மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
மருதநில மக்கள் மரபு யாது?
மருதநிலமக்கள் களமர், தொழுவர், விளைஞர், உழவர், மள்ளர், கம்பளர், இளைஞர், கடைஞர், உழத்தியர், ஆற்றுக்காலாட்டியர் எனப் பல்வேறு பிரிவினர் என நிகண்டுகள் கூறுவதாக ஏற்கனவே கண்டோம். சங்க இலக்கியங்களில் இவர் எவ்வாறு பேசப்படுகின்றனர் என்பதைப் பார்ப்போம்
களமர்:
களமர் என்ற வகுப்பு இன்று தமிழகத்தில் இல்லை. கி.பி. 14 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் “களமர்” என்ற சொல்லுக்கு “களத்திற்குச் செல்வோர்” என்றும், “மருதநில உழவர் கீழ் குடிகள்” என்றும் பொருள் கொள்வார். அவர் கூற்றுப்படி களமர் உழவர்க்கு உதவியாகக் களத்தில் தொழில் செய்பவர். களம் என்பது அவைக்களம், அறக்களம், மறக்களம், செருக்களம், நெற்போர்க்களம், ஏர்க்களம், போர்க்களம் என பலவகைப்படும். களம் என்ற சொல் ஊர்ப்புறங்களில் நெற்கதிர் அடிக்கும் இடத்தையே குறிக்கும். அதாவது நெற்கதிரைக் குவித்து அடித்து நெல்மணிகளையும், வைக்கோலையும் தனித் தனியாய்ப் பிரிக்கும் இடம் என்று பொருள்படும். களத்தில் அடித்த கதிரில் நெல்மணிகள் ஒட்டிக்கொண்டிருக்குமாதலால் அடித்த தாள்களை போர் போட்டுப் புழுங்க வைத்துப் பிறகு அவற்றைப் பிரித்து களத்தில் சிதறி எருதுகளைக் கொண்டு புணையலடிப்பதைப் போர் அடித்தல் என்பர். இதைத்தான் நெற்போர்க்களம் என்பர். இதற்கு ,
“காவல் உழவர் களத்தகத்துப் போரேறி” (முத்தொள் - 43)
என்ற செய்யுளை நோக்குக.
களம் என்பது மருத நிலத்துவிளை நிலத்தையும் குறிக்கும் என்பது அடியிற்கண்ட செய்யுளால் புலனாகும்.
“அணங்குடை மரபின் இருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் “. (புறம் 392 – 8 - 10)
களம் என்பது போர்க்களத்தையும் சுட்டும் என்பதைப் பார்ப்போம். பண்டைய நாளில் “ஏரும் போரும் இணைபிரியாது” என்ற முதுமொழி வழக்கில் இருந்தது என்பது நினைவிருக்கத்தக்கது. போர்க்களம் என்பது நெற்களம் மட்டுமின்றிப் படைகள் ஒன்றோடொன்று பொருதுமிடமும் போர்க்களம் எனப்படும். பண்டையக் காலத்தில் புலவர் ஏர்க்களமும், போர்க்களமும் பற்றிப்பாடி மன்னரிடம் பரிசு பெற்றனர் என அக்கால இலக்கியங்கள் கூறும். களம் வென்றான் என்பது போரை வென்றான் எனக் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஏர்க்களமும் அதன் பின்னர் அதனோடு இணைந்து நெற்போர்க்களமும் தோன்றியதென்பர் தமிழறிஞர். மருதநில மக்கள் பண்டைக்காலம் தொட்டு உழவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். உழவுத்தொழில் முடிந்தபின் போருக்குச் செல்வர். உழவின்றிப் போர் இல்லை. ஆக அரசு நிருவாகத்தையும் மாற்றானோடு பொருதுவதால் ஏற்படும் செலவையும் ஈடு செய்ய, அரசர்க்கு உழவர் திறை செலுத்த வேண்டியிருந்தது. அதனால் இறைக்கு உழவு அவசியமாகக் கருதப்பட்டது. இதற்குப்
“பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே” (புறம் 35 – 25 - 26)
என்ற மேற்கோள் சான்றாக அமையும். ஆகப் பொருது களந்தான் போர்க்களம் என்பது
“ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழிய (புறம், 2 - 15)
“ஈர் ஐம்பதின் மரும பொருது களத்து அவிய” (பெரம் 415)
“களம்புகு மல்லன் கடந்தடு நிலையே” (புறம் 80 - 9)
என்ற மேற்கோள்களால் விளங்கும்.
‘களம்' என்பது அவையையும் குறிக்கும் என்பதற்கு,
“உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச் செல்லாதார்” (குறள் 730)
என்ற மேற்கோள் சான்றாக அமையும்.
களம் என்பதிலிருந்து களவேள்வி தோன்றியதென்பர். இதற்கு
“யூபம் நட்ட வியன் களம் பல கொல்” (புறம் 15 - 21).
“பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி” (பெரும். 233)
என்ற செய்யுட்கள் சான்றாகும்.
வேள்வியானது அறக்கள வேள்வி, மறக்கள வேள்வி என இருவகைப்படும் என்பர். நிற்க.
களம் என்ற சொல்லிலிருந்து களமர் என்ற பெயர் தோன்றியதை அறிகிறோம். ஏற்கனவே கூறியதுபோல், களமர் என்பது ஒரு தனிமரபை உணர்த்தாமல், பல்வேறு களங்களிலும் ஈடுபட்டோரைக் குறிப்பதாக உள்ளது. களமரில் உழவரின் கீழ்ப் பணிபுரியும் பதினெண் குடிகளுள் ஒரு சாரார் அடங்கலாம். இதற்கு,
“கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே” (மதுரைக் காஞ்சி 260)
“எருது எறி களமர் ஓதையொடு நல்யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின்” (மலைபடுகடாம் 469 - 70)
“வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்” (நற்றி 125 - 9)
“களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்” (புறம் 212 - 2)
“மனைக் களமரொடு களமென்கோ” (புறம் 387 - 25)
(மனைக்கண் இருந்து பணிபுரியும் களமரும் நெற்போர்க் களங்களுமாகிய)
“இனக் களமர் இசை பெருக (பொரு – 194)
“களமர் உழவர் கடிமறுகு பிறசார்”
(பரிபாடல் திரட்டு:1 திருமால் - 27)
(களமர் - உழவர் கீழ்ப் பணிபுரிபவர்)
தொழுவர்
தொழுவர் என்பதற்குத் தொழில் செய்பவர் என்றும்; தொழுதலையுடையவர் என்றும், கம்மியர் என்றும் நிகண்டுகள் பொருள் கூறும். இலக்கியங்களில் தொழுவர் எவ்வாறு பேசப்படுகின்றனர் என்பது பற்றிப் பார்ப்போம்.
“நெல்லரியும் இருந்தொழுவர்” (புறம் 24 - 1)
“நெல்லரி தொழுவர் கூர்வாள் உற்றென
பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல் (நற். 195 - 6).
“நீர்த் தெவ்வும் நீரைத்தொழுவர்” (மதுரைக் காஞ்சி 89)
“பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம்கழனி நெல்அரி தொழுவர்” (புறம் 209 – 1 - 2)
“சிறு குடிப் பெருந் தொழுவர்
குடி கெழீ இயநால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்ப (மதுரை காஞ்சி 122 - 23)
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்” (குறள் 1033)
மேலே கண்ட மேற்கோள்களிலிருந்து தொழுவர் என்பவர் மருதநில உழவரின் கீழ்ப் பணிபுரிபவர் எனத் தெரிகிறது.
வினைஞர்:
வினைஞர் என ஒரு தனி வகுப்பு இருந்ததாகச் கொள்வதற் கில்லை. இது தொழிற் பெயராகும். பொதுவாக இது உழவரையே சுட்டும்.
“நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன்தலைச் சிறா அர்” (புறம் 81 – 7 - 8)
“மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி” (பெரும் 255 - 6)
“கருங்கை வினைஞரும் களமருங்கூடி” (சிலம்பு நாடுகள் 125)
இங்கு கருங்கை வினைஞர் என்பதற்குப் பள்ளர், பறையர் என அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும் பொருள் கண்டுள்ளதாக அவர்களது உரைகளிலிருந்து அறிகிறோம். ஆனால் சிலப்பதிகார காலத்திலோ, உரையாசிரியர் காலத்திலோ பள்ளர் என்ற வகுப்பு தமிழகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பிற்காலப் பதிப்பாசிரியர் கை வேலையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.
இளைஞர் :
இளைஞர் என்பதற்கு இளையர், ஏவல் செய்பவர், வீரர் என்று பொருள் காண்பர். (பாட்டும், தொகையும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு)
“சிறுவி முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன், இளைஞரும் மலைந்தனர். (நற் 361 – 1 - 2)
“கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட” (பொருநற் 100)
“கவை முட் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் கைப்பட் (முல்லைப் பாட்டு 35 - 36)
“வளை அணி முன்கை, வால் எயிற்று அமர் நகை,
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் (ஐங் 198 – 1 - 2)
“கை வல் இளையர் கை அலை அமுங்க" (பதிற் 6 - 34)
கம்பளர் :
சங்க இலக்கியங்களில் கம்பளர் என்ற சொல் இடம்பெறவில்லை. சூடாமணி நிகண்டில் கம்பளர் என்பதற்கு ஆரவாரமுடையவர் என்றும், மன்னர்க்குரிய பெயர் என்றும் பொருள் கண்டுள்ளது.
கடைஞர்:
“கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்” (புறம் 61 – 1 )
“கடையோர் விடுவாய்ப் பிசிரோடு சுடு கிழங்கு ஙுகர”
(புறம் 225 – 3)
கடைஞர் சங்க இலக்கியங்களில் இடம் பெறக்காணோம், கடைசியர்(புறம் 61 – 1 ) மட்டும் அவற்றில் இடம் பெற்றுள்ளது. இது தழை உடை அணிந்து வயலில் களை பிடுங்குபவரைச் சுட்டுவதாயுள்ளது. இவர் உழவரை அண்டித் தொழில் செய்பவர் ஆவர்
புறநானாறு 225 – ல் வரும் கடையோர் என்பதற்குப் பின் செல்வோர் என்று பொருள் கண்டுள்ளனர். பெரிய புராணத்தில் கடைஞர் இடம் பெற்றுள்ளது. இது அந்நாளில் பண்ணைகளில் வேலை செய்து வந்த புலையரைச் சுட்டுவதாயுள்ளது. இங்கு கடைஞர் என்பது இழிந்தவர், தாழ்ந்தவர் என்று பொருள்படுகிறது. இது உழவர் குடியினரைச் சுட்டாது. சில தமிழ் அறிஞர் இவர் உழவர் எனச் சுட்டப் பட்டுள்ளதாக மயங்குவர். (கடைஞர் கடைசியர் பற்றி பின்னிணைப்பில் விரிவாய்ப் பேசப்பட்டிருப்பது காண்க)
(தொடரும்)
No comments:
Post a Comment