மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
பள்ளர் தம்மை இந்திரகுலம், தேவேந்திரகுலம் என்று கூறிவருவது தாம் அரசமரபினர் என்பதினாலேயாம். ஏற்கெனவே கூறியபடி, தமிழ் மூவேந்தரும் ஏன்? தென் இந்தியாவிலுள்ள பண்டையமன்னர் பலரும் தேவேந்திர வல்லவன், தேவேந்திரச் சக்கரவர்த்தி, இந்திரன் என வழங்கி வந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழமன்னன் இராசராசனுக்கு தேவேந்திரச்சக்கரவர்த்தி, தேவேந்திர வர்மன் என்ற பட்டங்கள் உண்டு. முதற்பராந்தகனுக்கு தேவேந்திரன் ச(க்ர)வத்தி (ஸ்ரீ) வீர நாராயண ஸ்ரீபராந்தகத் தேவராகிய பரகேசரி வர்மன் ஸ்ரீமுகம் (ARE 1904) என்ற கல்வெட்டு சான்று பகரும். சோழமன்னன் தேவேந்திரன் என வழங்கினான் என்பது சென்னை கீழ்த்திசை நூலகத்தார் வெளியிட்டுள்ள மூன்று தமிழ் நாடகங்கள் என்ற நூலில் சோழ ராசேந்திரன் வந்தானே, தேவேந்திரரெனச் சோழ ராசேந்திரன் வந்தானே, என்று கண்டுள்ளதால் விளங்கும்(T. Chandrasehar MALT மூன்று தமிழ் நாடகங்கள் Madras Government Oriental Series)
சேர மன்னருக்கு “இந்திரன்” என்ற பட்டம் ஏற்பட்டிருந்ததாகக் கேரளோற்பத்தி, கேரளவிசாக மான்மியம், கொச்சின் சமத்தான 1875 - 76 ஆம் ஆண்டு நிருவாக அறிக்கை கூறுவதை அறிவோம்.(K.P. Padmanabha Menon History of Kerala) கங்கம், கலிங்கநாட்டு மன்னரும் தேவேந்திரக் சக்கரவர்த்தி தேவேந்திரவல்லவன் என்ற பட்டங்கள் பூண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த மன்னர் எல்லாம் இவ்வாறு வழங்கியதற்குக் காரணம், அவர் திராவிடராகிய மள்ளர் / மல்லர் குடியினர் என்பதனாலேயே எனலாம்.
தமிழ் வேந்தர் ஆட்சி காலத்தில் அவரது மரபினர் வாழ்ந்த பகுதிகள் தேவேந்திர வீதி, தேவேந்திரர் தெரு, தேவேந்திரர் குடியிருப்பு என வழங்கியதாக அறிகிறோம். ஆனால் தமிழ்வேந்தர் ஆட்சிமுடிவுற்று, அந்நியர் ஆட்சி ஏற்படவும், அவர் (தேவேந்திரர்) வாழ்ந்த இடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றில் அந்நியர் குடியேற்றப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிகிறது. இதற்குத் தஞ்சை நகரில் தேவேந்திரர் தெரு இருந்தது அழிக்கப்பட்டது என்பது தனிப்பாடல் திரட்டில் “போர் வேந்தர் போர் மாளப் போர் மாளுறை கழிந்த தேர் வேந்தர் தஞ்சைத் தெரு” எனக் கண்டுள்ளதால் அறியலாம்.
கோயம்புத்தூர் நகரமன்றத்திற்கு அருகாமையில் தேவேந்திரர் தெரு இருப்பதுவும் ஆதில் பள்ளர் குடியிருந்து வருவதுவும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. பாண்டிய நாட்டில் இம்மரபினர் குடியிருப்பதைத் தேவேந்திரர் தெரு என வழங்கி வருகின்றனர். இம்மரபினர்க்கெனத் “தேவேந்திர குல வேளாளர் சங்கம்” இருந்து வருவதும் அறியத்தக்கது. இவரது தொழில் மக்களாகிய குருக்கள், வண்ணார், நாவிதர் தங்களைத் “தேவேந்திரக் குருக்கள், தேவேந்திர வண்ணார், தேவேந்திர நாவிதர்” என்று வழங்கிய வருவதுவும் இவர்கள் பிற மக்களுக்குத் தொழில் செய்ய மறுப்பதுவும் குறிப்பிடத்தக்கது. நாயக்கர் ஆட்சி காலத்தில் இம்மரபினரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு தோன்றிய பள்ளு நூல்கள், பள்ளு நாடகங்கள் மூலம் பரப்பப்பட்ட பள்ளர் என்பதின் இயற்பெயருக்கு முன் பள் - பள்ளன் எனச் சேர்த்து வழங்கி வந்திருக்கின்றனர். இதற்கு அக்காலத்தியக் கல்வெட்டுகள் சான்றாக அமையும். (தென்னிந்திய கோயில் சாசனங்கள் பாகம் II. எண் 796D 2985) ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பகாலத்திலும் அப்பழக்கம் பின்பற்றப் பட்டு வரலானது எனத்தெரிகிறது. அதை நடை முறைப்படுத்த நிலக்கிரையம், ஒத்திப் பத்திரங்களில் இம்மரபினர் பெயர்களுக்கு முன் பள் பள்ளன் என்ற அடை மொழிகளும் சேர்க்கப்பட்டு (பள் - இராமன், பள் - முருகன்) வந்திருக்கின்றன. இப்பழக்கத்தை இம்மரபினர் ஆட்சேபித்து ஆங்கிலேய அரசுக்கு முறையிடப் பள் - பள்ளன் என்ற அடை மொழிகளைப் பத்திரங்களில் குறிப்பிடும் வழக்கம் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதில் தேவேந்திர குலம், இந்திர குலம் எனப் பதிவு செய்ய ஆங்கில அரசு அணை பிறப்பித்ததாகத் தெரிகிறது.
இவர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மற்ற மரபினர்க்கு இல்லாமல் இவருக்குமட்டும் தனியாய்க் குருக்கள், வண்ணார், நாவிதர் இருந்து வருவது இவரது தனித் தன்மைக்கு சான்றாக அமையும். மேலும் இம்மரபினரை அண்டிப்பிச்சை எடுப்பவர்த் தம்மை "தேவேந்திரப் பிச்சைக்காரன்” என்றும் இவர் மத்தியில் கூத்து மூலம் பிழைப்பு நடத்தி வருபவர் தம்மைத் “தேவேந்திரக் கூத்தாடி” என்றும் இவரது நன்மை துன்மைக்கு மேளம் வாசிப்பவர் “தம்மைத் தேவேந்திர கொட்டுக்காரர்” என வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது (F.R. Hemingsway Trichirapalli Dt, Gazetteer P.129) சாதி இந்துக்கள் என இன்று வழங்குவோர் பல்வேறு பிரிவினரைச் சேர்ந்தவர் ஆவார். அவ்வாரிருந்தும் ஏற்கனவே கூறியபடி இவர்கள் சாணார் (நாடார்) கொங்கு வேளாளர் (கவுண்டர்) தவிர்த்து மற்ற எவருக்கும் தனியாய் வண்ணார், நாவிதர் இன்றி அனைவருக்கும் பொதுவாய் ஒரே வண்ணார், நாவிதர் இருந்து வருவது இவரிடம் தனித் தன்மை இல்லாததைக் காட்டுகின்றது. மேலும் இவர்களுக்கு நன்மை துன்மைச்சடங்குகள் நடத்திவைப்பவர் தெலுங்குப் பார்ப்பனப் புரோகிதர் ஆவர். இவை எல்லாம் இவர் நாயக்கர் ஆட்சியில் தோற்றமும், ஏற்றமும் பெற்றவர் என்பதை எடுத்துக் காட்டுவதியுள்ளது.
பள்ளர் குடியிருப்பு அமைப்பு :
பள்ளர் குடியிருப்பு பொதுவாய் ஊர்நத்தத்தின் கீழ் பகுதியிலும், சாதி இந்துக்கள் என்போர் குடியிருப்பு அதன் மேல் பகுதியிலும் அமைந்திருப்பதை யாவரும் அறிவர். இதன் காரணம் யாது? சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பதால் அது உயர்வைக் குறிக்கும் என்பர். பண்டைய நாளில் மருதநிலத்தில் மட்டும் ஊர்கள். நகரங்கள் தோன்றியதாகவும், காட்டுவாணர் மற்றும் வேற்றுநாட்டினர் தாக்குதல், படையெடுப்பு இவற்றிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள இங்குள்ள மக்கள் ஊர் நகரங்களைச் சுற்றிக்கோட்டைகள் எழுப்பியதாகவும் இது பற்றித் தொல்காப்பியம் “உழிஞைதானே மருதத்துப்புறனே” என்று கூறுவதாகவும் ஏற்கனவே கண்டோம். கோட்டைகளின் பிரதான நுழை வாயில்களைப் பொதுவாய் அவற்றின் கீழ்புறமே அமைப்பதும் மாற்றார் கோட்டைகளைப் பிடிப்பதற்கு அதன் வாயிற்புறமிருந்தே அவற்றை தாக்குவதும் வழக்கம். எனவே கோட்டைப்பாதுகாப்புக்காக அதன்வாயிற்புறமாகிய கீழ் புறத்திலேயே மருதநிலமக்களாகிய மள்ளர் மல்லர் குடி அமர்ந்தனர். இவர் ஏருக்கு உழவர்; போருக்கு மறவர் என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. கோட்டையின் மேல் பகுதியில் பல்வேறு தொழில் மக்கள் குடியிருந்தனர்.
சூரியன் உதிக்கும் கீழ்திசை இந்திரனுக்கு உரியது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பள்ளர் இந்திரகுலம், தேவேந்திரகுலம் என்பதால் இந்திரனுக்கு ஏற்பட்ட கீழ்திசையை இவர்கள் தங்கள் உறை விடமாய்க் கொண்டனர். அதன் காரணமாகவே ஊர்ப்புறங்களில் இவர் நத்தத்தின் கீழ்பகுதியில் குடிஇருந்து வருகின்றனர். அதோடு பண்டைய நாளில் இவர் சூரிய வழிபாடுடையவர் எனத் தெரிகிறது. இதற்குச் சிலப்பதிகாரம் சான்று பகரும். கி.பி.17 ஆம் நூற்றாண்டில் பஞ்சாபில் உள்ள மல்தான் (Multan) என்ற நகரில் சூரியனுக்கு பழைய கோயில் ஒன்று இருந்ததென்றும், மல்தான் என்னும் இடம் மல்லர் அல்லது மள்ளர் வாழ் இடமாய் இருந்ததாகவும் மள்ளர் என்பது இன்று பள்ளர் என வழங்குவதாகவும் பண்டிதசவரிராயர் கூறியுள்ளது நாம் அறிந்ததுவே. (ந.சி. கந்தையா பிள்ளை. தமிழ் சரித்திரம், பக். 206) ஏற்கெனவே கூறியபடி, இவர் சூரிய வழிபாடு உடையவர் என்பதால் தமது குடியிருப்புகளை நத்தத்தின் கீழ்பகுதியில் அமைந்துள்ளனர் என்பது தேற்றம். பொதுவாய் எல்லா ஆலயங்களும் கிழக்கு நோக்கியே அமைத்திருப்பதை நாம் அறிவோம். இதுவும் கிழக்குத் திசையே மற்ற எல்லாத் திசைகளையும் விட உயர்வானது என்பதை எடுத்துக் காட்டுவதாயுள்ளது. கோட்டைகள் அமைப்பு பற்றி கெளதல்யர் அர்த்த சாஸ்திரம் (தமிழாக்கம்) பக். 150 -ல் விரிவாய்ப் பேசப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகப் பள்ளர் தாம் தேவேந்திரகுலத்தார் என்பதற்கு அடையாளமாய் நத்தத்தில் இந்திரனுக்கு உரிய கிழக்கு திசையில் தமது குடியிருப்பை அமைத்துள்ளனர் என நாம் முடிவு கொள்ளலாம்.
(தொடரும்)
No comments:
Post a Comment