Wednesday, November 8, 2017

மூவேந்தர் யார்? பகுதி-19

மள்ளரிய தந்தை 
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

மேலும் தமிழ் மூவேந்தரையும் உயர்ந்த நெல்லுடையவர் என்றும், அவரது ஆட்சிக்குட்பட்ட ஊர்கள். உயர் நெல் விளையும் பூமியாகவும் புலவர் பலர் பாடியிருப்பது காண்க.
“சீர் சான்ற உயர் நெல்லின் 
ஊர் கொண்ட உயர் கொற்றவ “
(மதுரைக் காஞ்சி 87 - 88)

(இங்கு ஊர் என்பது பாண்டியன் கடற்கரைப் பட்டினமாகிய கொற்கையைக் குறிக்கும்)
“நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென 
வரைய சாந்தமும் திரையமுத்தமும்”
(புறம் 58 -10 – 11 )

(நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிதில் கிடைக்கும்படி பாண்டியன் செய்ததை இது உணர்த்துகிறது).
“நெல்லுடையான் நீர் நாடற்கோ” (யாப்பெருங்கல விருத்தி)
“நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் (புறம் 186 – 1 - 2)

(தமிழ் வேந்தர் நெல்லையும், நீரையும் போன்று நாட்டின் உயிராக மக்களால் மதிக்கப்பட்டனர் என்பதைச் செய்யுட்கள் உணர்த்துவதாயுள)
நெல்லும் நீரும் மட்டும் மக்களின் உயிர் வாழ்க்கையைக் காப்பது அன்று. பரந்த இவ்வுலகம் வேந்தனின் முறையான காவற் சிறப்பாலேயே ஒழுங்காக நிலை பெறுவதனால் அவனே உண்மையான உலகுக்கு உயிர் ஆவான். வயல், நீர், நெல், குடி, அரசு இவற்றின் ஒருமைப்பாட்டைப்பற்றி ஒளவையார் ஒரு குறுநிலமன்னன் அரண்மனையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் அவனை வாழ்த்தும் முகத்தான் "வரப்பு உயர" என்று வாழ்த்தவும் மணவிழாவில் குழுமியிருந்தோர், இதன் பொருள் புரியாமல் திகைக்கலாயினர் உடனே ஒளவையர் வரப்பு உயர நீர் உயரும் ; நீர் உயர நெல் உயரும்: நெல் உயரக் குடி உயரும்; குடி உயர உயரக் கோன் உயரும் என விளக்கம் தந்தார். எனவே தமிழகத்தில் அரசு தோன்றிய இடம் நீரும் நெல்லும் உள்ள இடம் என்பது சொல்லாமலே விளங்கும். இந்நிலத்தில் வாழ்ந்த மக்கள், பிறநில மக்களைப் போன்று உயிர் வாழ்க்கைக்கு ஆண்டு முழுவதுவும் அலைந்து திரிந்து உணவு தேடுவதைவிட்டு, ஒரு குறுகியகாலப்பகுதியில் ஆண்டு முழுவதற்கும் தம்தம் குடும்பத்திற்குத் தேவையான உணவு பொருட்களைப் பயிர்செய்து களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர். அவர்கள் தாங்கள் பாடுபட்டுத் தேடி வைத்த உண்வுப் பொருட்களைத் தங்களுக்குப் பயிர்த் தொழிலில் உதவிய பல தொழிலாளர்களுக்கும் தங்களைப் அண்டிய இரவலர்க்கும், புரவலர்க்கும், நாடோடிகளாய் ஆடிப்பாடித் திரியும் இன்றைய நரிக்குறவர் போன்ற பாணர், துடியர், விறலியர், பொருநர் முதலானோர் தங்களிடம் யாசித்து வந்தபோது தாராளமாய் ஈய்ந்து உதவினர். இவர்களது வாழ்க்கைக்குப் பலவிதத்திலும் உதவியவர் பதினெண் குடிகளாகக் கருதப்பட்டனர். காலப்போக்கில் தொழில்கள் பல்கிப் பெருகின. பலதரப்பட்ட காட்டுவாணரும், சீர்திருந்திப் பற்பல தொழில்களைக் கற்று மேம்பாடுற்றனர். இதற்கு
"பல் ஒளியர் பணிவு ஒடுங்க 
தொல் அருவாளர் தொழில் கேட்ப 
(பட்டினப்பாலை 274 - 75)

என்ற மேற்கோள் சான்றாகும்.
அக்காலத்தில் காட்டுவாணருள் ஒரு சாரார் திருந்தினாலும், பெரும்பாலோர் நாடோடி வாழ்க்கையையே பின்பற்றி வந்தனர். அதனால் நிரந்தரமாய் ஏற்பட்டிருந்த குடியிருப்புகள், இக்காட்டு வாணரது தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளானது. பாதுகாப்பில்லாத ஊர்கள் காட்டுவாணர்களால் தாக்கப்பட்டு, பாழாக்கப்பட்டு மக்கள் அவற்றைக் காலி செய்திருக்கின்றனர். இதற்கு -
“அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் 
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ 
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்”
( அகம் 167 – 8 – 167 )

என்ற மேற்கோள் எடுத்துக்காட்டாகும். இவ்விதத் தாக்குதல்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள மருதநில மக்கள், தமது ஊர் நகரங்களைச் சுற்றி தற்காப்புக்காகக் கோட்டைகள் எழுப்பினர். இதுபற்றி தொல் காப்பியம் கூறுவதாவது:
“உழிஞைதானே மருதத்துப் புறனே
முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் 
ஆனை நெறி மரபிற்று ஆகுமென்ப”
(தொ.பொ.புற 2 - 66)

கோட்டைகளுக்கு வெளியே வேற்றுப்புல மக்களும், மற்றும் நாடோடி வாழ்க்கை நடத்திய பாணர், துடியர், கடம்பர், விறலியர், ஒளியர், அருவாளர், குறும்பர், எயினர் எனப் பலதரப்பட்ட மக்களும் தற்காலி கமாய்க் குடியிருப்புகள் அமைத்து வாழ்ந்தனர். இக்குடியிருப்புகள் சேரி என வழங்கின.
“ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் “
(தொல். பொருள். 240)

“கல்லென் சேரிப் புலவற் புன்னை “
(மீனவர்) (நற்றிணை 63 - 3)

“மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்” 
(மதுரை காஞ்சி, 594)

“மீன் சீவும் பாண் சேரியொடு” 
(மது கா. 269)

“ஓர் ஓர் வாழினும் சேரி வாரார்; 
சேரி வரினும் ஆரமுயங்கார்”
(குறுந். 231 - 1 - 2)

இந்தச் சேரிவாழ்நர்களிலிருந்து தான் பரத்தையர் கூட்டம் உருவானது. இப்பரத்தையர் மருதநில மக்கள் இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தனர். கோட்டைகள் அமைத்த மருதநில மக்கள், அவற்றிற்குக் காவலரையும் நியமித்தனர். அவர்கள் ஊர்க்காவலர், புரவலர் எனப்பட்டனர். ஆரம்பக் கட்டத்தில் இவரைக் கொண்டு ஊர்க் காவல், பயிர்க்காவல் நடைபெற்று வந்தது. இவர் சீறூர் மன்னர், சிறுகுடி மன்னர் என வழங்கினர். இத்தலைவர்களைக் கொண்ட சபைகள்தான் அக்காலத்தில் ஊர் மன்றங்கள் என்றும் இடைக்காலத்தில் குடும்புகள் என்றும் வழங்கித் தற்காலத்தில் ஊர்ப்பஞ்சத்துக்கள் எனப்பெயர் பெற்று செயல்பட்டு வருகின்றன. ஊர் மன்றங்ககளின் தலைவர்தான் ஊரன், மகிழ்நன், கிழவன் எனப்பட்டனர். அக்காலத்தில் காட்டுவாணர் நிரந்தரக் குடியிருப்புகளை அடிக்கடி தாக்கியதால், ஒவ்வொரு குடியிருப்பும் தனித்தனியாய் அவர்களை எதிர்க்க முடியாது போயிற்று. எனவே பல ஊர்களும் ஒன்று சேர்ந்து கூட்டாட்சி முறையை ஏற்படுத்தினர். ஊர்களில் உள்ள தலைவர்களில் வலிமையும், ஆற்றலுமுடையவர் கூட்டாட்சிக்குத் தலைவரானர். இவர் வேள், வேளிர் என வழங்கினர். பின்னர் பல வேளிர்களிலும் சிறந்தவர் முடியுடை மன்னரானர். அதாவது ஊர் வளர்ச்சியுற்றுப் பேரூரானது. பேரூர் நாகரிகம் பெற்று நகரமானது ஊர், நகரங்கள் தோன்றத் தோன்ற ஆட்சிமுறை விரிவடைந்தது. ஊர்க்கிழவரிலிருந்தி சிறுகுடி மன்னர், சிற்றூர் மன்னன், வேள், வேளிர் தோன்றி, அதன்பின் வேந்தர் அதாவது முடியுடை மன்னர் தோன்றினர். அவர்தான் சேர, சோழ, பாண்டியர் ஆவர். இவர் வஞ்சி, உறந்தை, கூடல் என்ற மதுரை இவற்றைத் தமது தலைநகரங்களாகக் கொண்டனர். கடற்கரைத் துறைமுகப் பட்டினமாகத் தொண்டி, புகார், கொற்கை இவைகளை அமைத்தனர். ஏற்கனவே காட்டுப் பகுதிகளிலும், குன்றுகளிலும் குறுநில மன்னர் இருந்தனர். காலப் போக்கில், இவர் ஒழிந்து மூவேந்தர்க்குத்திறை செலுத்தும் நிலைக்கு உள்ளாயினர். சில குறுநில மன்னர் மறைந்தே போய் விட்டனர்.

மூவேந்தர் தலை நகரங்களாகிய மதுரை வையை யாற்றங்கரையிலும், கரூர் உறந்தை காவிரிக்கரையிலும், வஞ்சி பொருநையின் முகத்துவாரத்திலும், புகார் காவிரியின் முகத்துவாரத்திலும், மல்லையாகிய மாமல்லபுரம் பாலாற்றின் முகத்துவாரத்திலும் இருப்பதைக் காணவும். அக்காலக் கடற்கரைப் பட்டினங்கள் ஆறுகளின் முகத்துவாரங்களில் தோன்றின என்பதால் அரசுகள் முதன்முதல் மருதநிலத்திலேயே தோன்றியது ஆம். திராவிடருடைய நாகரிகம் மருதநிலத்தை மையமாகக் கொண்டு மாட்சியுற்றது. உள்நாட்டில் அல்லது ஆற்று வெளியில் வாழ்வதில் அவர் நாட்டம் கொண்டிருந்தனர். இதனால் நீர்ப்பாசன முறையாலமைந்த வேளாண்மைத் தொழிலில் அவர் (சேர, சோழ, பாண்டியர்) சிறப்பு மிக்க தேர்ச்சியினைப் பெற்றிருந்தனர். என ஏற்கனவே கண்டுள்ளது நினைவிருக்கத்தக்கது. இவ்விதச் சிறப்புப்பெற்ற திராவிடப் பெருங்குடியினர் இன்றையத் தமிழனங்களில் யார்? என்பது பற்றிப் பார்ப்போம்.
‘இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்' (நம்பியகப் பொருள் அகத்திணை)
மருத நிலத்தில்தான் அரசுகள் முதன் முதல் தமிழகத்தில் தோன்றியதென ஏற்கனவே கண்டோம். “வேந்தன் மேயத் தீம்புனல் உலகம்” எனத் தொல்காப்பியம் கூறுவதிலிருந்து, மருதநிலத்து மக்கள் தெய்வம் வேந்தன் என்றும், வேந்தனை, இந்திரன், தேவர்வேந்தன், தேவேந்திரன், புரந்தரன் எனப் பலவாறு வழங்கினர் என்றும், இம்மக்கள் மன்னனையே தெய்வமாகக் கொண்டனர் என்றும், அவரும் அவரது தலைமக்களும் யார்? யார்? என நிகண்டுகள் கூறுவதையும் ஏற்கனவே பார்த்தோம் அடுத்து நிகண்டுகளில் கண்டவர் சங்க இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றனர் என்பது பற்றிப் பார்ப்போம். முதலில் தலைம்க்கள் பற்றிப்பார்ப்போம்.
(தொடரும்)

No comments:

Post a Comment