மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
ஆற்றுக் காலாட்டியர்:
ஆற்றுக் காலாட்டியர் என்பது ஒரு பிரிவினர் சங்க இலக்கியங்களில் இடம் பெறக்காணோம். இடைக்கால இலக்கியங்களிலும் இது அருகியே காணப்படுகின்றது. கிபி. 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பள்ளு இலக்கியங்களில் இது இடம் பெற்றுள்ளது.
உழவர்:
நச்சினார்க்கினியர் உழவர் பற்றிக் கூறுவதாவது: மன்னர் பின்னோ ரென்ற பன்மையான முடியுடையோரும், முடியில்லாதோரும் உழுவித் துண்போரும், உழுதுண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார். அவருள் உழுவித்துண்போர் மண்டல மாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழ நாட்டுப்பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமுங்கிழாரும் முதலிய பகுதியிற்தோன்றி வேளெனவும், அரசெனவும் உரிமை எய்தினோரும் பாண்டி நாட்டு காவிதிப் பட்டமெய்தினோரும் குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகும். இருங்கோவேள் மானங்காடிப் பிடவூர்எனவும், ஆலஞ்சேரி மாயிந்தலூருண் சோனி நீரோட்பொன் எனவும் சான்றோர் செய்யுள் செய்தார். உருவப்பஃதேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கோடலும், அவன் மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட் கோடலும் கூறுவர். இந்த உழுதுண்ணும் வேளாளர், உழுவித் துண்ணும் வேளாளர் யார்? யார்? என்பதை இதுவரை தமிழறிஞர் ஒருவரும் அருதியிட்டுக் கூற முன்வரவில்லை. பலதரப்பட்ட பிரிவினரும் இன்று உழவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவரனைவரும் வேளாளர் என வழங்கவில்லை. மாறாக, சில குறிப்பிடட பிரிவினர் மட்டும் வேளாளர், வெள்ளாளர் என வழங்கிவருகின்றனர். ஆனால் இவர்கள் உழவுத் தொழிலில் குறிப்பாக வயல் உழவில் நேரிடையாய் ஈடுபடுவதில்லை. ஒருவேளை இவர் பண்டைய நாளில் உழவுத் தொழிலில் ஈடுபட்டுப் பின்னர் அதை விட்டு விட்டனரா? பண்டைய நாளில் உழவர் உயர் குடியாக மதிக்கப்பட்டனர் என்பது .
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - அதனால்
உழந்தும் உழவே தலை” (குறள் 1031)
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)
“உழுவான் உலகத்தார்க்கு ஆணி - அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து (குறள் 1032)
என்ற ഖள்ளுவர் வாக்கால் நன்கு விளங்கும். பண்டைய நாளில் உழவர் வயலுழவராக மட்டும் இருந்ததில்லை. அவர் “வில்லேருழவர்” (குறள் 872) “வாளேருழவர்” (புறம் 368) எனப் போற்றப்பட்டனர். இதனாலேயே வள்ளுவர் உழவரை உலகத்தார்க்கு ஆணி என்று கூறுலானார். இத்தகைய உழவர் குடியினர் சங்க இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றனர் என்பது பற்றிப் பார்ப்போம்.
“பழன மஞ்ஞை யுகுத்த பீலி
கழனி உழவர் சூட்டோடு தொகுக்கும் (புறம் 13 – 10 - 11)
“மென் புலத்து வயலுழவர்
வன்புலத்துப் பகடு விட்டு” (புறம் 395 – 1 - 2)
“வீழ்குடி உழவன் வித்துண்டா அங்கு (புறம் 230 - 13)
“தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பின் “ (பெரும் 355)
“கொடுமேழி நசையுழவா” (பட்டினப்பாலை 205)
“வைகல் உழவ வாழிய பெரிது எனச்” (புறம் 392 - 11)
(உழவ - அதியமான் நெடுமானஞ்சி மகன் பொருட்டெழினியைக் குறிக்கிறது.)
“பழன உழவர் பாய் புனல் பரத்தந்து” (பரிபாடல் 7 - 39)
“வீழ்குடி உழவரோடு விளங்கிய கொள்கை” (சிலம்பு புகார் 5 - 44)
“ஓர்ஏர் உழவன் போல” ( குறுந்தொகை 131 - 5)
“இரப்போர் இரங்கும் இன்னாவியன் களத்து
ஆள் அழிப்படுத்த வாளேர் உழவ! (புறம் 368 - 12 - 13)
(வாளேர் உழவ. இது சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனைக் குறிக்கிறது)
மேலே கண்ட இலக்கிய மேற்கோள்களிலிருந்து தமிழ் வேந்தருள் சிலர் உழவராகப் பேசப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
No comments:
Post a Comment