Wednesday, November 8, 2017

மூவேந்தர் யார்? பகுதி-18

மள்ளரிய தந்தை 
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

மேலேகண்ட நானிலம் தவிர, பாலை என்ற ஒரு நிலப்பிரிவு இருந்ததாகவும், அதில் எயினர், மறவர் வாழ்ந்தனர் எனவும், அவரது ஊர் குறும்பு, பறத்தலை எனவும், அவரது தொழில் ஆறலைத்தலும், நிறை கோடலும் எனவும், அவரது தெய்வம் கொற்றவை எனவும் நிகண்டுகள் கூறக்காண்கிறோம். ஏற்கனவே கண்டபடி தொல்காப்பியத்தில் நானிலம் மட்டும் பேசப்படுகின்றது. ஜந்து நிலம் உண்டு என்றோ, அது பாலை நிலம் என்றோ தொல்காப்பியம் பேசக் காணோம். இளங்கோ அடிகள்:
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து 
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
(சிலம்பு காடுகாண் காதை 5 – 64 - 66)

என்று கூறுவதற்கு வெம்மையான சில கிரகங்களைச் சொரிகின்ற கதிரவன் மாறுபட்டு நிலங்களை எல்லாம் வேறுபடுத்தும் தன்மையிலே அவை குன்றைபாடுற்று முல்லை, குறிஞ்சி என்னும் பழைய முறைமைகளிலிருந்து, முழுவதும் அறவே இழந்து, வழிச் செல்பவரை நடுங்கு துயரம் உறுமாறு செய்து, பாலை எனப்படுவதொரு வடிவினைக் கொள்ளும் இக்காலம் எனப்பொருள் கண்டுள்ளனர். ஆகப் பாலை என்பது ஒரு தனி நிலப்பரப்பன்று. அது ஒரு காலப்பகுதியையே குறிக்கின்றது. இறையனார் அகப்பொருளுரையில் தொல்காப்பியனார் “பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர்” என்று கண்டுள்ளர். தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரையில், “திணைதொறு மரி இய பெயரும் திணைநிலைப் பெயருங் கொள்க” எனக்கொண்டு, பாலையின் மக்கள் எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் எனவும், தலைமக்கள் மீளி, விடலை, காளை எனவும் கண்டுள்ளது. எயினர், மறவர், நானிலத்திலும் வராதவர் ஆவர். இவரது தொழில் ஆறலைத்தலும், சூரையாடலும் என்பர்
பாலைத்தினை மக்களாகப் பேசப்படும் எயினர், மறவர் இன்றையப் பள்ளி வகுப்பாகக் கருத இடமுன்டு, பெரும்பாணாற்றுப்பாட செய்யுள் - 89 இதற்குச் சான்றாகும்.

சங்க இலக்கியங்களில் தெவ்வர் என்று பேசப்படுகின்றவர் இவராக இருக்கலாம். பாலைத்திணைத் தலைமக்கள் என்று கூறப்படும் மீளி, விடலை, காளை என்பவர் மருதநிலத்தைச் சேர்ந்தவர் ஆவர். போர், காதல், வணிகம் இக்காரணங்களால் தலைவியை விட்டுப் பிரிந்த இளைஞர் இவ்வாறு பேசப்படுகின்றனர். இதற்குச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் நிரம்ப உள.
அரசு தோன்றிய இடம் ; 
“உழிஞைதானே மருதத்துப்புறனே” (தொல் புற. திணை. 8)

தமிழகத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு நிலப் பகுதிகளாகப் பிரித்திருப்பதாக ஏற்கனவே கண்டோம். இவற்றில் குறிஞ்சியும், முல்லையும் வன்னிலம்; திருந்தாதநிலம், மருதமும், நெய்தலும், மென்னிலம்; திருந்திய நிலம், மனிதரின் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உடை ஆகும். தமிழகத்தில் உணவு தானியங்களில் சிறந்தது நெல். முல்லை, குறிஞ்சி நிலமும் திருந்தாதவை என்கும் போது, அங்கு வாழ்ந்த மக்களுடைய நாகரிக நிலையும் அப்படியே ஆகும். பொதுவாக ஆரம்பகாலத்தில் இவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்புகள் இல்லை எனலாம். மென்னிலங்களில் ஒன்றாகிய நெய்தல் நிலப்பகுதியில் மீன், உப்பு. இவைகள்தான் கிடைக்கும். ஆனால் மருதநிலம் அவ்வாறன்று. அது வளமுள்ளது. நீர் நிலை, கழனிகள், தோப்பு உள்ளடங்கியது, மக்கள் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உடை. இவற்றிற்குத் தேவையான நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி, முதலிய பொருட்கள் இங்கு உற்பத்தியாயின. இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்திருந்ததால் மருதநிலம் எனப் பெயர் பெற்றது என்பர் ஒருசாரார். இன்னொரு சாரார் மருதம் என்பது வளத்தை குறிப்பதாகக் கூறுவர். மருதநில மேம்பாட்டுற்கு முக்கியகாரணம் நெல் உற்பத்தி ஆகும். இது முதன் முதல் ஆற்றோரங்களில்தான் பயிரிடப்பட்டது. ஏனெனில் நெல் சாகுபடிக்கு நீர் இன்றியமையாதது ஆகும். இது பற்றியே நெல்லும் உயிரன்றோ; நீரும் உயிரன்றோ; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.(புறம் 186 – 1 - 2) என்று கூறுவார் ஒரு சங்ககாலப்புலவர். டாக்டர் கில்பர்ட் கிலேட்டர் ‘நெல் விளைவே திராவிட நாகரிகத்தின் பொருளியல் அடிப்படை என்பது தெளிவு; நெல்லுடன் கூடிய பல வகைப்பட்ட கூளங்கள் விளைவிக்கப்படவே செய்கின்றன; ஆனால் இவை இரண்டாவது தேர்வுகளாகவே செய்யப்படுகின்றன’ என்று கூறியிருப்பது நினைவிருக்கத்தக்கது. (இந்திய நாகரிகத் திராவிடப் பண்பு. பக்கம் 108)
ஏற்கனவே கண்டது போல், ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் ஆற்றோரங்களில் தான் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இன்னும் பெரும்பாலும் அது ஆற்றோரங்களில் தான் பயிரிடப்படுகின்றது என்பதை நாம் அறிவோம். மக்கட் பெருக்கத்தின் காரணமாய் உணவுப் பற்றாக்குறை ஏற்பட, மருதநில உழவர் குடியினர் அண்மையிலுள்ள காடுகளை அழித்து நாடாக்கி, அங்கு குடியேறி, குளம் வெட்டி, மழை நீரை அதில் தேக்கி, அதைக் கொண்டு சீர் செய்யப்பட்ட நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி முதலிய பயிர்களைப் பயிர் செய்தனர். அதனாலேயே ஆற்றுப்பகுதிகளுக்கு அப்பாலுள்ள உள்நாட்டிலும் நெல், வாழை முதலிய நஞ்சைப் பயிர்கள் சாகுபடியாகும் நிலை எழுந்தது. ஆக உலக நாகரிகத்தின் தொட்டில் ஆற்றோரமாகிய மருதநிலம் ஆகும். தமிழக நாகரிகத்தின் தோற்றத்திற்கு மூலகாரணமாய் அமைந்தது நெல் உற்பத்தி. இந்தியாவில் முதன் முதல் நெல் உற்பத்தி செய்தவர் திராவிடர் ஆவர். அவரேதான் தென்னகத்திற்கு நெற்பயிரைக் கொண்டுவந்து பயிர் செய்தார் என வரலாறு கூறுகின்றது. எகிப்து நாகரிகம், சுமேரியா நாகரிகம், சீன நாகரிகம், ஏன்? சிந்துவெளி நாகரிகம் எல்லாம் ஆற்றோரங்களிலேயே தோன்றின என்பதை வரலாறு படித்தோர் அறிவர்,
தமிழகத்தில் பொருநை (தாம்பிரபரணி), வைகை, காவிரிப் பகுதிகளில் தான், முதன் முதல் நெல் பயிர் செய்யப்பட்டது. ஏற்கனவே கூறியபடி சோழநாடு என்பது ஆரம்பகாலத்தில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களும், தென்ஆற்காடு மாவட்டத்தில் தெற்கே ஒரு சிறு பகுதியுமே அடக்கம் ஆகும். சோழ நாட்டிற்கு வடக்கே உள்ள பகுதி அருவாநாடு, அருவா வடதலை நாடு, என வழங்கின என்பர். இங்கு குறும்பர், ஒளியர், அருவாளர், எயினர் முதலிய பல்வேறு குடிகள் காடுகளில் வாழ்ந்திருக்கின்றனர். இப்பகுதியைத் தொண்டை மண்டலம் என்பர்.
கரிகால் சோழன் காலத்தில் தொண்டை மண்டலத்தில் உள்ள பாலாற்றுப் பகுதியில் சோழ நாட்டு மருதநில மக்கள் குடியேறி, அங்கு காட்டை அழித்து நாடாக்கி குளம் வெட்டி வளழ் பெருக்கி, நெல் உற்பத்தி செய்து, நாகரிகத்தைப் பரப்பினர். சோழன் கரிகாலனுக்குப் பிறகு சோழ இளவரசன் இளந்திரையன் இப்பகுதியை ஆண்டான். இப்பகுதியில் சோழ நாட்டு மக்கள் குடியேறியபோது இங்கு வாழ்ந்த ஒளியர், குறும்பர், அருவாளர், எயினர் முதலானோர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். பின்னர் இவருள் ஒரு சாரார் அடங்கி குடியேறிய சோழ நாட்டு மக்களிடம் பணிந்து, அவரை அண்டித் தொழில் கற்று, திருந்திய வாழ்க்கை மேற்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் நிரம்ப உள.

ஆக மருதநிலத்தில்தான் நிரந்தரமான குடியிருப்புகள் ஏற்பட்டன. இவர்களுக்கெனப் பிரத்யேகத் தனி உடைமைகள் ஏற்பட கணவனைத் தலைவனாகக் கொண்ட குடும்ப வாழ்க்கை ஏற்பட்டது. இதை மக்கள் தாயமுறை என்பர். பிறகுடிகளுக்குத் தனி உடைமையும், நிரந்தரக் குடியிருப்பும் இல்லாமல் அவர்கள் நாடோடி வாழ்க்கை உடையவராய் இருந்ததால், இவரிடையே குடும்ப வாழ்க்கை முறை வழக்கில் இல்லை எனலாம். அக்காலத்தில் அவர்கள் மருமக்கத் தாயமுறைப் பின்பற்றி வரலாயினர். மக்கள் தாயமுறைக்கு குடும்பத்திற்குத் தலைவன் தகப்பன் ஆவான். குடும்ப பாதுகாப்பிற்கு அவனே பொறுப்பு. ஆனால் மருமக்கத் தாய முறைக்குத் தாய் தான் தலைவி. குடும்பப் பாதுகாப்பிற்கு அவளே பொறுப்பு ஆவாள். இங்கு பெண்டிர்க்கு ஒரு ஆடவன் என்ற முறை இல்லாமல் அவர் பல ஆடவருடன் உறவு வைத்துக் கொண்டதனால் அவர் பெற்றெடுக்கும் குழந்தைகளின் தகப்பன்மார் யார்? என்று திட்டவட்டமாய்க் கூற இயலாது. இப்பெண்டிர் கற்பு நெறி பேணுவதில்லை.
இக்காலத்தில் கூடக் குறிஞ்சி நில மக்களாகிய குறவர் தம் மனைவியரை பிறரிடம் அடகு வைத்துப் பணம் பெறுவதுவும், திருடிவிட்டுச் சிறை செல்லும் போது அவரை பிறரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வதுவும், தாம் அவரை மீட்கும்போது, பிற ஆடவர் மூலம் பிறந்த குழந்தைகளுடன் அவரை மீட்பதுவும் வழக்கில் உள்ளது ஆம். பழங்குடிப் பெண்கள் பல ஆடவருடன் பண்டைக்காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டிருந்ததின் எச்சங்கள் சில மரபினரிடம் இன்னும் காணலாம். இதைக் கொண்டு இம்மக்கள் திராவிடர்க்கு முற்பட்ட நீக்ரோயிட், ஆஸ்ட்ரோலாயிட் இனங்களைச் சேர்ந்தவர் என்று நாம் முடிவுகொள்ள வேண்டியுள்ளது. ஆக இவர்கள் திருந்தாத வாழ்க்கை யுடையவராய் இருந்தபோது திராவிடர் திருந்திய மக்கள்தாய் வாழ்க்கை முறையைப் பின்பற்றினர். (அகம் 86 – 136 - 221) திராவிடர்க்கு முற்பட்ட மக்கள் வாழ்க்கை நெறிபற்றி இலங்குளம் பேராசிரியர் குஞ்சன்பிள்ளை கூறுவதைக் காண்போம்: "தாய் வழிமுறை (மருமக்கத்தாய முறை) அக்காலத்தில் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும். தனியாருடைமை பெருகிய பின்னரே, மணச் சடங்குகளும், தந்தை வழி மரபும் தோன்றின நில உடைமையாராகிய உழவர்களிடையே தான் அது முதன் முதலில் தோன்றியிருக்க நியாயமுண்டு அங்கிருந்து கடற்கரையில் வசித்த வலையர்கள் இடையிலும், இடைநாட்டிலிருந்த இடையர்களிடையிலும் இது பரவியிருக்கவேண்டும். முற்றிலும் தந்தைவழி மரபைப் பின்பற்றியே சங்ககாலத்தில் ஆண், பெண் உறவுகளில் சமூக ஒழுங்குகளைக் கடைப்பிடித்திருந்ததாகத் தெரிகிறது. (பண்டையக் கேரளம். தமிழர்ப் புத்தகாலயம் பக்கம் 119 ) ஆக ஏற்கனவே கூறியபடி தமிழகத்தில் மருதநிலத்தில்தான் கற்புநெறியும் திருமணவாழ்க்கையும் முதன்முதல் ஏற்பட்டது. ஊர் நகரம் நாகரிகம், அரசுகள் இவை எல்லாம் இப்பகுதியிலேயே தோற்றம் பெற்றன. இப்பகுதியில் அரசுகள் ஏற்பட்டதனால் இங்குள்ளவர் தெய்வத்தை வேந்தன் என்றனர். தலை மக்களை ஊரன், மகிழ்நன், கிழவன் என்றனர். ஊரன் எனில் ஊர்த் தலைவன்; கிழவன் எனில் உரிமை உடையவன்; எல்லாம் உடையவன் எனப் பொருள்படும். ஏற்கனவே கூறியது போல் மருதநில நாகரிகம் தோன்று முன் தமிழகத்தில் ஆறுகள் கரைகள் இன்றி கட்டுப்பாடு இல்லாமல் எதேச்சையாய் ஓடின. எனவே இவற்றின் நீரை அன்றிருந்த மக்கள் ஒருவரும் பயிர் செய்யப் பயன்படுத்தவில்லை எனலாம். அக்கால மக்கள் குறிஞ்சி, முல்லை நிலக்கூறுபாடுகளுடையவராகவே இருந்திருக்கின்றனர்.
இப்பகுதி வாழ் மாந்தர் வலைகள் மூலம் ஆரம்பகட்டத்தில் பறவை, விலங்குகளைப் பிடித்துப் பின்னர் ஆறுகள் நீர்நிலைகள் இவற்றில் வலைகள் மூலம் மீன் பிடிக்கக் கற்று, அதன்பின் கடற்கரையிலும், பின்னர் கடலுக்குள் கட்டு மரங்கள் மூலம் சென்று மீன் பிடிக்கவும் கற்றிருக்க வேண்டும். கட்டுமரம் மூலம் மீன்பிடிக்கும் பழக்கம் மருதநில நாகரிகத்திற்குப்பின் ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள குறிஞ்சி, முல்லை நில வாழ் மக்கள் நாளடைவில் வளச்சி பெற்று ஆற்றோரத்தில் மருதநில வாழ்க்கை மேற்கொண்டன என்று கூறுவது எவ்விதத்திலும் பொருந்தாது. நெய்தல் நில நாகரிகம், மருதநில நாகரிகம் தோன்றியதிற்குப்பிற்கே தோன்றியதென்பது அது எல்லா நிலங்கட்கும் இறுதியில் பேசப்பட்டிருப்பது சான்றாக அமையும். அயல் நாட்டு வாணிகம் மருதநில நாகரிகத்திற்குப்பிறகுதான் தோன்றியிருக்க வேண்டும்.
கடற்கரைப்பட்டினங்கள் அயல் நாட்டு வாணிகத்தால் எழுந்தன. ஆக, ஏற்கனவே கூறியது போன்று தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை நில வாழ்க்கை மேற்கொண்டிருந்த குறவரோ, வேடரோ, வலையரோ, ஆயரோ, இடையரோ வளர்ச்சி பெற்று மருதநில வாழ்க்கை மேற்கொண்டனர் என்பது பொருந்தாக் கூற்றாகும். ஆதலால் பிற பகுதியிலிருந்து நாகரிக மேம்பாட்டடைந்த ஒரு மக்கள் கூட்டம் நில அழிவின் காரணமாகவோ, படை எடுப்பின் காரணமகவோ மக்கள் கூட்ட நெரிசல் காரணமாகவோ இடம் பெயர்ந்து இன்றையத் தமிழகத்தில் பொருநை, வைகை, காவிரி முதலிய ஆற்றோரப்பகுதிகளில் குடியேறியிருக்கவேண்டும். அவர் குடியேறும் காலத்தில் நாகரிகமற்ற மக்கள் காடுகள், மலைகளில் வாழ்ந்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆறுகள் கரையின்றி ஓடினதென்பதற்கும் அவற்றிற்குத் தமிழ் வேந்தர் கரை கண்டனர் என்பதற்கும், சோழன் கரிகாலனைப் “பொன்னிக்குக் கரை கண்ட பூபதியே” என்று ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழனுலாவில் கண்டிருப்திலிருந்தும், ஈழத்திலிருந்து பன்னீராயிரம் பேரைச் சிறைபிடித்துக் கரிகாலன், "காவிரிக்குக் கரை கண்டான்" என்பதி லிருந்தும் “தொக்க கலியின் மூவாயிரத்து தொண்ணூற்றில் மிக்க கரிகால வேந்தனுந்தான் பக்கம் அலைக்கும் புகழ் பொன்னியாற்று கரைகண்டான் மலைக்கடும் புயத்தானும் வந்து” எனப் பழைய வெண்பா கூறுவதிலிருந்தும் அறியலாம்.
புராண மரபுப் பாண்டியன் வையை ஆற்றிற்குக் கரை கண்டதைத் திருவிளையாடற் புராணத்திலிருந்து அறியற்பாலது. புராண மரபுச் சோழன் குடகு மலையைப் பிளந்து, காவிரியைச் சோழநாட்டில் ஒடச் செய்தான் எனப் புராணங்கள் கூறுகின்றன. சூரவாதித்தசோழன் மலேயாவிலிருந்து வெற்றிலையைக் கொண்டுவந்து, சோழ நாட்டில் பயிர் செய்வித்ததாகச் செவ்வந்திப் புராணமும், உறையூர்ப் புராணமும் கூறுகின்றன. (கலைக் களஞ்சியம், பக்கம் 502)
மேலும் நாட்டில் பஞ்சம் ஏற்பட சேர, சோழ, பாண்டியர் மூவரும் தேவலோகம் செல்ல, சேரனும், சோழனும் தேவேந்திரனிடம் மழைவரம் வேண்டிப் பெற்றது பற்றியும் பாண்டியன் மழைவரம் வேண்டாமல் தேவேந்திரனிடம் முரண்பட்டு செருக்காய் நடந்து, தேவகன்னியின் புத்திரர் நான்கு குடும்பத்தாரைப் பூமிக்கு அழைத்து வந்து பன்னீராயிரம் கிணறுகள் தோண்டிப் பயிர் விளைவித்து நாட்டைச் செழிப்பித்தது பற்றியும் ஏற்கனவே கூறியிருப்பது நினைவிருக்கத்தத்து. அதியமான் நெடுமானஞ்சி முன்னோரி லொருவன் சீனத்திலிருந்தோ, சாவகத்திலிருந்தோ கரும்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் பயிரிட்டது பற்றி ஒளவையார்,
“அரும் பெறல் அமிழ்தம் அன்ன 
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே”
(புறம் 392 – 20 - 21).
எனக் கூறுவது காண்க.

(தொடரும்)

No comments:

Post a Comment