மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
திராவிடர் யார்?
திராவிடர் என்பவர் இன்றைய வேளாளர், வெள்ளாளர் அல்ல என்றும், அவர் மருதநில உழவர் குடியினராய்த்தான் இருக்கவேண்டும் என்றும் ஏற்கனவே கொண்ட முடிவை வாசகர் அறிவர். அந்த உழவர்குடி இன்றையப் பல்வேறு மக்கள் பிரிவினருள் யாராய் இருப்பர் என்பதை அறிய சங்க காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த பல்வேறு மக்கள் பற்றி அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எனவே ஈண்டு சங்ககால மக்கள் பற்றி ஆராய்வோம்.
சங்ககால மக்கள் பிரிவு
சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் பற்றி அறியத் துணை புரிவது சங்க இலக்கியங்கள் ஆகும். இவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் தொல்காப்பியம் ஆகும். இக்காலத்தில் மக்கள் வாழ்ந்த நிலத்தை இயற்கை அமைப்புக்குத் தக்கவாறு நாற்பெரும் பிரிவுகளாய்ப் பிரித்திருந்தனர். அந்நாணிலப் பிரிவுகள் மலையும், மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், காடும், காடு சார்ந்த இடமும் முல்லை எனவும், ஆறும், ஆறு சார்ந்த இடமும் மருதம் எனவும் கடலும், கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனவும் வழங்கின. இந்நானிலப்பாகுபாடு பற்றித் தொல்காப்பியம் கூறுவதாவது:
“மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும்
வருணன் மேயப் பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல் பொருள் அகத் 5)
இந்த நானில மக்களின் தொழில், பழக்க வழக்கம், வாழ்க்கை முறை பற்றி நிகண்டுகள் கூறுவதைக் காண்போம்.
குறிஞ்சி ; இது மலையும், மலையைச் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்தவர் குறவர், கானவர், குன்றவர், புனைவர், இறவுளர், கொடிச்சியர், குறத்தியர் ஆவர். இவர்கள் தேன் எடுத்தும், கிழங்குகள் அகழ்ந்தும், மரங்களிலுள்ள காய்கனிகள், மூங்கிலரிசி மற்றும் மலைகளிலுள்ள காட்டு விலங்குகள், பறவைகள் இவற்றை வேட்டையாடி, அவற்றின் ஊன் முதலியவற்றை உணவாகக் கொண்டனர். இவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் தோலையும், மரங்களின் பட்டைகளையும், தழைகளையும் ஆடையாக உபயோ கித்தனர். நாளடைவில் இவர்கள் சற்று திருந்தி மலைச்சரிவுகளில் தன்னிச்சையாய் விளையும் தினையையும், ஐவன நெல்லையும் உணவாகக் கொண்டனர். பின்னர் இவர்கள் நிலத்தை வெட்டிக் கொத்தி ஐவன நெல்லையும், தினையையும் விதைத்துப் பயிர் செய்யக் கற்றனர். தினைப் புலன்களை மிருகங்கள், பறவைகள் சேதப்படுத்தாமல் இருக்கப் பரண்கள் அமைத்து கற்களைக் கவண்களில் செலுத்தி அவற்றை விரட்டுவர். இவர்கள் வாழ்க்கை திருந்தாத வாழ்க்கையே. இவர்களது குடியிருப்பு சிறுகுடி, குறிச்சி என வழங்கின. இவர்கள் வேட்டை மூலம் பெற்ற மான் இறைச்சியை மருதநிலத்து உழவர் குடியில் கொண்டு போய் நெல்லுக்குப் பண்டமாற்றுவர். (புறம் 33 – 2 - 8) பால் எருமைகளையும், பசுக்களையும், கடாறிக் கன்றுகளையும் ஆயருக்கு விற்பர். (பெரும்பா 165 - 166) இவர்கள் முருகனைத் தெய்வமாக வழிபட்டனர். இந்நிலத்திற்குரிய தலை மக்கள் கானகநாடன், பொருப்பன், பொருநன், ஆனை மலையன், வெற்பன், சிலம்பன் ஆவர்.
முல்லை: குறிஞ்சி நிலத்திற்கும், மருத நிலத்திற்கும் இடைப்பட்ட காடுகள், குன்றுகள் நிறைந்த பகுதி முல்லை எனப்பட்டது. இங்கு ஆநிரைகள் வளர்ப்பதற்கு ஏற்ற புல் வெளிகள் நிறைந்திருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் அண்டர், இடையர், ஆயர், கோவலர், பொதுவர், ஆய்ச்சியர், தொதுவியர், பொதுவியர், குடத்தியர் ஆவர். இவர்கள் கால்நடைகளைப் பேணியும், பால், தயிர், நெய், ஆநிரைகளின் ஊண் மற்றும் பால், தயிர், நெய், இவற்றிற்கு பண்டமாற்றிய நெல், வரகு, சாமை, முதிரை முதலிய தானியங்கள் இவர்களுக்கு உணவாகப் பயன்பட்டன. (புறம் 33 – 2 - 3) (பெரும்பா 155 - 166) இங்குள்ள குடியிருப்பு பாடி, சேரி, பள்ளி எனப்பட்டன. இம்மக்கள் திருமாலைத் தெய்வமாக வழிபட்டனர். குறிஞ்சி நிலவாழ் மக்களைவிட இவர் திருந்திய வாழ்க்கையுடையவர். இங்குள்ள தலைமக்கள் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன், கானக நாடன் என வழங்கினர்.
மருதம்: இது ஆறுகள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள சமவெளிப்பகுதியாகும். இவை கழனிகள், தோப்புகள் நிறைந்து வளமுள்ளதாயிருந்தது. இங்கு வாழ்ந்தவர் களமர், தொழுவர், மள்ளர், கம்பளர், வினைஞர், உழவர், கடைஞர், இளைஞர், உழத்தியர், கடைசியர், ஆற்றுக்காலாட்டியர் ஆவர். இவர்கள் நீரின் உபயோகத்தை நன்கு அறிந்தவர். தன்னிச்சையாய் ஓடிய ஆறுகளுக்குக் கரைகள் கண்டு, அவைகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி அவற்றின் குறுக்கே அணைகள் அமைத்து அவைகளில் நீரைத் தேக்கி கால்வாய்கள் மூலம் நீரை இவர்கள் வெட்டிய ஏரி, குளங்கள் இவற்றில் நிரப்பி, நிலத்தை வெட்டிக் கொத்தி சமப்படுத்தி வரப்புகள் அமைத்து வயல்களாக்கி , எருதுகளைப் பூட்டிய ஏர்களைக் கொண்டு அவற்றை உழுது பண்படுத்தி, எருவிட்டு, நீர் பாய்ச்சி, ஏற்கனவே பாவியிருந்த நெல் நாற்றுகளைப் பறித்து பெண்டிரைக் கொண்டு அவற்றை வயலில் நட்டு, களை முளைக்கும்போது அவற்றைக் கிள்ளி எடுத்து, பயிருக்கு நோய் கண்டால் அவற்றிற்கு தடுப்பு மருந்து கண்டு, கதிர் முற்றியபின் அவற்றைத் தாளோடு அறுத்து, களங்களில் சேர்த்து அடித்து, நெல் மணிகளைப் பிரித்து எடுத்துப்பின் தாளைப் போரிட்டு, தங்களுக்கு உதவிய தொழிலாளர்களுக்கும், இரவலர்க்கும், புரவலர்க்கும் நெல்லை மனமுவந்து வழங்கியப்பின் மீதநெல்லைக் களஞ்சியங்களில் சேமித்து வைப்பது இவரது தொழிலாகும். மற்ற நிலத்து மக்களைப் போலன்றி, இவர் குறுகிய காலத்தில் ஆண்டு முழுவதற்கும் தேவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ததால் இவர்களுக்குப் போதிய ஒய்வு கிடைத்தது. அக்காலத்தை இவர்கள் இன்பமாய்க் கழித்தனர். கலைகளை வளர்த்தனர். நாகரிகமும், பண்பாடும் இவர் மத்தியில் பெருகின. இவரது குடியிருப்பு ஊர் எனப்பட்டது. இவர் வேந்தனைத் தெய்வமாக வழிபட்டனர். வேந்தன் மேயத் தீம்புனல் உலகம்" எனத் தொல்காப்பியம் கூறுவது நினைவிருக்கத்தக்கிது. குறிஞ்சி நில வேட்டுவரும், முல்லை நில ஆயரும், நெய்தல் நிலப் பரதவரும், உமணவரும், மருதநில உழவரிடம் தங்கள் தங்கள் நிலங்களில் கிடைத்த மான் தசை, பால், தயிர், நெய், மீன், உப்பு இவற்றை நெல்லுக்குப் பண்டமாற்றிச் செல்வர்.(புறம் 33 - 1 - 8) (புறம் 343 – 1 - 2) ஜங்குறு நூறு (மருதம் 47 - 48) (அகம் 140 – 5 - 8) (அகம் 390 – 8 - 9) இங்குள்ள தலைமக்கள் ஊரன், கிழவன், மகிழநன் எனப்பட்டனர்.
நெய்தல் : கடற்கரையை ஒட்டிய பெருமணல் பகுதி நெய்தல் நிலமாகும். இங்கு வாழும் மக்கள் பரதவர், நுனையர், அடவர், வலைஞர், அலவர், திமிலர், நுளத்தியர், பரத்தியர் ஆவர். இவர்கள் கடலில் படகுகளில் சென்று மீன் பிடித்தும், கடற்கரையில் பாத்திகள் அமைத்து அவற்றில் கடல் நீரைப் பாய்ச்சி உப்புவிளைவித்தும் தொழில்செ ய்தனர். இவரது உணவு மீனும், மீன், உப்பு இவற்றைப் பண்டமாற்றிய உணவுப் பொருட்களுமாகும். (நற்றிணை 239 – 3; அகம் 60 – 4; அகம் 320 – 2 – 5; அகம் 340 – 14 - 15; புறம் 343 – 1 - 2) இவர் குடியிருப்பு சிறுகுடி, பாக்கம் என வழங்கின. வருணனைத் தெய்வமாக வழிபட்டனர். இங்குள்ள தலைமக்கள் கொண்கணன், துறைவன், சேர்ப்பன், புலம்பன் என வழங்கினர்.
ஜந்து நிலம் உண்டு என்றோ ஜந்தாவது நிலம் பாலை என்றோ தொல்காப்பியம் பேசக்கானோம்.
(தொடரும்)
No comments:
Post a Comment