 
- செட்டியார், முதலியார், பிள்ளை, சேனைத்தலைவர்


செளராஸ்ட்ரப் 
- அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, பட்டு நெசவாளர் சாஸ்திரி.


தேவேந்திர குலத்தார்
பாண்டிநாடு
- காலாடி, குடும்பன், பாண்டியன்
சோழநாடு
- சோழன், காலாடி, தொண்டைமான், பணிக்கன், மூப்பன், வாய்க்காரன்.
கொங்குநாடு
- குடும்பன், பட்டக்காரர், பண்ணாடி, பலகன், மண்ணாடி

நத்தமன், சுருதிமான், மலையமான்
- உடையார், மூப்பன்


பட்டணவர்
-செட்டியார், பிள்ளை, முதலியார், பரிவாரம் ஊழியக்காரன், சேர்வைகாரன், மணியக்காரன்.

பள்ளி, படையாச்சி, வன்னியர்
- அங்கராயர், கண்டர், கண்டியர், கவுண்டர், காளிங்ராயர், சம்வுவராயர், சேதுராயர், தேவராயர், நயினார், நாயக்கர், படையாச்சி, புலிகுத்தியார், மழவராயர், வன்னியர், வாண்டையார், பிள்ளை.

பறையர்
- சாம்பார், பிள்ளை.


பார்ப்பனர்
- அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, கனபாடிகள், குருக்கள், சர்மா, சாஸ்திரி, தீட்சதர், பட்டர்.

மருத்துவர், நாவிதர்
- மருத்துவன், பண்டிதன், பிள்ளை, முதலியார்.

மறவர்
- கரையாளர், சேர்வை, தலைவர், தேவர்

வண்ணார்
- ஏகாலி, பிள்ளை


வேளாளர், வெள்ளாளர்
பாண்டிநாடு
- பாண்டிய வேளாளர், காரைக்கட்டுப்பிள்ளைமார், பிள்ளை.

சோழ நாடு 
- பிள்ளை.

தொன்டை நாடு 
- முதலியார்.

கொங்கு நாடு 
- கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியர், பிள்ளை.


மேலே கண்ட குலப்பட்டங்கள் எப்போது எவ்வாறு வழக்கில் வந்தன? என்பது பற்றியும், அவைகள் உணர்த்தும் பொருள் பற்றியும்
ஈண்டு காண்போம்.

(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-33

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

மற்ற சிறப்புக்கள்:
கரிவலம்வந்த நல்லூர், சிவிலிபுத்துர் கல்வெட்டுகள் இம் மரபினர்க்கு கெராடி, பகற்பந்தம், பாவாடை, இரட்டைச் சிலம்பு, இரட்டைக் கொடுக்கு முதலிய சிறப்புக்களைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வழங்கியதாகக் கூறுவதை நாம் அறிவோம். இச்சிறப்புக்களை வேறு ஒரு மரபினர்க்கும் மன்னர் வழங்கினார் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. கோயில் திருவிழாக்களில் நாற்று நடவு, கதிர் அறுவடை உற்சவங்ககளில் இம்மரபினர் பங்கேற்று வருவதைக் காணலாம். கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரில் நாற்று நடவு உற்சவத்தில், இம்மரபினர் பங்கேற்று வருவது கண்கூடு. (திருப்பேரூர் புராணச் சுருக்கம், பக்கம் - 59) வேறு பல இடங்களிலுமுள்ள முக்கியமான ஆலயங்களிலும் இவ் உற்சவங்களில் தேவேந்திர குலத்தார் பங்கேற்று வருவதாக அறிகிறோம். கோயில் உற்சவத்தில் இம்மரபினர்க்கெனத் தனிமண்டபப்படி உண்டு.
கரிவலம் வந்த நல்லுர், சங்கரன்கோயில் முதலிய இடங்கில் உள்ள ஆலயங்களில், இந்த மண்டபப்படி தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிகிறது. பட்டுக்கோட்டை போன்ற ஒரு இடங்களில் இவர்கள் மண்டபப்படி உரிமையை பிற மரபினர்க்கு விட்டு விட்டதாகவும் தெரிகிறது. அனேக இடங்களில் சிமீப காலமாய் அரசியலில் ஆதிக்கம் பெற்று வரும் மரபினர் அடக்குமுறை காரணமாய், இவர் தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர் எனலாம். கோயில் தேரோட்டத்திற்கு இம்மரபினர் தலைவர்களைக் கோயிலார்; கோயில் யானை, மேளதாளம், வெண் வட்டக்குடை, பகற் பந்தம் முதலிய சிறப்புக்களுடன் கோயிலுக்கு அழைத்துவந்து, அவர்களுக்குப் பரிவட்டம் கட்டி அவர்களைத் தேர்வடத்தைத் தொட்டுக் கொடுக்கும்படி வேண்டுவர். ஏற்கனவே கூறியபடி, இம்மரபுத் தலைவர்கள் தேர் வடத்தைத் தொட்டுக் கொடுத்த பின்னரே பக்தர்கள் தேரை தெருவீதிகளில் இழுத்துச் செல்வதுண்டு.

இவ்வழக்கம் பண்டையநாளில் எல்லா இடங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது. கோயில் யானை, மேளம் முதலியவற்றை இம்மரபினர் தலைவர்களை அழைக்க அனுப்புவதற்குப்பதில், சில இடங்களில் கோயிலார், சிறிது பணம் கொடுத்து இவர்களையே மேளம் அமர்த்திக்கொண்டு கோயிலுக்கு வரும்படி செய்து வருவதாகவும் தெரிகிறது. திருநெல்வேலி நெல்லையப்பர், சங்கரன் கோவில் முதலிய இடங்களில் உள்ள ஆலயங்களில் இவ்வித மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவர். மதுரை தெப்பக்குளம், மதுரை மாவட்டம் சின்னமனூர், சோழவந்தான், கோவை மாவட்டம் பேரூர், அவிநாசி முதலிய இடங்களில் உள்ள ஆலயங்களில் பழைய முறைப்படி சில மாறுதல்களுடன் இவ்வழக்கும் அமுலில் இருந்து வருவதாக அறிகிறோம்.
ஊர்ப் பொதுக் கோயில்களின் உற்சவங்களில் இம் மரபினர்க்கு முதல் மரியாதை அளிக்கப்படும். சாத்தான், அம்மன், அய்யனார் முதலிய கோயில்களில் புசாரியாக பணிபுரிபவர் பெரும்பாலும் இம்மரபினரே. அருள் ஏறி ஆடுபவரிடம் வரம் வேண்டுபவர் சாதி வேறுபாடின்றி அவரது காலில் விழுந்து வணங்குவதுண்டு. இப்பழக்கதைப் பாண்டிய நாட்டில் பரவலாகக் காணலாம். ஊர்ப்புறங்களில் ஏரி மடைவாரியம் பார்ப்பவர் இம்மரபினரே. பொன்னேர், நாள் ஏர் கட்டுபவரும் இம்மரபினரே. இவர் பொன்னேர் நாள் கட்டிய பிறகே, மற்ற வகுப்பார் பெரியநிழக்கிழார்கள் உட்பட ஏர் கட்ட வேண்டும். இதற்குக் காரணம் மள்ளர் - பள்ளர் (தேவேந்திரகுலத்தார்) தான் வேளாண் மரபினர் என்பதுவே. பாண்டிய நாட்டில் இம்மரபினர் மணவிழாக்களில், பட்டினப் பிரவேச ஊர்வலங்களில் வீதியில் மாற்று விரிப்பதுண்டு. பட்டினப்பிரவேசம் இரதங்களில் நடைபெறும். முகூர்த்த ஓலை எழுதி மணவிழாவை ஊராருக்கு முரசொலி ஒலித்து அறிவிக்கும்போது, இராசாதி இராசன், இராசமார்த்தான்டன், இராச மகேந்திரன், இராசகம்பீரன், வெள்ளையானை மீது ஏறிவரும் விருது பெற்ற பாண்டியன், கொத்துக்கு இரத்னாதி முத்தளந்த குபேந்திரன் கொழுந்தியாளை மாலையிடப் போகிறான். இவன் சொல்லுக்கு அரிச்சந்திரன், சோலை கிழிப்பாண்டியன், இவன் காலால் உழப்பியதெல்லாம் செந்நெல் விளையும்; அதனால் தேவாதி தேவர்க்கெல்லாம் அமுதம் உண்டாகும்; செகத்தினை அரசு புரியும் மன்னர் செங்கோல் தேவேந்திரனின் உழவு கோலுக்கு ஈடாகாது. முப்பது முக்கோடித் தேவர், நாற்பத்தெண்ணாயிரம் ரிசிகள் இவர்களுக்குக் கெல்லாம் அதிபதியாய் இருந்தவன் தேவேந்திரன் எனப் பலவாறு, புகழ்ந்து வாழ்த்துவதுண்டு.

ஏற்கனவே கூறியதுபோன்று மணவிழாவில் மணமகனைப் பாண்டியரோடும், பஞ்சபாண்டவரோடும் தொடர்புபடுத்தி வாழ்த்துவதுண்டு. (குறிப்பு: பஞ்ச பாண்டியருள் ஒருவனாகிய அர்ச்சுனனுக்கு பாண்டியன் மகளாகிய அல்லி அரசாணியைப் பெண்கேட்டுத் தருமர் பீமன் முதலானோர் பாண்டியரிடம் வருவதாகவும்: முகூர்த்த ஒலை எழுதி நாட்டிலுள்ள எல்லா மன்னருக்கும் அனுப்புவதாகவும், மணவிழாவிற்கு எல்லா மன்னரும் வருவதாகவும் வாழ்த்துவது உண்டு.) மணமக்களுக்குப் பிறந்த இடத்திலிருந்தும், தாய்மாமன்மார்களிடமிருந்தும் தரப்படும் சீர்வரிசைகள், மண விருந்துக்குப் புழுங்க வைத்த நெல்வகைகள் முதலியவை மண வாழ்த்தில் இடம்பெறும், பாண்டிய நாட்டில் இம்மரபுத் தாய்மார் தாலாட்டும்போது மதுரைச் சொக்க நாதரை உழவனாகவும், அம்மை மீனாட்சியை உழத்தியாகவும் வருணித்துப் பாடுவது உண்டு (பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் ; மூவேந்தர் யார்? முற்பகுதி பக்கம் 130 – 32) பார்க்க தாய் மாமனைப் பற்றித் தாலாட்டில், 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாத செந்நெல்லென்று யானை கட்டிப் போரடித்தார் உன் அம்மான் என்று ஏற்றிப் பாடுவர். தாலாட்டில் பாண்டிய நாட்டில் சோழனோ உன் அம்மான் என்றும், சோழ நாட்டில் 'பாண்டியனோ உன் அம்மான் என்றும் விழித்துப் பாடுவதுண்டு. இவ்வாறெல்லாம் பாடுவது இவர் அரசமரபென்பதையும், பண்டைய நாளில் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்த பெருங்குடியினர் என்றும், சோழ பாண்டியரிடையே மன உறவு இருந்து வந்ததையும் வெளிப்படுத்துவதாயுள்ளது. கூன் பாண்டியன் சோழ இளவரசி மங்கையர்க்கரசியை மணந்திருந்தது நினைவிருக்கத்தக்கது.
(குறிப்பு : இந்த இருவருடைய சிலைகள் மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.) புராணகாலத்து மலையத்துவசப் பாண்டியன் மனைவி காஞ்சன மாலை சூரியகுலத்து மன்னனான சூரசேன சோழனது மகள் என்பதுவும், சுந்தர பாண்டியனுக்கும் தடாதகைப் பிராட்டியாகிய அம்மை மீனாட்சிக்கும் பிறந்த உக்கிர பாண்டியனுக்கு சூரிய குலத் தோன்றலாகிய வட நாட்டின்கண் கல்யாணவுரம் என்ற பேரூரின் வேந்தன் சோமசேகரன் மகளாகிய காந்திமதியைப் பெண் கொண்டதுவும் ஈண்டு குறிப்பிடத் தக்கது. (திருவிளையாடற் புராணம் பார்க்கவும்) இராமநாதபுரம் மாவட்டம் இராபாளையத்தில் நடைபெறும் சித்திரா பெளர்ணமிவிழா இங்கு குறுப்பிடத்தக்கது. இந்நகருக்கு அருகில் உள்ள அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் வருடப் பிறப்பன்று இம்மரபினரின் தலைவர்கள் யானைமேல் ஏறிவெண்கொற்றக்குடையுடன் காலில் இரட்டைச்சிலம்பு அணிந்து மேளதாளத்துடன், ஊர்வலமாய்ச் சென்று இந்திரவிழா எடுப்பதுவும் அறியத் தக்கது. (பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் மூவேந்தர் யார்? முற்பகுதி பக். 8) இப்பல்வேறு அக புறச்சான்றுகளால் மள்ளர் - பள்ளர் தேவேந்திரகுலத்தார்தான் திராவிட இனத்தைச் சேர்ந்த சேர, சோழ, பாண்டிய மரபினர் என நாம் முடிவு கொள்வோம்.

(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-32

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

பதினெட்டு மேளம் :
வெள்ளையானை, வெண்வட்டக் குடை, தேர், பதினாறு கால் பந்தல் போன்று, பதினெட்டு மேள வாத்தியங்கள் தேவேந்திர குலத்தாருக்கு (மள்ளர் - பள்ளர்) பாண்டியன் உக்கிரப் பெருவழுதியால் வழங்கப்பட்டதாகக் கரிவலம்வந்த நல்லூர் (ARE 432 / 1914), சீவிலிபுத்தூர் (ARE 588 / 1926) கல்வெட்டுகள் கூறுவதை ஏற்கனவே கண்டோம். பதினெட்டு மேள வாத்தியங்கள் தெய்வத்திற்கும், மன்னர்க்கும், அவர்தம் மரபினர்க்கும் உரித்தாய் இருந்து வந்துள்ளது. மன்னர் இதை நடைமுறைப் படுத்தி வந்தனர் என்பது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சீதனக் குறிப்பால் அறியத் தக்கதாகும்.
அக்குறிப்பாவது :
“திருமலை அய்யன், கெளரி அய்யன் அவர்கள் (திருமலை நாயக்கன்) நாளையில் ஸ்தலம் பிரபலமாகி உற்சவங்களும் உண்டு பண்ணிவச்சதின்பேரில் ........ பட்டத்து யானையின் பேரில் அவுதா, அம்பாரி, தங்கத்தினால் அலங்காரம் பண்ணியிருக்கிற ஆணையின் பேரில் ஏறிக்கொண்டு, எழுபத்திரண்டு பாளையப்பட்டு துரைகளும் அவரவர் விருதுகளுடன் ஆயதபாணியாய் பதினெட்டுவகை மேளவாத்தியங்களுடனே, அநேக தீவட்டியுடனே கேளிக்கையுடன் துரையவர்கள் (திருமலை நாயக்கன்) செங்ககோல் வாங்க கோயிலுக்கு வருகிற வைபவம் எழுதி முடியாது. (கி. பழனியப்பன், மதுரை சுந்தரேஸ்வரர் ஆலய மகாகும்பாபிஷேக மலர்).
மேலும் நாயக்கன் தளபதி இராமப்பையன் மறவ நாட்டின் மீது படை எடுக்கப் புறப்படும்போது, பதினெட்டு மேளம் முழங்குவது பற்றி இராமப்பையன் அம்மானையில் கண்டுள்ளதாவது:-
“குதிரை மேல் டமாரம் குமுகுமு என்றுதான் முழங்க 
பதினெட்டு மேளவகை பண்புடனே தான் முழங்க 
ஆயிரம் பல்லக்கு அதிவீரர் சூழ்ந்து வர”
(இராமப்பையன் அம்மானை, Government Oriental Series பக். 15)


அடுத்து வில்லியம் டெய்லர் சேகரித்த வரலாறு பற்றிய கைப்பிரதி யிலும், பதினெட்டு மேளம் பற்றி அடியிற் காணும் குறிப்புகள் உள்ளது.

"ஆசார முகப்பு சானனியபாகத்தி இப்போதுயிருக்கிற செச்சையுடனே கூட பத்துத் தூண் நட்டுயிருக்கிறதுக்கும் கிழக்கு பெரிய ஆசார முகப்புஆகியிருந்தயிடம் அந்த மாடத்தில் பதினெட்டு விதமான வாத்திய கோஷம்" (Mackenzie Collections : William Taylor. Oriental Manuscript Part II Page 156).
ஏற்கனவே கூறியபடி மள்ளர் - பள்ளர் தேவேந்திர குலத்தார் மூவேந்தர் மரபினர் என்பதால் நன்மைக்கு இவர் பதினெட்டு வகை மேள, வாத்தியங்கள் உபயோகிக்கும் உரிமையைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வழங்கியதாக கரிவலம்வந்த நல்லூர், சீவிலிபுத்தூர் கல்வெட்டுகள் கூறுவது நாம் அறிந்ததே. இந்த உரிமைகளை, இம்மரபினர் பண்டு தொட்டு அனுபவித்துவருகின்றனர் என்பது. இவரது மணவிழாவில் மணமக்கள் பட்டினப்பிரவேச ஊர்வலத்தின் போது அவர்கள் பதினெட்டு மேளம் முழங்கப் பவனி வருவதாக வாழ்த்தி வருவதிலிருந்து புலனாகும்.
பஞ்சவன் விருது :
பாண்டிய மன்னருக்குத் தென்னவன், மாறன், வழுதி, செழியன், மீனவன், கெளரியன், வர்மன் என்ற பல விருதுப்பெயர்களுடன் பஞ்சவன் என்ற பெயரும் வழங்கியுள்ளது. பஞ்சவன் என்பதற்கு ஐந்து பாண்டிய மன்னர் கூட்டாக, ஆட்சி செய்ததாக ஒரு சாரார் கூறுவர். பாண்டியநாடு ஐந்து தினை நிலங்களை உடையதென்றும், ஐந்து ഖகை நிலங்களை ஆட்சி செய்தவர் பஞ்சவர் என வழங்கினர் என்றும் கூறுவாருமுண்டு. ஆனால், ஒரே காலத்தில் ஐந்து பாண்டிய மன்னர் ஆட்சி செய்தனர் என்பதற்கு சங்க இலக்கியங்களிலிருந்து ஒருவரும் சான்று காட்டவில்லை. அதே போன்று பாண்டிய நாடு ஐந்து வகை நிலங்களை உடையதென்பதுவும் ஏற்புடைத்தக்கதன்று. பாண்டிய நாட்டில் ஏன்? தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்குவித நிலங்கள் தான் உண்டு எனத்தொல்காப்பியம் கூறும். சிலர் பாலை என்ற ஒரு நிலமும் இருந்தது என்பர். இது தவறு. பாண்டியரைப் பஞ்சவன் என்று கூறும் போழ்து, அவரைக் கெளரியர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. "ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” எனச் சேரமான் பெருஞ்சோற்று
உதியன் சேரலாதனைப் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் சங்க காலப்புலவர் பாடியிருப்பதுவும் (புறம் 2 – 15 - 16) பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி “தவிரா ஈகை கெளரியர் மருக” (புறம் - 315) எனவும், “பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி” “செருமான் பஞ்சவன் ஏறே” (புறம் – 58 / 8,) எனவும் பேசப்படுவதை ஒப்பு நோக்குக. பஞ்சவன் என்பது பஞ்சபாண்டவர் என்றும், கெளரியர் என்பது துரியோதனாதியார் என்றும் பொருள் படுவதாயுள்ளது. எனவே பாண்டியரை, இவர் இருவருடன் தொடர்புடையவராக நாம் கருதவேண்டியுள்ளோம். பாண்டியன் என்பது பண்டையோன், பழையோன் என்ற சொற்களிலிருந்தும், பாண்டு எருது என்ற சொல்லிலிருந்தும் பிறந்ததென்று கூறுவாறுமுளர்.

பாண்டியன் முதன்முதல் எருது கொண்டு நிலத்தை உழுததால் பாண்டியன் என்ற பெயர் தோன்றியதென்பாரும் இல்லாமல் இல்லை. எனவே பஞ்சவன் என்பதை கற்பனை என ஒதுக்கி விடுவதற்கன்று. நிற்க, ஏற்கனவே கூறியதுபோல், பஞ்சவன் என்ற விருதைப் புராண காலப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி தேவேந்திரகுலத்தாருக்குப் புராண காலத்திலேயே வழங்கியுள்ளான் என்பது கரிவலம்வந்த நல்லூர், (ARE 342 / 1914) சீவிலிபுத்துர் (ARE 588 / 1926) கல்வெட்டுகளிலிருந்து நாம் அறிகிறோம். தேவேந்திர குலத்தார் இராசாக்கள் கோயில்களை வழிபடுவதுவும், அக்கோயில்களில் திருவிழாவின் போது பாரதபபோர் நடிக்கப்பட்டு வருவதும் சிந்தனைக்குறியவை ஆகும்.
நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூர் மேட்டில் உள்ள இராசாக்கள் கோயிலில், பாண்டவர், கெளரியர் பீடங்கள் இருப்பதும், ஆதிச்சநல்லூருக்குத் தெற்கில் உள்ள புளியங்குளம் வேந்திரகுலத்தார் இக்கோயிலில் வழிபாடு நடத்திவருவதுவும், இம்மரபினர் பாண்டவர், கெளரியருடன் தொடர்புடையவர் என்பதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. ஆதிச்சநல்லூருக்கு அண்மையில் உள்ள செம்பூர், வரதராசபுரம், புதுக்குடி என்ற ஊர்களிலும் தேவேந்திர குலத்தார் குடியிருப்புகளில் இராசாக்கள் கோயில்கள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது ஆம். மேலும் தேவேந்திரகுலத்தார் மணவிழாவில் மணமக்களைப் பஞ்சபாண்ட வரோடு இணைத்து வாழ்த்துவதும், அருச்சுனன் பாண்டியன் மகளாகிய அல்லி அரசாணியை மணக்கும் கதை பாத்திரத்திலேயே பேசப்படுவது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அல்லி அரசாணி மாலையில் அருச்சுனனைக், கிருஷ்ணன் “குடும்பா நீ” என அழைப்பதவும் நினைவிருக்கத்தக்க ஒன்றாகும். நிற்க பாண்டியரைப் பஞ்ச திராவிட முதல்வன் எனத் திருமணங்களில் வாழ்த்துவதுண்டு, 'திராவிடம் என்பது குஜராத்து, மராட்டா, கர்நாடகம், தெலுங்கு, தமிழ் ஆகிய ஐந்து மொழிபேசப்படும் நாடுகளை சுட்டும் மனோன்மணியம் சுந்திரம்பிள்ளை கன்னடமும், களி, தெலுங்கும் கவின் மலையாளமும் உன் உதிரத்தே எழுந்தது என்று பாடியுள்ளது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதி திராவிடம் என வழங்கியது. தேசிய கீதத்தில் திராவிட உத்சல வங்கா என வருவது காண்க. சிந்து வெளியிலிருந்து மேற்குக் கரையோரம் திராவிடர் தெற்கே குடியேறியதை இது உணர்த்துகிறது இருத்துகிறது எனலாம். மல்லர் / மள்ளர் பாரதப் போரில் பங்குகொண்டது வியாசர் பாரதத்திலிருந்து அறியலாம். அவரை வியாசர் தட்சண மல்லர் எனக் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-31

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

தேர் :
வெள்ளையானை, வெண்வட்டக்குடை போன்று தேரும் தெய்வதத்திற்கும், மன்னர்க்கும், அவர் தம் மரபினர்க்கும் ஏற்பட்டவை யாகும் என ஏற்கனவே கண்டோம். பெரிய ஆலயங்கள் உள்ள இடங்களில் கோயில் உற்சவ இறுதியில் தேரோட்டம் நடைபெறுவது நாம் அறிந்ததே. அப்போது கோயில் தேரை நன்கு அலங்கரித்து, அவற்றில் தெய்வத்தின் உருவச்சிலையை வைத்து அதை (தேரை) நகரின் நான்கு வீதிகள் வழியாகப் பக்தர்கள் ஊர்வலமாக மேளதாளம், வாணவேடிக்கை முதலியவற்றுடன் இழுத்து வருவதுவும் கண் கூடு. சங்க கால இலக்கியங்கள் பேசுவதைக் காண்போம்.
“நற்றேர் வழுதி கொற்கை முன்துறை” (அகம் 130 - 11) 
(பாண்டியனைக் குறிக்கும்)

“பொனணி நெடுஞ்தேர்த் தென்னர் கோமான்" (அகம் 209 - 3) 
(பாண்டியனைக் குறிக்கும்)

“திண்தேர் வளவற் கொண்ட கூற்றே” (புறம் 226 - 16) 
(சோழனைக் குறிக்கும்)

“மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய” (புறம். 39 - 16)
(சேரனைக் குறிக்கும்)

அக்காலத்தில் மன்னர் மட்டுமின்றி அவரது மரபினரும் தேரில் சென்றனர். இதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்வதாயுள.
“கண்டல் வேலிக்காமர் சிறுகுடி 
எல்லிவந்தன்றோ தேர்? எனச் சொல்லி, 
அவர் எழுந்தன்று இவ்வூரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை 
மணிப்பூமுண்டகம் கொய்யேன்.ஆயின்
அணிக்கவின் உண்மையோ அரிதே; மணிக்கழி 
நறம்பூங்கானல் வந்து, அவர் 
வறுந்தேர் போதல் அதனினும் அரிதே”
(நற்றினை 191 – 5 - 12)


“இனமணி ஒலிப்பப் பொழுது படப்பூட்டி 
மெய்ம்மலிகாமத்து யாம் தொழுது ஒழிய 
தேரும் செல்புறம் மறையும் ஊரோடு” 
(நற்றினை 187 – 4 -6)


“தாரணி புரவித் தண்பயிர் துமிப்ப 
வந்தன்று, பெருவிறல் தேரே 
உய்ந்தன்றாகும், இவள் ஆய் துதற்கவினே”
(நற்றினை 181 – 11 - 13)

பண்டைய நாளில் மன்னரும், அவரது மரபினரும் போருக்கு மட்டுமின்றிச், சாதாரண நிகழ்ச்சிகளுக்கும் தேரில் சென்ற வழக்கத்தை ஒட்டி, இன்று பள்ளர் / மள்ளர் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டு நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், இறந்த வரை மற்ற மரபினர் போலன்றி, தேர்கட்டி அதைத் தேர்ச் சேலைகளைக் கொண்டு நன்கு அலங்கரித்து, மேளதாளம், வாணவேடிக்கை, முதலிய ஆடம்பரத்துடன் இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருவது அறியத்தக்கது. மேலும் இவர் மற்ற மரபினர் போலன்றி இறந்தவரைப் படுக்கப்போடாமல் தேரில் உட்காரும் பாவைனையில் சாய்வாய்க்கட்டி இடுகாட்டுக்கு எடுத்துச்செல்வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்வது, பண்டைய நாளில் இவர் போர் மற்றும் சாதாரண நிகழ்ச்சிகளுக்கும் தேரில் சென்றதை நினைவூட்டுவதாயுள்ளது.
இறந்தவர் வயதானவர் எனில், அவரது பேரன்மார்களைத் தேர்மேல் ஏற்றிச் செண்டா வீசச் செய்வதுண்டு. கோயிற்தேர்களில் தேரோட்டியாக வருபவர் தேவேந்திர குலத்தாராகிய பள்ளர் / மள்ளர் மரபினரே எனச் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. வசதிக்குத் தக்கபடி இவர் 3, 5. தேர்கள் கட்டுவதுண்டு. கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் 2 தேரும், சீவிலிபுத்தூர் கல்வெட்டில் 3 தேரும் இவருக்கு உண்டு எனக் கண்டுள்ளது என்பது நாம் அறிந்ததுவே. ஆனால், நடைமுறையில் வசதிபடைத்தவர் 5 தேர்கள் கட்டி வருகிறார்களா? என்பது ஆய்வுக்குரியது. தேர் முகப்புகளின் உச்சியில் ஆலயக் கோபுரம் மற்றும் கோவில் தேர்களில் உள்ள கலசம் போன்று செம்புகளைக் கவிழ்த்து வைப்பது உண்டு. இறந்தவரைத் தேரில் எடுத்துச் செல்லும் உரிமையை, இம்மரபினர்க்குப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வழங்கியதாக ஏற்கனவே கூறியது மனதிற் கொள்ளத்தக்கது. இப்பாண்டியன் உக்கிரப் பெருவழுதி புராண மரபைச் சேர்ந்தவன் ஆவான். ஏற்கனவே கூறியபடி இவன் சுந்திரபாண்டியனாக வந்த சோமசுந்தரக் கடவுளுக்கும், தடாதகைப் பிராட்டியாகிய அம்மை மதுரை மீனாட்சி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்த முருகப்பெருமான் என்பர் ஆராய்ச்சியாளர். இம்மரபினர். தம் முன்னோர் சாதாரண நிகழ்ச்சிகளுக்கும். பண்டைய நாளில் தேரில் சென்றதை நினைவூட்டு முகத்தான் திருமணத்தின் போது, திருமணத் தம்பதிகளின் பட்டினப் பிரவேச ஊர்வலத்தில் இரதங்களை உபயோகித்து வருவது குறிப்பிடத் தக்கது. இம்மரபினர் அரச மரபைச் சேர்ந்தவர் என்பதினாலேயே, கோயில் விழாக்களில் இவருக்குக் கோயில் முதல் மரியாதை வழங்கும் பழக்கம், நடைமுறையில் இருந்து வருகின்றது. இவரது தலைவர்கள் தேர் வடத்தைத் தொட்டுக் கொடுத்த பின்னர்தான், தேரை ஊர், நகர வீதிகளில் இழுத்துச் செல்ல வேண்டும் என்ற மரபு பண்டு தொட்டு வழக்கில் இருந்து வந்திருக்கின்றது. காலப் போக்கில், இப்பழக்கம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுப் போனாலும், ஒரு சில இடங்களில் பழைய வழக்கத்தின் எச்சங்கள் இன்னும் நடைமுறையில் இருந்து வருவதாகத் தெரிகிறது. இம்மக்ளின் பொருளாதாரச் சீர்குலைவால் அரசியல், கல்வி, பொருளாதாரம் இவற்றில் முன்னேறிய சில வகுப்பினர் இவரது (தேவேந்திரகுலத்தார்) உரிமைகளை அபகரித்துள்ளனர் என்பதுவும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
பதினாறு கால் பந்தல் :
பண்டைய நாளில் மன்னர்க்கு ஏற்பட்ட சிறப்புகளில் பதினாறு கால்கள் நட்டு மண்டபம் அமைப்பதுவும் ஒன்றாகும். மன்னரது அரண்மணைகளைப் பின்பற்றி ஆலயங்களுக்கும் பதினாறு கால் மண்டபம் அமைக்கப்பட்டது எனலாம். சங்ககாலத்தில் சோழன் கரிகாலன் முன்னிலையில் காவிரிப் பூம்பட்டினத்தில் புலவர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை அரங்கேற்றத்திற்குப் பதினாறு கால் மண்டபம் அமைக்கப்பட்டது என்பதை
“வெறியார் தளவத் தொடைச் செயமாறன் வெகுண்ட தொன்று அயிர்த செம்பியன் காவிரி நாட்டிலரமியத்த பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப்பாலைக்கன்று நெறியால் விடுத்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே”

எனத் திருச்சிமாவட்டம் திருவெள்ளாறையில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம்.
மள்ளர் – பள்ளர் தேவேந்திர குலத்தார் என்பதால், இவர் பண்டு தொட்டு திருமணப் பந்தலுக்குப் பதினாறு கால்கள் நிறுவுவதுமரபாய் இருந்து  வருகின்றது எனலாம். இவரது திருமணவிழாக்களில் மணமக்களை வாழ்த்தும் போது, பதினாறு கால் பந்தலிட்டுத் திருமணம் நடைபெறுவதாகக் கூறுவது மரபாகும். இவருக்கு நன்மைக்குப் பதினாறு கால் பந்தல் இடும் உரிமை, பண்டு தொட்டு இருந்து வருகிறது என்பதற்குக் கரிவலம்வந்த நல்லூர், (ARE 432 / 1914) சீவிலிபுத்துர் (ARE 588 / 1926) ஆக இந்த இரண்டு கல்வெட்டுகளும் சான்றாகும்.
(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-30

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

M. சீனிவாச அய்யங்கார். இத்தகைய சச்சரவுகள் பற்றிக் கூறுவதாவது : 
“பிற்காலத்தில் வலங்கை இடங்கைப் பிரிவினர் 12 கால்பந்தல், 5 முரசு, குரங்குக் கொடி, குதிரை மேல் சவாரி இந்த உரிமைகள் தங்களுக்கு உரியதெனப் பாராட்டியும், இடங்கைப் பிரிவினர் அவற்றைத் தமக்கு உரியதெனக்கூற முற்படும்போது இருவரிடையேயும் சச்சரவு நிகழ்வது வழக்கமாய் இருந்து வந்துள்ளது.”

M. Srinivasa Ayyangar ways
"The members of the two divisions struggle for certain honorary distinctions such as the use of the twelve
pillars in the marriage Pandal, the beating of five big drums oncertain ceremonious occassions, the ride on horse back or the carrying of a monkey flag. These privileges are claimed by the right hand castes on all public and festive occassions and whenever these privileges are exercised by a member of the left hand faction fight usually occurs'. (M. Srinivasa Ayyangar. Tamil studies Page 96.)

பள்ளர் இடங்கை, தாம் வலங்கைப் பிரிவினர் எனவும், அதனால் பள்ளரைவிடத் தாம் உயர்ந்த சாதியினர் எனவும் பறையர் பெருமை பாராட்டிவருவது குறிப்பிடத் தக்கது. சில வகுப்பினர், இடைக்காலத்தில் மன்னரிடம் சில உரிமைகள் கோரி அவற்றைப் பெற்றனர் என வரலாறு கூறும். இடையர் வீட்டின் இருபுறமும் வாயில் அமைக்கவும், வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசவும், நன்மைக்குச் சிவிகை ஏறவும், மேல் வளையிட்டுக் பாடை கட்டவும் அவற்றின் மேல் பச்சைப் பட்டு, புலியூர் பட்டு கட்டவும், பேரிகை கொட்டவும் உரிமை பெற்றதாக மதுரை மேலுர் கூற்றத்து கீரனூரில் கிடைத்துள்ள கல்வெட்டு கூறுகிறது (நாகசாமி, யாவரும் கேளிர் பக். 252). கம்மாளர்க்கு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இரட்டைச் சங்கு ஊதவும், நன்மை துன்மைக்குப் பேரிகை கொட்டவும், செருப்பு அணிந்து செல்லவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக் கொள்ளவும் உரிமை வழங்கியதாகத் தெரிகிறது (ARE 562 / 1898). (திருப்பேருர் புராண வசன சுருக்கம் பக். 66 - ல் கண்டபடி) கரிவலம்வந்த நல்லூர் கல்வெட்டின்படி (ARE 432 / 1914) பறையருக்கு நன்மைக்கு மூன்று கால் பந்தல், இருசிலம்பு (சீவலிபுத்தூர் கல்வெட்டுப்படி ஒரு சிலம்பு) ஒரு கொடுக்கு ஒத்த மாராப்பு, ஒரு பந்தம், கீழ்ப் பாவாடை, மஞ்சியில் தண்டியக் கொம்பில்லாத வீடு துன்மைக்குக் கட்டணமும் வழங்கப்பட்டிருக்கின்றன.
வெள்ளை யானை :
மன்னர்க்கு அக்காலத்தில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை இருந்தன என்பது
“தேரும் யானையும் குதிரையும் பிறவும் 
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப” 
(தொல் 5 பொருள் இயல் செ. 17)

என்ற மேற்கோளால் விளங்கும். இந்தப் படைகளை நடத்திச் சென்றவர் மன்னரின் பின்னோராகிய மள்ளர் - பள்ளர் குடியினரேயாம். எனவே மன்னர்க்குக் கூறப்பட்ட உரிமைகள் அவரது மரபினர்க்கும் உரித்தாயிற்று. வெள்ளையானை தேவேந்தினுடைய வாகனம் ஆகும். அதை ஐராவதம் என்றும் கூறுவர். நாட்டை ஆளும் மன்னனையும், அவன் அரண்மனையையும் மையமாகக் கொண்டே தெய்வமும், அதன் இருப்பிடமாகிய ஆலயமும் தோன்றியதென்பர். நாடாளும் மன்னனையும், தெய்வத்தையும் இறைவன் என வழங்குவது கவனத்திற்குரியது. “கோ” எனில் ஆரசன் “இல்” என்பது இருப்பிடம் ஆகக் கோயில் என்பது அரசனது இருப்பிடமாகிய அரண்மனையை முதலில் குறித்து பின்னர், அது தெய்வத்தின் உறைவிடமாகிய ஆலயத்தையும் குறிப்பதாயிற்று. மன்னன் தெய்வத்தின் பிரதிநிதி என்பது “திருவிடை மன்னனைக்கானில் திருமாலைக் கண்டேனே" (திருவாய்மொழி 4 - 48) என்பதிலிருந்து அறியற்பாலது. இங்கு "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" (குறள் 388) என்று வள்ளுவர் கூறுவதும் சிந்திக்கத்தக்கது. இதன் காரணமாகவே, மருதநில வேந்தனைப் பின்னாளில் இந்திரன், தேவேந்தின், புரந்தன், தேவர்வேந்தன் எனத் தெய்வீகப்படுத்தினர். வெள்ளையானை தேவேந்திரனுக்கு ஏற்பட்ட வாகனம் எனப் புராணங்கள் கூறும். மன்னர் தெய்வீகப்படுத்தப் பட்டதால், தேவேந்திரனுக்கு வாகனமாக ஏற்பட்ட வெள்ளை யானை அவருக்கும் (மன்னருக்கும்) உரித்தாயிற்று என்பர் ஆராய்ச்சியாளர். ஆக, மன்னருக்கு வெள்ளையானை உண்டு என்கும் போது, அது அவரது மரபினர்க்கும் உரித்தாயிற்று என்பது சொல்லாமலே விளங்கும்.

இம்மரபினரைத் தேவகன்னியின் மக்கள் எனவும், இவரைத் தேவலோகத்திலுள்ள தேவேந்திரனிடமிருந்து பாண்டியன் உக்கிரப் பெருவழுத்தி அழைத்துவந்தான் என்றும், கரிவலம் வந்த நல்லூர் (ARE 432 / 1914), சீவிலிபுத்தூர் கல்வெட்டுகள் (ARE 588 / 1926) கூறுவது ஈண்டு நினைவு கூறத்தக்கது. இவ்வாறு இந்தக் கல்வெட்டுகள் கூறுவது, இந்த மக்கள் அரச மரபினர் என்பதை உணர்த்தவே ஆம். இதைக் கருத்திற்கொண்டே, மேலேகண்ட இரு கல்வெட்டுகளிலும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இம்மக்களுக்கு வெள்ளை யானையையும் விருதாக வழங்கியதாகத் தெரிகிறது. சைவ சமயப்பெரியாருள் ஒருவராகிய “திருநாவுகரசர் வெள்ளானை வேண்டும் வரங்கொடுப்பாய் வெண்காடு மேவிய வேந்தனாரே” என இறைவனை வேண்டுவதைத் திருமறையில் காணத்தக்கது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில், புதுக்கோட்டை வட்டாரத்தில் பறையர் இம்மரபினர் உரிமைகள் தங்களுக்கு உண்டு என்று வாதாடிய போது, மற்றச் சிறப்புகளுடன் வெள்ளை யானையும் இம்மரபினர்க்கு (பள்ளர் - மள்ளர்) உண்டு எனத் தீர்ப்பாகியுள்ளது. காண்க. (IPS - 929) வெள்ளை யானை இம்மரபினர்க்கு ஏற்பட்டது என்பதை ஒட்டியே இம்மரபினர் இருக்கும் தென்மாவட்டங்களில் ஊர் தேர்த் திருவிழாக்களின் போது, இவரது தலைவர்களை அழைக்க கோயிலார் மேளதாளம், மாலை மரியாதை, வெண் வட்டக்குடை, பகற்பந்தம் இவற்றுடன் கோயில் யானையையும் அனுப்பி வைக்கும் பழக்கம் உள்ளது. இப்பழக்கம் அநேக இடங்களில் நின்று போனாலும், கோவை மாவட்டம், பேரூர் போன்ற ஒரு சில இடங்களிலுள்ள ஆலயங்களில் அது இன்னும் அமுலில் இருந்து வருவதாகத் தெரிகிறது. பாண்டிய நாட்டில் இம்மரபினர் திருமணவிழாவில் மாப்பிள்ளை அழைப்பின்போதும், பட்டினப்பிரவேசத்தின் போதும் மாப்பிள்ளையை “வெள்ளை யானை மீது ஏறிவரும் விருது பெற்ற பாண்டின்” என வாழ்த்துவது அறியத்தக்கது.

வெண் வட்டக் குடை :
வெண்வட்டக்குடை என்பது அரச சின்னங்களில் முக்கியமான ஒன்றாகும். வெண்வட்டக்குடை என்பதுவும், வெண்கொற்றக்குடை என்பதுவும் ஒன்றே. இது வெள்ளை யானைபோன்று தெய்வத்திற்கும், தெய்வத்தின் பிரதிநிதியாகிய மன்னர்க்கும், அவரது மரபினர்க்கும் உரியதாகும். சங்க இலக்கியங்களில் தமிழ் வேந்தர் வெண்கொற்றக் குடை உடையவர் என்று பேசப்படுவது
“கொற்ற நீள் குடைகொடித் தேர்ச்செழிப” 
(புறம் 24 - 23).

“கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்” 
(புறம் 367 / 14)

என்ற மேற்கோள்களால் அறியத்தக்கது. கோயில் உற்சவகாலத்தில் தெய்வத்தின் உருவச்சிலையை நகர் வீதிகளில் ஊர்வலமாய் எடுத்து வரும்போது, அதன் மீது வெண்வட்டக் குடை பிடித்து வருவதை அனைவரும் அறிவர். கோயில் விழா தேரோட்டம் மற்றும் நெல் அறுவடை உற்சவங்கள் நடைபெறுவதற்குக் கோயிலார் தேவேந்திர குலத்தார் தலைவர்களை அழைக்க, வெண்வட்டக்குடையையும் அனுப்புவது மரபாய் இருந்துவந்தது. ஆனால் இப்பழக்கம் காலப்போக்கில் சிறுகச்சிறுக அருகி வருகின்றது. எனினும் ஒரு சில இடங்களில் இவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவே தெரிகிறது.
(தொடரும்)

மூவேந்தர் யார்? பகுதி-29

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

பள்ளர் பாராட்டும் மன்னர்க்குரிய உரிமைகள் :
மன்னர்க்கு ஏற்பட்ட உரிமைகள் அவரது மரபினர்க்கும் உண்டு என்பதற்கு “மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப” (தொல் பொருள். அகத் 32 ) என்ற மேற் கோள் சான்றாகும் என்பதை நாம் அறிவோம். மன்னர் ஆட்சி நடத்துவதற்கும் படை, கொடி, குடை, முரசு, குதிரை, களிறு தேர், தார், முடி ஆகிய ஒன்பதும் உரியவை என்பதற்கு
படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறும் தேரும்

தாரு முடியும் நேர்வயன பிறவும் 
தெரிவு கொள் செங்கோல் அரசர்க் குரிய
(தொல்பொருள் மரபியல் - 72)

என்ற மேற்கோள் சான்றாகும். பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வழகப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளனவா? நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா, கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் (ARE 432 / 1914) பாண்டின் ஊக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை, வெண்வட்டக் குடை, கெராடி, பகற்பந்தம், பாவாடை, இரட்டைச் சிலம்பு, இரட்டைக் கொடுக்கு, நன்மைக்குப் பதினாறு கால் பந்தல், துன்மைக்கு இரண்டு தேர், பஞ்சவன்(பாண்டியன்) விருது, பதினெட்டு மேளம் வழங்கி அன்று தொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர். ஆனால் நாயக்கர் மதுரையில் இருந்து ஆட்சி செய்தபோது பறையர், பள்ளருக்கு (தேவேந்திர குலத்தாருக்கு) விரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். மூவேந்தரும் போரில் தோற்றதன் விளைவாய், அவரது மரபினராகிய தேவேந்திர குலத்தார் (மள்ளர் - பள்ளர்) நில உடைமை இழந்து தாழ்த்தப்பட்டுப் பண்ணை அடிமை நிலை எய்திய காலை, பறையர் இம்மரபினருக்கு ஏற்பட்டிருந்த உரிமைகள் தங்களுக்கு உண்டு எனப் பாவித்து அவற்றை நடத்திவர முற்பட்டனர்.
இதை அறிந்த தேவேந்திரகுலத்தார், பறையர் செய்கையை ஆட்சேபிக்க, இருசாரருக்கும் இடையே பகைமையும், கை கலப்பும் அடிக்கடி நிகழலானது. தேவேந்திர குலத்தார். பறையர் செய்கை பற்றி கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்து ஆட்சி செய்து வந்த திருமலை நாயக்க மன்னனிடம் முறையிட, அவன் பறையர், தேவேந்திர குலத்தார் இருதரப்பாரையும் வரவழைத்து விசாரித்து, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தேவேந்திர குலத்தாருக்கு வழங்கிய பழைய பட்டயம் பார்த்து, மேலே கண்ட உரிமைகள் எல்லாம் தேவேந்திர குலத்தாருக்கே உரியவை என்றும் பறையர் அவற்றை உபயோகிக்கக் கூடாது என்றும் தீர்ப்பளித்தான்.
மேலே கண்ட திருமலை நாயக்க மன்னன் தீர்ப்பு இராமநாதபுரம் மாவட்டம் சீவிலிபுத்துர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது காணலாம் (ARE 588 / 1926) தேவேந்திரகுலத்தாருக்கு வழங்கப்பட்ட மேலேகூறிய உரிமைகள், தமிழகத்தில் பார்ப்பனர் உட்பட இன்று உயர்சாதி எனப்பாராட்டும் வகுப்புகள் ஒன்றிற்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடைகாலத்தில் சோழர் ஆட்சியில் படைப்பிரிவுகள் வலங்கை, இடங்கை எனப் பிரிக்கப்பட்டிருந்ததாக வரலாறு. கூறும்_நாயக்கர் காலத்தில் இதில் மாற்றம் ஏற்பட்டதாகத தெரிகிறது. சோழர் காலத்தில் இடங்கையினர்தான் படையில் பிரதான இடம் வகித்தனர். என, K.A. நீலகண்ட சாஸ்திரி கூறுவார். அவர் கூறுவதாவது : இலங்கையில் பொலன்னுறுவாவில் இருக்கும் விஜயபாகுவின் கல்வெட்டில் இடங்கை வேளக்காரர் பற்றி குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளக்காரர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள் என்ற குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சரியான கருத்தாக தோன்ற வில்லை. மாறாக இவர்கள் நிரந்தரமான நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகர்களாகப் பணிபுரிந்தனர். பெயருக்கேற்ப வேளைவரும்போது இவர்கள் உயிரைக் கொடுத்து அரசைக் காப்பாற்றினர் என்று தான் கருதவேண்டும். சோழர்படையில் காலாட்படையின் பல பகுதிகளைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. கைக்கோளரைக் கொண்ட படைப்பிரிவு கைக்கோளர் பெரும்படை என்று அழைக்கப்பட்டது. கைக்கோளர் என்றால் நெசவாளரைக் குறிக்கும் சொல்லாகக் கொண்ட படைப்பிரிவைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருத்தமாகும். வில்லேந்திய வீரர்கள் வில்லிகள் என்றும், வாளேந்திய வீரர்கள் வாள் பெற்ற கைகோளர்கள் என்றும் குறிக்கப்படுகின்றனர் (K.A. நீலகண்டசாஸ்திரி - சோழர்கள் 1989 பக், 619 - 20).

இடங்கை வேளக்காரப் படையினர் என சோழர் காலத்தில் பேசப்படுபவர் பொதுவாய்த் தேவேந்திரகுலத்தாரே ஆவர். இன்று கைக்கோளர், செங்குந்தர் எனக் கூறுபவர் அதில் அடங்கார். இவர் படை மறவர் அன்று மாறாக இவர் நெசவுத் தொழில் செய்து வந்தவர். இவர்கள் விசய நகர மன்னர் ஆட்சியில் இந்து ஆலயங்களைச் சுற்றியுள்ள மடவிளாகங்களில் குடி அமர்த்தப்பட்டு ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களுக்குப் புதுத்துணிவழங்கப் பணிக்கப்பட்டவர் ஆவர். இவரது ஒவ்வொரு குடும்பத்திலிமிருந்தும் ஒரு பெண்ணை ஆலயங்களில் பணிசெய்யப் பொட்டுக்கட்டி தேவகணிகையாக நியமனம் செய்தனர். இவர் வழிவந்தோர் ஆலயங்களில் மேளம் வாசித்தல், கணக்கு எழுதல் மற்றும் பணிகள் செய்யப் பணிக்கப்பட்டனர். இன்று சேனைக் குடையான், சேனைத் தலைவர் என்று கூறிவரும் வகுப்பினரும் வேளக்காரப் படையில் ஈடுபட்டதாகக் தெரியவில்லை. இவர் நாயக்கர் குதிரைப்படைச் சேவகர் என்று கருத வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே குதிரைக்குப் புல் பொருக்கிப் போடும் பறையர் இருந்தனர்.

இவரும் குதிரைப் பராமரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இவர் பறையருள் ஒரு பிரிவினராகிய கோலியராய் இருக்கலாம். தெலுங்கரோடு வந்த குதிரைச் சேவகர் தம்மைச் சேனைக்குடையான், சேனைத் தலைவர் என்றும், பறையரில் குதிரைப் பராமரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட கோலியர் தம்மை இன்னாளில் வாதிரி என்றும் நெல்லை மாவட்டத்தில் அழைத்துக் கொள்கின்றனர் எனலாம்.

இவர் சோழர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தபோது குதிரை வீரரோடு குதிரை பராமரிப்புக்காகச் சோழநாட்டிலிருந்து குடியேற்றப் பட்டதாகக் கூறுவர் (நட்டாத்தியர் வரலாறு இரா. தேவ ஆசீர்வாதம் வேளாளர் யார்? பக். 192 - 93). இந்த இரு பிரிவினரும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சேனைக் குடையான் சேனைத் தலைவர் இல்லங்களில் பறையர் உணவு உட்கொள்வதில்லை. அவரது கால்நடைகள் இறந்தால் அவற்றைப் பறையர் தூக்குவதும் இல்லை. நாவிதரும் இவருக்கு முடிதிருத்துவது இல்லை. இவர் சிறிது காலத்திற்கு முன்னர் கொடிக்கால்காரர் என்றும், இலை வாணியர் என்றும் வழங்கி வந்தனர். பின்னாளில் குல உயர்வு கருதி சேனைக்குடையான், சேனைத் தலைவர் எனப் பெயரை மேற்கொண்டனர் [E. Thurston, Castes and Tribes of South India, Vol. V]
அக்காலத்தில் இந்த வலங்கை இடங்கை பிரிவினர்க்கு இடையே அரசு வழங்கிய உரிமைகள் உபயோகம் பற்றி அடிக்கடி சச்சரவுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு பிரிவினர் மற்றப் பிரிவினர்க்கு உரிய உரிமைகள் தங்களுக்கு உண்டு எனப் பாவித்து அவற்றை நடத்த எத்தனிக்கும்போது, இரு சாராருக்கும் இடையே கைகலப்புகள் ஏற்பட்டன. கரிவலம் வந்த நல்லூர், சீவிலிபுத்துர் ஆலயங்களிலுள்ள கல்வெட்டுகளில் பேசப்படும் தேவேந்திர குலத்தார் - பறையர் சச்சரவு இத்தகையதே.
(தொடரும்)

Wednesday, November 8, 2017

மூவேந்தர் யார்? பகுதி-28

மள்ளரிய தந்தை 
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

பள்ளர் தம்மை இந்திரகுலம், தேவேந்திரகுலம் என்று கூறிவருவது தாம் அரசமரபினர் என்பதினாலேயாம். ஏற்கெனவே கூறியபடி, தமிழ் மூவேந்தரும் ஏன்? தென் இந்தியாவிலுள்ள பண்டையமன்னர் பலரும் தேவேந்திர வல்லவன், தேவேந்திரச் சக்கரவர்த்தி, இந்திரன் என வழங்கி வந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழமன்னன் இராசராசனுக்கு தேவேந்திரச்சக்கரவர்த்தி, தேவேந்திர வர்மன் என்ற பட்டங்கள் உண்டு. முதற்பராந்தகனுக்கு தேவேந்திரன் ச(க்ர)வத்தி (ஸ்ரீ) வீர நாராயண ஸ்ரீபராந்தகத் தேவராகிய பரகேசரி வர்மன் ஸ்ரீமுகம் (ARE 1904) என்ற கல்வெட்டு சான்று பகரும். சோழமன்னன் தேவேந்திரன் என வழங்கினான் என்பது சென்னை கீழ்த்திசை நூலகத்தார் வெளியிட்டுள்ள மூன்று தமிழ் நாடகங்கள் என்ற நூலில் சோழ ராசேந்திரன் வந்தானே, தேவேந்திரரெனச் சோழ ராசேந்திரன் வந்தானே, என்று கண்டுள்ளதால் விளங்கும்(T. Chandrasehar MALT மூன்று தமிழ் நாடகங்கள் Madras Government Oriental Series)
சேர மன்னருக்கு “இந்திரன்” என்ற பட்டம் ஏற்பட்டிருந்ததாகக் கேரளோற்பத்தி, கேரளவிசாக மான்மியம், கொச்சின் சமத்தான 1875 - 76 ஆம் ஆண்டு நிருவாக அறிக்கை கூறுவதை அறிவோம்.(K.P. Padmanabha Menon History of Kerala) கங்கம், கலிங்கநாட்டு மன்னரும் தேவேந்திரக் சக்கரவர்த்தி தேவேந்திரவல்லவன் என்ற பட்டங்கள் பூண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த மன்னர் எல்லாம் இவ்வாறு வழங்கியதற்குக் காரணம், அவர் திராவிடராகிய மள்ளர் / மல்லர் குடியினர் என்பதனாலேயே எனலாம்.

தமிழ் வேந்தர் ஆட்சி காலத்தில் அவரது மரபினர் வாழ்ந்த பகுதிகள் தேவேந்திர வீதி, தேவேந்திரர் தெரு, தேவேந்திரர் குடியிருப்பு என வழங்கியதாக அறிகிறோம். ஆனால் தமிழ்வேந்தர் ஆட்சிமுடிவுற்று, அந்நியர் ஆட்சி ஏற்படவும், அவர் (தேவேந்திரர்) வாழ்ந்த இடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றில் அந்நியர் குடியேற்றப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிகிறது. இதற்குத் தஞ்சை நகரில் தேவேந்திரர் தெரு இருந்தது அழிக்கப்பட்டது என்பது தனிப்பாடல் திரட்டில் “போர் வேந்தர் போர் மாளப் போர் மாளுறை கழிந்த தேர் வேந்தர் தஞ்சைத் தெரு” எனக் கண்டுள்ளதால் அறியலாம்.
கோயம்புத்தூர் நகரமன்றத்திற்கு அருகாமையில் தேவேந்திரர் தெரு இருப்பதுவும் ஆதில் பள்ளர் குடியிருந்து வருவதுவும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. பாண்டிய நாட்டில் இம்மரபினர் குடியிருப்பதைத் தேவேந்திரர் தெரு என வழங்கி வருகின்றனர். இம்மரபினர்க்கெனத் “தேவேந்திர குல வேளாளர் சங்கம்” இருந்து வருவதும் அறியத்தக்கது. இவரது தொழில் மக்களாகிய குருக்கள், வண்ணார், நாவிதர் தங்களைத் “தேவேந்திரக் குருக்கள், தேவேந்திர வண்ணார், தேவேந்திர நாவிதர்” என்று வழங்கிய வருவதுவும் இவர்கள் பிற மக்களுக்குத் தொழில் செய்ய மறுப்பதுவும் குறிப்பிடத்தக்கது. நாயக்கர் ஆட்சி காலத்தில் இம்மரபினரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு தோன்றிய பள்ளு நூல்கள், பள்ளு நாடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பள்ளர் என்பதின் இயற்பெயருக்கு முன் பள் - பள்ளன் எனச் சேர்த்து வழங்கி வந்திருக்கின்றனர். இதற்கு அக்காலத்தியக் கல்வெட்டுகள் சான்றாக அமையும். (தென்னிந்திய கோயில் சாசனங்கள் பாகம் II. எண் 796D 2985) ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பகாலத்திலும் அப்பழக்கம் பின்பற்றப் பட்டு வரலானது எனத்தெரிகிறது. அதை நடை முறைப்படுத்த நிலக்கிரையம், ஒத்திப் பத்திரங்களில் இம்மரபினர் பெயர்களுக்கு முன் பள் பள்ளன் என்ற அடை மொழிகளும் சேர்க்கப்பட்டு (பள் - இராமன், பள் - முருகன்) வந்திருக்கின்றன. இப்பழக்கத்தை இம்மரபினர் ஆட்சேபித்து ஆங்கிலேய அரசுக்கு முறையிடப் பள் - பள்ளன் என்ற அடை மொழிகளைப் பத்திரங்களில் குறிப்பிடும் வழக்கம் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதில் தேவேந்திர குலம், இந்திர குலம் எனப் பதிவு செய்ய ஆங்கில அரசு அணை பிறப்பித்ததாகத் தெரிகிறது.
இவர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மற்ற மரபினர்க்கு இல்லாமல் இவருக்குமட்டும் தனியாய்க் குருக்கள், வண்ணார், நாவிதர் இருந்து வருவது இவரது தனித் தன்மைக்கு சான்றாக அமையும். மேலும் இம்மரபினரை அண்டிப்பிச்சை எடுப்பவர்த் தம்மை "தேவேந்திரப் பிச்சைக்காரன்” என்றும் இவர் மத்தியில் கூத்து மூலம் பிழைப்பு நடத்தி வருபவர் தம்மைத் “தேவேந்திரக் கூத்தாடி” என்றும் இவரது நன்மை துன்மைக்கு மேளம் வாசிப்பவர் “தம்மைத் தேவேந்திர கொட்டுக்காரர்” என வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது (F.R. Hemingsway Trichirapalli Dt, Gazetteer P.129) சாதி இந்துக்கள் என இன்று வழங்குவோர் பல்வேறு பிரிவினரைச் சேர்ந்தவர் ஆவார். அவ்வாரிருந்தும் ஏற்கனவே கூறியபடி இவர்கள் சாணார் (நாடார்) கொங்கு வேளாளர் (கவுண்டர்) தவிர்த்து மற்ற எவருக்கும் தனியாய் வண்ணார், நாவிதர் இன்றி அனைவருக்கும் பொதுவாய் ஒரே வண்ணார், நாவிதர் இருந்து வருவது இவரிடம் தனித் தன்மை இல்லாததைக் காட்டுகின்றது. மேலும் இவர்களுக்கு நன்மை துன்மைச்சடங்குகள் நடத்திவைப்பவர் தெலுங்குப் பார்ப்பனப் புரோகிதர் ஆவர். இவை எல்லாம் இவர் நாயக்கர் ஆட்சியில் தோற்றமும், ஏற்றமும் பெற்றவர் என்பதை எடுத்துக் காட்டுவதியுள்ளது.
பள்ளர் குடியிருப்பு அமைப்பு :
பள்ளர் குடியிருப்பு பொதுவாய் ஊர்நத்தத்தின் கீழ் பகுதியிலும், சாதி இந்துக்கள் என்போர் குடியிருப்பு அதன் மேல் பகுதியிலும் அமைந்திருப்பதை யாவரும் அறிவர். இதன் காரணம் யாது? சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பதால் அது உயர்வைக் குறிக்கும் என்பர். பண்டைய நாளில் மருதநிலத்தில் மட்டும் ஊர்கள். நகரங்கள் தோன்றியதாகவும், காட்டுவாணர் மற்றும் வேற்றுநாட்டினர் தாக்குதல், படையெடுப்பு இவற்றிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள இங்குள்ள மக்கள் ஊர் நகரங்களைச் சுற்றிக்கோட்டைகள் எழுப்பியதாகவும் இது பற்றித் தொல்காப்பியம் “உழிஞைதானே மருதத்துப்புறனே” என்று கூறுவதாகவும் ஏற்கனவே கண்டோம். கோட்டைகளின் பிரதான நுழை வாயில்களைப் பொதுவாய் அவற்றின் கீழ்புறமே அமைப்பதும் மாற்றார் கோட்டைகளைப் பிடிப்பதற்கு அதன் வாயிற்புறமிருந்தே அவற்றை தாக்குவதும் வழக்கம். எனவே கோட்டைப்பாதுகாப்புக்காக அதன்வாயிற்புறமாகிய கீழ் புறத்திலேயே மருதநிலமக்களாகிய மள்ளர் மல்லர் குடி அமர்ந்தனர். இவர் ஏருக்கு உழவர்; போருக்கு மறவர் என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. கோட்டையின் மேல் பகுதியில் பல்வேறு தொழில் மக்கள் குடியிருந்தனர்.
சூரியன் உதிக்கும் கீழ்திசை இந்திரனுக்கு உரியது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பள்ளர் இந்திரகுலம், தேவேந்திரகுலம் என்பதால் இந்திரனுக்கு ஏற்பட்ட கீழ்திசையை இவர்கள் தங்கள் உறை விடமாய்க் கொண்டனர். அதன் காரணமாகவே ஊர்ப்புறங்களில் இவர் நத்தத்தின் கீழ்பகுதியில் குடிஇருந்து வருகின்றனர். அதோடு பண்டைய நாளில் இவர் சூரிய வழிபாடுடையவர் எனத் தெரிகிறது. இதற்குச் சிலப்பதிகாரம் சான்று பகரும். கி.பி.17 ஆம் நூற்றாண்டில் பஞ்சாபில் உள்ள மல்தான் (Multan) என்ற நகரில் சூரியனுக்கு பழைய கோயில் ஒன்று இருந்ததென்றும், மல்தான் என்னும் இடம் மல்லர் அல்லது மள்ளர் வாழ் இடமாய் இருந்ததாகவும் மள்ளர் என்பது இன்று பள்ளர் என வழங்குவதாகவும் பண்டிதசவரிராயர் கூறியுள்ளது நாம் அறிந்ததுவே. (ந.சி. கந்தையா பிள்ளை. தமிழ் சரித்திரம், பக். 206) ஏற்கெனவே கூறியபடி, இவர் சூரிய வழிபாடு உடையவர் என்பதால் தமது குடியிருப்புகளை நத்தத்தின் கீழ்பகுதியில் அமைந்துள்ளனர் என்பது தேற்றம். பொதுவாய் எல்லா ஆலயங்களும் கிழக்கு நோக்கியே அமைத்திருப்பதை நாம் அறிவோம். இதுவும் கிழக்குத் திசையே மற்ற எல்லாத் திசைகளையும் விட உயர்வானது என்பதை எடுத்துக் காட்டுவதாயுள்ளது. கோட்டைகள் அமைப்பு பற்றி கெளதல்யர் அர்த்த சாஸ்திரம் (தமிழாக்கம்) பக். 150 -ல் விரிவாய்ப் பேசப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகப் பள்ளர் தாம் தேவேந்திரகுலத்தார் என்பதற்கு அடையாளமாய் நத்தத்தில் இந்திரனுக்கு உரிய கிழக்கு திசையில் தமது குடியிருப்பை அமைத்துள்ளனர் என நாம் முடிவு கொள்ளலாம்.
(தொடரும்)