மள்ளரிய தந்தை
இரா. தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
மற்ற சிறப்புக்கள்:
கரிவலம்வந்த நல்லூர், சிவிலிபுத்துர் கல்வெட்டுகள் இம் மரபினர்க்கு கெராடி, பகற்பந்தம், பாவாடை, இரட்டைச் சிலம்பு, இரட்டைக் கொடுக்கு முதலிய சிறப்புக்களைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வழங்கியதாகக் கூறுவதை நாம் அறிவோம். இச்சிறப்புக்களை வேறு ஒரு மரபினர்க்கும் மன்னர் வழங்கினார் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. கோயில் திருவிழாக்களில் நாற்று நடவு, கதிர் அறுவடை உற்சவங்ககளில் இம்மரபினர் பங்கேற்று வருவதைக் காணலாம். கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரில் நாற்று நடவு உற்சவத்தில், இம்மரபினர் பங்கேற்று வருவது கண்கூடு. (திருப்பேரூர் புராணச் சுருக்கம், பக்கம் - 59) வேறு பல இடங்களிலுமுள்ள முக்கியமான ஆலயங்களிலும் இவ் உற்சவங்களில் தேவேந்திர குலத்தார் பங்கேற்று வருவதாக அறிகிறோம். கோயில் உற்சவத்தில் இம்மரபினர்க்கெனத் தனிமண்டபப்படி உண்டு.
கரிவலம் வந்த நல்லுர், சங்கரன்கோயில் முதலிய இடங்கில் உள்ள ஆலயங்களில், இந்த மண்டபப்படி தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிகிறது. பட்டுக்கோட்டை போன்ற ஒரு இடங்களில் இவர்கள் மண்டபப்படி உரிமையை பிற மரபினர்க்கு விட்டு விட்டதாகவும் தெரிகிறது. அனேக இடங்களில் சிமீப காலமாய் அரசியலில் ஆதிக்கம் பெற்று வரும் மரபினர் அடக்குமுறை காரணமாய், இவர் தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர் எனலாம். கோயில் தேரோட்டத்திற்கு இம்மரபினர் தலைவர்களைக் கோயிலார்; கோயில் யானை, மேளதாளம், வெண் வட்டக்குடை, பகற் பந்தம் முதலிய சிறப்புக்களுடன் கோயிலுக்கு அழைத்துவந்து, அவர்களுக்குப் பரிவட்டம் கட்டி அவர்களைத் தேர்வடத்தைத் தொட்டுக் கொடுக்கும்படி வேண்டுவர். ஏற்கனவே கூறியபடி, இம்மரபுத் தலைவர்கள் தேர் வடத்தைத் தொட்டுக் கொடுத்த பின்னரே பக்தர்கள் தேரை தெருவீதிகளில் இழுத்துச் செல்வதுண்டு.
இவ்வழக்கம் பண்டையநாளில் எல்லா இடங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது. கோயில் யானை, மேளம் முதலியவற்றை இம்மரபினர் தலைவர்களை அழைக்க அனுப்புவதற்குப்பதில், சில இடங்களில் கோயிலார், சிறிது பணம் கொடுத்து இவர்களையே மேளம் அமர்த்திக்கொண்டு கோயிலுக்கு வரும்படி செய்து வருவதாகவும் தெரிகிறது. திருநெல்வேலி நெல்லையப்பர், சங்கரன் கோவில் முதலிய இடங்களில் உள்ள ஆலயங்களில் இவ்வித மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவர். மதுரை தெப்பக்குளம், மதுரை மாவட்டம் சின்னமனூர், சோழவந்தான், கோவை மாவட்டம் பேரூர், அவிநாசி முதலிய இடங்களில் உள்ள ஆலயங்களில் பழைய முறைப்படி சில மாறுதல்களுடன் இவ்வழக்கும் அமுலில் இருந்து வருவதாக அறிகிறோம்.
ஊர்ப் பொதுக் கோயில்களின் உற்சவங்களில் இம் மரபினர்க்கு முதல் மரியாதை அளிக்கப்படும். சாத்தான், அம்மன், அய்யனார் முதலிய கோயில்களில் புசாரியாக பணிபுரிபவர் பெரும்பாலும் இம்மரபினரே. அருள் ஏறி ஆடுபவரிடம் வரம் வேண்டுபவர் சாதி வேறுபாடின்றி அவரது காலில் விழுந்து வணங்குவதுண்டு. இப்பழக்கதைப் பாண்டிய நாட்டில் பரவலாகக் காணலாம். ஊர்ப்புறங்களில் ஏரி மடைவாரியம் பார்ப்பவர் இம்மரபினரே. பொன்னேர், நாள் ஏர் கட்டுபவரும் இம்மரபினரே. இவர் பொன்னேர் நாள் கட்டிய பிறகே, மற்ற வகுப்பார் பெரியநிழக்கிழார்கள் உட்பட ஏர் கட்ட வேண்டும். இதற்குக் காரணம் மள்ளர் - பள்ளர் (தேவேந்திரகுலத்தார்) தான் வேளாண் மரபினர் என்பதுவே. பாண்டிய நாட்டில் இம்மரபினர் மணவிழாக்களில், பட்டினப் பிரவேச ஊர்வலங்களில் வீதியில் மாற்று விரிப்பதுண்டு. பட்டினப்பிரவேசம் இரதங்களில் நடைபெறும். முகூர்த்த ஓலை எழுதி மணவிழாவை ஊராருக்கு முரசொலி ஒலித்து அறிவிக்கும்போது, இராசாதி இராசன், இராசமார்த்தான்டன், இராச மகேந்திரன், இராசகம்பீரன், வெள்ளையானை மீது ஏறிவரும் விருது பெற்ற பாண்டியன், கொத்துக்கு இரத்னாதி முத்தளந்த குபேந்திரன் கொழுந்தியாளை மாலையிடப் போகிறான். இவன் சொல்லுக்கு அரிச்சந்திரன், சோலை கிழிப்பாண்டியன், இவன் காலால் உழப்பியதெல்லாம் செந்நெல் விளையும்; அதனால் தேவாதி தேவர்க்கெல்லாம் அமுதம் உண்டாகும்; செகத்தினை அரசு புரியும் மன்னர் செங்கோல் தேவேந்திரனின் உழவு கோலுக்கு ஈடாகாது. முப்பது முக்கோடித் தேவர், நாற்பத்தெண்ணாயிரம் ரிசிகள் இவர்களுக்குக் கெல்லாம் அதிபதியாய் இருந்தவன் தேவேந்திரன் எனப் பலவாறு, புகழ்ந்து வாழ்த்துவதுண்டு.
ஏற்கனவே கூறியதுபோன்று மணவிழாவில் மணமகனைப் பாண்டியரோடும், பஞ்சபாண்டவரோடும் தொடர்புபடுத்தி வாழ்த்துவதுண்டு. (குறிப்பு: பஞ்ச பாண்டியருள் ஒருவனாகிய அர்ச்சுனனுக்கு பாண்டியன் மகளாகிய அல்லி அரசாணியைப் பெண்கேட்டுத் தருமர் பீமன் முதலானோர் பாண்டியரிடம் வருவதாகவும்: முகூர்த்த ஒலை எழுதி நாட்டிலுள்ள எல்லா மன்னருக்கும் அனுப்புவதாகவும், மணவிழாவிற்கு எல்லா மன்னரும் வருவதாகவும் வாழ்த்துவது உண்டு.) மணமக்களுக்குப் பிறந்த இடத்திலிருந்தும், தாய்மாமன்மார்களிடமிருந்தும் தரப்படும் சீர்வரிசைகள், மண விருந்துக்குப் புழுங்க வைத்த நெல்வகைகள் முதலியவை மண வாழ்த்தில் இடம்பெறும், பாண்டிய நாட்டில் இம்மரபுத் தாய்மார் தாலாட்டும்போது மதுரைச் சொக்க நாதரை உழவனாகவும், அம்மை மீனாட்சியை உழத்தியாகவும் வருணித்துப் பாடுவது உண்டு (பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் ; மூவேந்தர் யார்? முற்பகுதி பக்கம் 130 – 32) பார்க்க தாய் மாமனைப் பற்றித் தாலாட்டில், 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாத செந்நெல்லென்று யானை கட்டிப் போரடித்தார் உன் அம்மான் என்று ஏற்றிப் பாடுவர். தாலாட்டில் பாண்டிய நாட்டில் சோழனோ உன் அம்மான் என்றும், சோழ நாட்டில் 'பாண்டியனோ உன் அம்மான் என்றும் விழித்துப் பாடுவதுண்டு. இவ்வாறெல்லாம் பாடுவது இவர் அரசமரபென்பதையும், பண்டைய நாளில் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்த பெருங்குடியினர் என்றும், சோழ பாண்டியரிடையே மன உறவு இருந்து வந்ததையும் வெளிப்படுத்துவதாயுள்ளது. கூன் பாண்டியன் சோழ இளவரசி மங்கையர்க்கரசியை மணந்திருந்தது நினைவிருக்கத்தக்கது.
(குறிப்பு : இந்த இருவருடைய சிலைகள் மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.) புராணகாலத்து மலையத்துவசப் பாண்டியன் மனைவி காஞ்சன மாலை சூரியகுலத்து மன்னனான சூரசேன சோழனது மகள் என்பதுவும், சுந்தர பாண்டியனுக்கும் தடாதகைப் பிராட்டியாகிய அம்மை மீனாட்சிக்கும் பிறந்த உக்கிர பாண்டியனுக்கு சூரிய குலத் தோன்றலாகிய வட நாட்டின்கண் கல்யாணவுரம் என்ற பேரூரின் வேந்தன் சோமசேகரன் மகளாகிய காந்திமதியைப் பெண் கொண்டதுவும் ஈண்டு குறிப்பிடத் தக்கது. (திருவிளையாடற் புராணம் பார்க்கவும்) இராமநாதபுரம் மாவட்டம் இராபாளையத்தில் நடைபெறும் சித்திரா பெளர்ணமிவிழா இங்கு குறுப்பிடத்தக்கது. இந்நகருக்கு அருகில் உள்ள அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் வருடப் பிறப்பன்று இம்மரபினரின் தலைவர்கள் யானைமேல் ஏறிவெண்கொற்றக்குடையுடன் காலில் இரட்டைச்சிலம்பு அணிந்து மேளதாளத்துடன், ஊர்வலமாய்ச் சென்று இந்திரவிழா எடுப்பதுவும் அறியத் தக்கது. (பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் மூவேந்தர் யார்? முற்பகுதி பக். 8) இப்பல்வேறு அக புறச்சான்றுகளால் மள்ளர் - பள்ளர் தேவேந்திரகுலத்தார்தான் திராவிட இனத்தைச் சேர்ந்த சேர, சோழ, பாண்டிய மரபினர் என நாம் முடிவு கொள்வோம்.
(தொடரும்)
No comments:
Post a Comment