மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
தெலுங்கருக்கும், தமிழ்வேந்தருக்கும் இடையே பல போர்கள் நடைபெற்றதென ஏற்கனவே குறிப்பிட்டது நினைவிருக்கத்தக்கது. தென்பாண்டி நாட்டில் தான் பாண்டியர் தெலுங்கரை நீண்டகாலம் எதிர்த்து வந்துள்ளனர் என அறிகிறோம். கயத்தாற்றில் பஞ்ச பாண்டியராகிய ஐவர் இராசாக்களுக்கும், நாயக்கருக்கும் இடையே நீண்ட காலம் போர் நடந்திருக்கின்றது. பஞ்சபாண்டியர் படையை எதிர்க்க நாயக்கர் தரப்பில் அரியநாதன் படைத்தளபதியாக அனுப்பப்பட்டான். பஞ்சபாண்டியரோடு நடத்திய போரில் அவன் (அரியநாதன்) வெற்றிபெறமுடியாது போய்விட்டதால், விசுவநாத நாயக்கன் தனது தலைமையில் புதுப்படையுடன் வந்து பஞ்சபாண்டியரை எதிர்க்க முற்பட்டான். பஞ்சபாண்டியர் படை வலிமையுடையதாய் இருந்ததால் நேருக்குநேர் போரிட்டு வெற்றி காண முடியாது என நினைத்த விசுவநாதன் அதைக் சூழ்ச்சி மூலம் வெல்லத் திட்டமிட்டான். நாயக்கர், பாண்டியர் இருவர் படைகளும் பொருதினால் இருதரப்பிற்கும் ஏராளமாய் ஆள்சேதம் ஏற்பட நேரிடுமென்றும், அதனால் இருபடைகளும் நேருக்கு நேர் மோதாமல் இருதரப்பிலும் ஒருவர் மட்டும் போரிடலாமென்றும், அப்போரில் இருதரப்பில் யார் வெற்றி பெற்றாலும் அதை அத்தரப்பு வெற்றியாக ஏற்றுக்கொண்டு, படைகளைக் கலைத்துவிட்டுப் போரை நிறுத்திவிட வேண்டுமென்றும் பஞ்சபாண்டியரோடு அவன் (விசுவநாதநாயக்கன்) ஒரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்தான். இத்திட்டத்திற்குப் பஞ்சபாண்டியரும் ஒப்புக் கொண்டனர். நாயக்கர் தரப்பில் விசுவநாத நாயக்கனே போரிட முன்வந்தான். பஞ்சபாண்டியர் தரப்பில் வீமன் பாண்டியன் முன்வந்தான். இருவருக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. இதில் விசுவநாத நாயக்கன் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தான். அவன் தரையில் குற்றுயிராய்க் கிடப்பதைப் போல் பாசாங்கு செய்ய, வீமன்பாண்டியன் குற்றுயிராய்க் கிடக்கும் எதிரியைத் தாக்குவது போர் மறத்திற்குப் புறம்பானது என்று கருதி வாளாமல் நிற்கும்போது, விசுவநாத நாயக்கன் திடீரென எழுந்து தனது ஈட்டியால் வீமன்பாண்டியன் வயிற்றில் குத்தினான். எதிர்பாராத நேரத்தில் விசுவநாதன் தாக்கியதால் வீமன் பாண்டியன் குடல் சரிந்து கீழே விழுந்து உயிர் நீத்தான். பண்டைத்தமிழர் பண்பாட்டுக் கொப்ப பாண்டியர் ஒப்பந்தப்படி வீமன்பாண்டியன் மரணத்தைத் தங்கள் தோல்வியாக ஏற்றுக்கொண்டு போரை உடனே நிறுத்திவிட்டுத் தமது படைகளைக் கலைத்தனர். இப்போருக்குப் பிறகும். கொற்கை, திருநெல்வேலி, தென்காசி, கரிவலம்வந்தநல்லூர் முதலிய இடங்களில் சிறுசிறு பகுதிகளைப் பாண்டியர் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. விசயநகர மற்றும் நாயக்கர் ஆட்சியின் போது தென்பாண்டி நாட்டில் இருந்து ஆட்சிசெய்த பாண்டியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் வருமாறு
சடையவர்மன் பராக்கிரமபாண்டியன் கி.பி. 1411 முதல் 1463 வரையில் அரசாண்டான். தமிழ் மொழி, வடமொழி இவற்றில் நன்கு தேர்ச்சியுடையவன். தென்காசிக்கோயிலை இவன் எடுப்பித்தான். விஸ்வநாதப் பேரேரியையும் இவன் வெட்டுவித்தான். சடாவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி.1429 முதல் 1473 வரை ஆட்சி புரிந்துள்ளான். இவன் பராக்கிரம பாண்டியன் தம்பியாவன். அண்ணனோடு சேர்ந்து இவன் ஆட்சிபுரிந்துள்ளான். அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன் மைந்தன். இவன் கி.பி.1473 முதல் 1506 வரை ஆட்சி செய்துள்ளான். சடையவர்மன் சீவல்லபாண்டியன் கி.பி. 1534 முதல் 1543 வரை ஆட்சி செய்துள்ளான். சடையவர்மன் பராக்கிரமகுலசேகர பாண்டியன், கி.பி.1543 முதல் 1552 வரை ஆட்சி செய்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுவதாகக் கூறுவர். நெல்வேலிமாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை ஆட்சி புரிந்துள்ளான். இவனுக்கு விர பாண்டியன், குலசேகரபாண்டியன், பொன்னின் பாண்டியன் தர்மப் பெருமாள், அழகன் பெருமாள் என்ற வேறு பெயர்களுமுண்டு. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி.1564 முதல் 1604 வரை ஆட்சி செய்தான். இவன் தென்காசியில் தன் தந்தை நெல்வேலி மாறன் நினைவாகக் குலசேகரமுடையார் ஆலயம் ஒன்றைக்கட்டினான். இவன் ஒரு சிறந்த தமிழ்ப் புலவன் நைடதத்தை வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தான். இவன் கூர்மபுராணம், வாயு சங்கிதை, காசிகாண்டம், இலிங்கபுராணம், நறுந்தொகை முதலிய நூல்களை இயற்றினான். வரதுங்கராம பாண்டியன் பராக்கிரமபாண்டியனின் இரண்டாவது மகன். இவன் கி.பி. 1588 - ல் முடி சூட்டப் பெற்றுள்ளான். அதிவீர ராம பாண்டியன் காலத்தில் கரிவலம் வந்த நல்லூரில் இருந்து தென்பாண்டி நாட்டில் ஒரு பகுதியை இவன் ஆட்சி புரிந்துள்ளான். இவனும் தமிழில் புலமையுடையவன். பிரமோத்த காண்டம், கருவைத்துறையந்தாதி, கருவைப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி முதலிய நூல்களை இயற்றினான். வரகுணராமகுலசேகர பாண்டியன் கி.பி. 1613 - ல் முடி சூடியவன். இவன் முந்தைய பாண்டியர்க்கு எவ்விதத்தில் உறவினன் என்பது தெரியவில்லை. இவன் வேதவிதிப்படி வேள்விபுரிந்துள்ளான். அதனால் குலசேகரசோமாசியார் என அழைக்கப்பட்டான். கி.பி.1788 - ல் ஒரு பாண்டியன் வரகுணராம பாண்டிய குலசேகர தீட்சிதர் என்று தன்னை அழைத்துக்கொண்டுள்ளான். பாண்டிய மன்னர் காலப்போக்கில் குறுநில மன்னராகி சமீன்தார் நிலையை எய்தி இறுதியில் தென்பாண்டி நாட்டில் ஒரு ஊரில் இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர் சதாசிவப் பண்டாரத்தார் கூறுவார். (T.V. சதாசிவப் பண்டாரத்தார் பாண்டியர் வரலாறு பக். 130).
பாண்டியர் இறுதிக்காலம் பற்றி பேராசிரியர் அ. இராமசாமி கூறுவதைக் காண்போம்: 'பிற்காலப் பாண்டியர் தங்களை சோமாசியார், தீட்சிதர் என்று பெருமையுடன் அழைத்துக் கொண்டனர். வீழ்ச்சியின் விழியில் தொங்கிக் கொண்டிருந்த இவர்கள் தங்கள் புகழ் மிக்கமுன்னோர்கள் உடையார், தேவர் என்று பெருமையுடன் அழைத்துக் கொண்ட மரபை விட சோமாசியார், தீட்சிதர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டனர். (அ.இராமசாமி, எம்.ஏ.சி.ஏப் தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும் பக். 365 )
பாண்டியர் மறைவு பற்றி குடந்தை N. சேதுராமன் கூறுவதாவது: "மகாபாரதக் காலத்திலிருந்து அசோகன் காலம், சங்ககாலம், தேவாரகாலங்களில் மகோன்னத நிலையில் இருந்த பாண்டியவம்சம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் காற்றோடு கலந்து மறைந்து போயிற்று. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற கோயில்களும், கல்வெட்டுகளும், பாண்டிய வம்சத்தை நமக்கு எப்போதும் நினைவூட்டு கின்றன. (குடந்தை N. சேதுராமன் பாண்டியர் வரலாறு பக். 248)
T.V.சதாசிவ பண்டாரத்தார் பாண்டியர் மறைவு பற்றிக் கூறுவதாவது: “நம் தமிழகத்தின் தென்பகுதி தம் பெயரால் என்றும் நின்று நிலவுமாறு சரித்திரகாலத்திற்கு முன் தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் ஆட்சிபுரிந்துவந்த தமிழ் வேந்தர்களான பாண்டியர்கள் தம் நாட்டை இழந்து சிறுமையுற்றுச் சீர்குலைந்தமை கால வேறுபாட்டினால் நிகழ்ந்த மாறுதலேயாம்!” (T.V.சதாசிவ பண்டாரத்தார் பாண்டியர் வரலாறு பக். 130)
சங்க காலத்தில் ஆட்சி செய்த அதே மரபினர்தான் களப்பிரர் இடையூட்டுக்குப் பின்னும் தமிழகத்தில் ஆட்சி செய்தனரா? என்பது பற்றிப் பார்ப்போம். வேள்விக்குடி செப்பேட்டில் பாண்டியன் நெடுஞ் சடையன் பராந்தகன் முன்னோரைப் பற்றி
“கொல் யானை பல வோட்டிக் கூடா மன்னர் குழாந்தவிர்த்த பல்யானை முது குடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதி ராசனால்”
எனவரும் அடிகளும், தளவாய்புரம் செப்பேட்டில் சடையவர்மன் பராந்தகப்பாண்டியன் முன்னோரைப்பற்றி
“அகத்தியனோடு தமிழாராய்ந்தும்
மண்ணதிரா வகைவென்று தென்மதுராபுரஞ்செய்தும்
அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இர்இத் தமிழ்வளர்த்தும்”
எனவரும் அடிகளும், மூன்றாம் இராசசிங்கபாண்டியன் முன்னோரைப் பற்றிச் சின்னமனூர் செப்பேட்டில்
“தென் தமிழ் கரைகண்டும்
வெம்முனை வேலொன்றுவிட்டும்
விரைவரவிற் கடன் மீட்டும்
பூழியனெனப் பெயரெய்தியும்
போர்க்குன்றாயிரம் வீசியும்
பாழியம் பாயிலினி மீர்ந்தும்
பஞ்சவ னெனப் பெயர் நீறிஇயும்
வளமதுரைநகர் கண்டும்
மற்றதற்கு மதில் வகுத்தும்
உளமிக்க மதியனாலொண்டமிழும் வடமொழியும்
பழுதறத்தானாராய்ந்து பண்டிதரின் மெந்தோன்றியும்”
எனவரும் அடிகளும் கூறுகின்றன.
(தொடரும்)
No comments:
Post a Comment