மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
ஆசிரியரின் முன்னுரை
(1977 - ல் வெளியான மூவேந்தர் யார்?)
தமிழகத்தை இடைக்காலம் வரை சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் ஆண்டனர் என்பது யாவரும் அறிந்ததே. இவர் யார்? இவர் மரபினர் தமிழகத்தில் இன்று இருக்கின்றனரா? இதுவரை தமிழக வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் வரலாறு, தமிழ் ஆராய்ச்சி, தமிழர் பண்பாடு, நாகரிகம், சேரர் வரலாறு, சோழர் வரலாறு, பாண்டிய வரலாறு எனப் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவைகள் சிலவற்றில் மூவேந்தரை முறையே வானவன், திரையன், மாறன் எனவும், நெருப்பு, சூரிய, சந்திரகுலம் எனவும் பலவாறு கண்டிருக்கின்றனர். தமிழகத்திலும் சேர நாடாகிய கேரளாவிலும், பல பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதுவும், அவற்றிலிருந்து பலர் வரலாறு, தமிழ் இலக்கியம் இவற்றில் ஏதாவது ஒரு பொருள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்று வருவதுவும் கண்கூடு. பல்கலைக்கழகங்களை விடுத்து, தமிழகத்தில் அனேகப் புலவர் கல்லூரிகளும், பெரும் தமிழ்ப்புலவர் பலரும் இருந்து வருவதுவும் நாடறியும். ஆனால் இவரில் ஒருவரேனும், மூவேந்தர் மரபு பற்றி முறையான ஆய்வு மேற்கொள்ள இதுவரை முன்வராதது வியப்பைத் தருகின்றது.
தமிழ் வேந்தர் கி.பி. 16 - ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கோலோச்சியிருக்கின்றனர். இம்மன்னர் தனி மனிதர் அல்ல. இவர் ஒரு பழம்பெரும் குடியைச் சேர்ந்தவர். தமிழகத்தில் விசயநகரப் பேரரசோடு. நடந்த இடைவிடாத போர்களில் இவரும், பெரும்பாலான இவரது மரபினரும் மடிந்திருப்பர்; போர்களில் ஈடுபடாதவரில் பலரும் மாற்றானுக்கு அடிமைப்பட்டு வாழ்வதைவிட, உயிர் விடுவதுமேல் எனக் கருதித் தங்களையும், தங்கள் குடும்பங்களையும் மாய்த்து மண்ணோடு மண்ணாய் மறைந்திருப்பர். எனினும் இம்மரபினர் முற்றிலும் தடமற அழிந்திருப்பர் எனக் கருத முடியாது. இவரில் ஒரு சாரார் எங்ஙணமாவது எஞ்சி, ஏதோ ஒரு மரபுப்பெயருடன் இன்று நாட்டில் உலவி வர வேண்டும். புதுக்கோட்டைத் தொண்டைமான் யார்? எனில் வடுகன்; இராமநாதபுரம் சேதுபதியார்? எனில் மறவர் எனக் கூறுவது நாம் அறிந்ததே. அதே போன்று, மூவேந்தர் யார்? எனில் அவருக்கு ஒரு மரபு கூறுவேண்டும். மாறாக அவர் யாரோ? எவ்ரோ? என்று பதிலிறுப்பது உண்மையை மூடிமறைப்பதாக அமையும். இவர் மரபு திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது என்பது மட்டும் உறுதி. வரலாற்றை மறைப்பது முறைகேடானது. விவேகமற்றது. பொய்யை மெய்யாகத் திரித்துக் கூறும் பழக்கம் இடைக்காலத்திலிருந்து நாட்டில் மலிந்து வந்திருக்கின்றது. அன்று நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று முழக்கமிட்ட புலவர் எங்கே? இன்று பொய் ஒன்று தவிர வேறொன்றும் அறியோம் பராபரமே என்று கூறும் மனோபாவமுள்ள புலவர் குழாம் எங்கே? தமிழகம் அன்னியர் ஆக்கிரமிப்பில் சிக்கியதன் விளைவாக, இங்குள்ள பல்வேறு பிரிவினரும், ஆரியப் பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பெரிதும் தழுவி வந்திருக்கின்றனர். இக்காலத்தில் மனிதரை மனிதர் வஞ்சித்து ஏய்த்துப் பிழைக்கும் பழக்கம் வளர்ந்து வந்திருக்கின்றது. படிக்காதவரைவிடப் படித்தவரில் பெரும்பாலோர் பண்பாட்டில் கீழ்நிலையில் இருக்கின்றனர். இப்போக்கில் மாறுதல் வேண்டும் என்பதைச் சான்றோர் பலரும் விரும்புவர் என்பதில் ஐயம். பண்டையநாளில் தமிழர், யாதும் ஊரே! யாவருங்கேளிர்' எனவும் தனக்கென்று வாழாப் பிறர்க்கென வாழும் தகைமையாளர். என வாழ்ந்தனர் எனவும் மேடைகளில் பலரும் நாள்தோறும் முழக்கமிட்டு வருவதை நாடறியும். அவ்வாறு உயர்ந்த சீரிய வாழ்க்கை வாழ்ந்து காட்டிய பெருங்குடிமக்களின் வரலாற்றை வெளிப்படுத்தினால், அது ஓரளவிற்கேனும் நாட்டிற்கு நலம் பயக்கும் என முடிவு கொண்டு, அம்முயற்சியில் பலகாலம் என்னை ஈடுபடுத்தி வரலானேன். அதில் நான் எவ்வாறு வெற்றிகண்டேன். என்பது பற்றி அடியிற் கண்டவரிகளை முன்னுரையாகப் படைக்கலானேன்.
தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு இவற்றிற்கு உறைவிடமாய் விளங்கியவர் உழவர். அவர் பண்டைய நாளில் ஏர்த்தொழிலுடன் போர்த்தொழிலும் ஆற்றி வந்தனர். அதன் காரணமாய் ஏரும் போரும் இணைபிரியாது என்ற தொடர்மொழி நாட்டில் வழக்கில் வந்தது என்பதை அறியலானேன். வள்ளுவர், உழுவான் உலகத்தார்க்கு ஆணி, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டுபின் செல்பவர் என்று கூறியிருப்பது மேலே கண்டகருத்து முற்றிலும் உண்மை என்பதைப் புலப்படுத்துவது காண்க. ஆகவே, தமிழகத்தை இடைக்காலம் வரை ஆட்சி செய்த தமிழ் மரபினர் உழவராக மட்டுமின்றிப் போர் மறவராகவும் செயல்பட்டனர் என்பது வெள்ளிடைமலை. இந்த இரு தொழில் செய்த மக்கள் இன்றையப்ப ல்வேறு பிரிவினருள் யாராய் இருப்பர் என்ற கேள்வி என்னை ஆட்கொண்டது.
உழவரில் சிறந்தவர் வயல் உழவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் ஆற்றோரங்களிலும், மற்றும் நீர்நிலைப் பகுதியிலுமே முக்கியமாய் வதியவேண்டும் என்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓடும் காவிரி, அமராவதி, பவானி, வைகை, தாம்பிரபரணி முதலிய ஆறுகளின் கரை மருங்குகளில் வயல் உழவில் முக்கியமாய் ஈடுபடுபவர் யார்? என்பது பற்றி அறிய முனைந்தேன். வயல் உழவில் ஈடுபடுபவரில் பெரும்பாலோர் பள்ளர், குடும்பர், தேவேந்திரகுலத்தார், காலாடி, பண்ணாடி என வழங்கும் மக்கள் பிரிவினர் எனவும், இவர் ஏர்த்தொழில் மட்டுமன்றிப் போர்த்தொழிலும் ஆற்றக் கூடிய வலு உள்ளவராகக் காணப்படுவதுவும், தங்களைத் தேவேந்திர குல வேளாளர் என உயர்வாகக் கூறிவருவதுடன், மற்ற மரபினர் போலன்றித்தனியாய்க் குருக்கள், நாவிதர், வண்ணார் உடையவராய் ஊரின் முக்கிய பகுதியாகிய கீழ்புறத்தில் குடியிருந்தும், தமக்கென்று தனியாய்ப் பஞ்சாய்த்து அமைப்புகள் உடையவராகவும், மற்ற மரபினரிடம் காணப்படாத தனித்தன்மை உடையவராகவும் இருந்துவருவதையும் தெரியலானேன். இவர் பராக்கிரம சாலிகள் என்பதையும் ஒருவரும் இவருடன் நேருக்கு நேர் சண்டையிட்டு இவரை வெற்றி பெறமுடியாது என்பதையும் உணர்த்தப் “பள்ளனையும் இரும்பையும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்” என்ற பழமொழி நாட்டில் நிலவிவருவதுவும். மாவட்டக் குறிப்புகளில், இவர் தாங்கள் தேவேந்திரன் வழி வந்தவர் என்றும், மற்ற எல்லா மரபினரையும் விட உயர்ந்தவர் என்றும் உரிமை பாராட்டி வருவதுவும், இவர் பற்றி மேலும் ஆராய என்னைத் தூண்டியது. “ஏழையின் குரல் அம்பலம் ஏறாது” என்பதற்கொப்ப, இவரது ஏழ்மை காரணமாய், இவரது கூற்றை மாவட்டக் குறிப்பு ஆசிரியர் ஏற்க மறுத்து, இவரை வெள்ளாளரின் பண்ணை அடிமைகள் எனக்கூறி வந்துள்ளனர். தென் இந்திய குலங்களும் குடிகளும் (Castes and tribes of Southern india) என்ற விரிவான அரிய நூலைப்படைத்த எட்கர் தர்ஸ்டன், 1891 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கெடுப்புக் கண்காணிப்பாளர் H.A. ஸ்டுவர்ட் கூறிய கருத்து அடிப்படையில் இவரைப் பல்லவ மரபினராய் இருக்கலாம் என்று கூறுகின்றார்.
பல்லவர் நாடு வடக்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. தேவேந்திர குலத்தார் தென்மாவட்டங்களிலேயே காணப்படுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பள்ளு நூல்கள் இயற்றப் பட்டுள்ளதையும் அவை பெரும்பாலும் தென்மாவட்டங்களிலேயே தோற்றம்பெற்றன என்பதையும் அறியலானேன். எனவே பள்ளு நூல்கள் மீது கவனம் செலுத்தலானேன். இந்த நூல்களைப் பள்ளேசல்கள் என்றும் கூறுவர். தமிழகத்திலுள்ள வேறு ஒரு மரபினரையும் இழிவு படுத்த நூல்கள் புனையப்படாத போது, உழவுத்தொழில் செய்து வரும் ஒரு சமுதாயத்தை மட்டும் இழித்தும், பழித்தும் நூல்கள் பெருமளவில் தோன்றியது வியப்பை உண்டாக்கியது. பண்டையத் தமிழ் இலக்கியங்களில் உழவர் உயர்குடியினராகக் காட்சி தரும் போது, பள்ளேசல்களில் அவர் கீழ் சாதியாகவும், கொத்தடிமைகளாகவும் சித்திரிக்கப்படுவதைக் கண்டேன். இவர் இந்த இழிநிலை எய்யக் காரணம் என்ன? என்பது பற்றி ஆராய்ந்ததில், பள்ளேசல்கள் தோன்றியது நாயக்கர், மராட்டியர் தமிழகத்தை ஆட்சி செய்த காலப்பகுதி எனத் தெரிந்தது. ஆக நாயக்கர், மராட்டியர் தமிழர் அல்ல; அவர் வேற்று நாட்டினர். தமிழ் வேந்தர் ஆட்சியில் உயர் நிலையில் இருந்த உழவர் சமூகம், இவரது ஆட்சியில் கொத்தடிமை நிலை எய்தினர் என உணரலானேன். இம்மாற்றம் பற்றிச் சிந்தித்ததில், ஒருவேளை இவர் தமிழ்வேந்தர் மரபினர் என்பதால் அன்னியர் ஆட்சியில் அடிமை நிலை எய்தினரா? என்ற ஐயப்பாடு என் உள்ளத்தில் எழுந்தது. மேலும் பள்ளேசல்களில் இம்மரபினர் பள்ளர், பள்ளர் என்ற மள்ளர், தேவப்பள்ளர், தேவேந்திரப்பள்ளர், புரந்தரன் குலம் என்றும் மூவேந்தர் வேண்டுகோளின் மேல், இவரது குல முதல்வன் தேவலோகம் சென்று. அங்கிருத்து நெற்பயிரைக்கொண்டுவந்து தமிழகத்தில் பயிர் செய்தான் என்றும் குறிப்புகள் ஆங்காங்கு காணப்படுவதை அறியலானேன். மள்ளர் யார்? என்பது பற்றி நிகண்டுகள், சங்க இலக்கியங்கள் இவற்றைத் துருவிப்பார்க்கும் போது அவர் உழவர் மட்டுமின்றிப் போர் மறவராகி மன்னர் ஏன்? திருமால் முருகன் இவரும் மள்ள! மல்ல! என விளிக்கிப் பட்டிருப்பதையும் மள்ளர் மருதநிலத்தலை மக்கள் எனவும், இவர் தெய்வம் வேந்தன் எனவும், வேந்தன், தேவர் வேந்தன், இந்திரன், தேவேந்திரன், புரந்தரன், கரியவன் என வழங்கியதாகவும் ஆகப் பள்ளர் மருதநிலத் தலைமக்களாகிய மள்ளர் எனவும், அதனால் இவர் தம்மை இந்திரகுலம், தேவேந்திரகுலம், தேவேந்திரகுல வேளாளர் என வழங்கி வருகின்றனர் எனவும் தெளிவு பெறலானேன். கல்வெட்டுக்களை
ஆராய்ந்ததில் இவருக்கு மன்னருக்குரிய விருதுகளும் ஏற்பட்டிருந்தது என்பது வெளிப்பட்டது. ஆக இது பல காரணங்களால், தேவேந்திர குலத்தார் தான் மூவேந்த மரபினர் எனவும். தமிழ் வேந்தர் வீழ்ச்சியுற்றபின், இவர் அடக்கி ஒடுக்கப்பட்டு பள்ளர், கீழ்சாதி என இழிவுபடுத்தப்பட்டனர் எனவும் முடிவு கொண்டு, எனது கருத்தை 'பள்ளர் அல்ல, மள்ளர்; ஆம் மன்னர், மூவேந்தர் நீரே! சேரன் நீரே! சோழன் நீரே! பாண்டியன் நீரே! சேரன் செங்குட்டுவன்நீரே! நெடுஞ்செழிய்ன் நீரே! கரிகாலன் நீரே! ஏன்? இராசராசசோழனும் நீரே! வாழ்க மூவேந்தர் வாழிய நற்றமிழர் என வரைந்து எனக்குத் தெரிந்த தமிழறிஞர்க்கும், நண்பர்க்கும் தெரிவிக்கலானேன். அவருள் தூத்துக்குடியில், தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராய்ப் பணியாற்றி வந்த திரு. G.M. வேதநாயகம்.B.A., B.T, அவர்கள் மட்டும் எனது கருத்துக்கு உடன்பட்டார். எனது கருத்து பற்றி நன்கு தெளிவுபெறும் பொருட்டு, தமிழ் அறிஞர், மற்றும் வரலாற்றுப் பேராசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், கலைஞர், கவிஞர், மடாதிபதிகள் முதலியோருக்கு விளக்கமாய் எழுதினேன். ஏன்? தமிழக அரசுக்கும் இதை வெளிப்படுத்தினேன். ஒரு சில தமிழறிஞரிடம் நேரில் தொடர்பு கொண்டு தெளிவு பெறவும் முயன்றேன். ஆனால் அவரிடமிருந்து தெளிவு பெறமுடியவில்லை மாறாக என்னைக் குழப்பிவிடவே அவர் பெரிதும் முயன்றனர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. நாயக்கர் காலத்தில் தோன்றிய முக்கூடற் பள்ளின் உரையாசிரியரில் ஒருவராகிய பேராசிரியர் டாக்டர். நா. சேதுரகுநாதன் அவர்களுக்கு தமிழக இடைக்கால வரலாற்று நுட்பங்கள் பள்ளு நூல்களில் பொதிந்து கிடப்பதால், அவற்றை ஆய்வு செய்ய நான் விளைவதாகவும், பள்ளு நூல்கள் கிடைக்கும் இடம் பற்றித் தெரிவிக்கும்படியும் எழுதினேன். ஆனால் இப்பேராசிரியர் நாயக்கருக்கும், பள்ளு நூல்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும், எனது நோக்கு தவறு என்றும், ஆய்வானது சாதியை வளர்க்கும் என்றும் பலவாறு என்னைக் கடிந்து எழுதினார். நான் தமிழ் வரலாறு திரையிடப்பட்டிருக்கிறதென்றும், அத்திரை நீக்கப்பட்டாலொழிய நாட்டிலிருந்து சாதிமறையாதென்றும், உண்மையை மூடிமறைப்பது முறை கேடானது என்றும் எனது நிலையை விளக்கிப்பதில் இறுத்தேன். பேராசிரியர் நான்மேற்கொண்ட கருத்தை ஏற்கும் முகத்தான் என்னுடைய மடலுக்குப்பதில் இறுக்கவில்லை.
ஆய்வு நிமித்தம் தமிழகத்திலுள்ள பல முக்கியமான ஆலயங்களுக்கும், மற்றம் ஊர்களுக்கும் செல்ல நேரிட்டது. நெல்லை மாவட்டம் செங்கோட்டைப் பகுதிவாழ் தேவேந்திர குலத்தார் கிரயம் ஒத்திப் பத்திரங்களில் தங்களை பாண்டியர் என்று பதிந்து வருவதை நேரில் பார்வையிட்டேன். பாண்டிய நாட்டிலுள்ள முக்கியமான ஆலயங்களில் பணியாற்றும் குருத்தளை விசாரித்ததில் அவர் மத்தியில் தேவேந்திர குலத்தார் மூவேந்தர் மரபு என்பது செவிவழிச் செய்தியாக நிலவி வருவது தெரியவந்தது. மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் குருக்களில் ஒருவரிடம், தேவேந்திர குலத்தார் தானே பாண்டியர்? என வினவ, அதற்கு அவர், ஆராய்ந்து பார்த்தால் அப்படித்தான் படுது என்று பதிலிறுத்தார். சங்கரன்கோயில் குருக்கள் ஒருவர் இந்த உண்மையை ஒப்புக்கொண்டதுடன் அவர்வெளிவரக்காலம் வரும் என மனம் வெதும்பிக் கூறினார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திலுள்ள குருக்களும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டனர். இங்குள்ள ஒரு பட்டர் உண்மையை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் வரமாட்டார்கள் என வலிந்து கூறினார். ஏன்? என்று வினவ, தங்களைத் தேவேந்திர குலம், தேவேந்திர குல வேளாளர் என்று உயர்வாகக் கூறி வருகின்றனர். ஆனால் எங்கள் முன்னோர் தான் இந்த நாட்டை ஆண்டனர் என்று கூற இதுவரை ஒருவரும் முன்வரவில்லையே, என்று அங்கலாய்த்தார்.
திருச்செந்துர் ஆலயத்தில் உள்ள குருக்கள் அனைவருக்கும் இது விபரம் தெரிந்திருப்பதை அறியலானேன். அவரில் ஒரு சிலர் தேவேந்திரக் குலத்தாரைக் குறிப்பிட்டு, படிக்கிறார்கள்; பட்டம் பெறுகிறார்கள்; சிலர் உயர் பதவியும் வகிக்கின்றனர்; இன்னும் சிலர் வசதியாகவும் இல்லாமல் இல்லை. ஆனால் இவரில் ஒருவரும் தங்கள் முன்னோர்தான் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர் என்று கூற இதுவரை முன் வரக்காணோமே, இவர்கள் ஒழிந்து மறைந்து வாழ்கிறார்கள். என்றைக்கு இவர்கள் இந்த உண்மையை வெளிப்படுத்த முன்வருகிறார்களோ, அன்றுதான் இவர்களுக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கும் சேமம் பிறக்கும் என்றனர். பாண்டிய நாட்டிலுள்ள ஆலயக்குருக்கள் மட்டுமின்றி விபரம் தெரிந்த பார்ப்பனருக்கும், மற்றும் பல்வேறு பிரிவினருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கின்றது என்பதை எனது சுற்றுப்பயணங்களின்போது அறியலானேன். தென்பாண்டிநாட்டின்மீது பாண்டியர் நீண்டகாலம் ஆட்சி செய்தது கவனத்திற்குரியது.
தஞ்சை,
25 – 6 - 1977.
இரா. தேவஆசிர்வாதம்.
(தொடரும்)
No comments:
Post a Comment