மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசு வலு விழந்தது. முகமதியர் அடிக்கடிதமிழகத்திற்குள் புகுந்து ஆலயங்களை இடித்து அவைகளிலுள்ள பொன்னாபரணங்களையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொள்ளையடித்து ஊர்களைக் கொழுத்தி, மக்களைக் கொன்று குவித்திருக்கின்றனர். ஒரு சில வரலாற்றாசிரியர் குலசேகரபாண்டியன் தன் பட்டத் தரசி மகன் சுந்தரபாண்டியனுக்குப் பட்டம் சூட்டாமல், தன் காதற்கிழத்தி மகன் வீரபாண்டியனுக்குப் பட்டம் சூட்டியதாகவும், அதனால் சுந்தரபாண்டியன் வெகுண்டு தன் தந்தை குலசேகர பாண்டியனைக் கொலை செய்து விட்டதாகவும், அவனே மாலிக்கபூரைப் பாண்டிய நாட்டின் மீது படை எடுக்க அழைத்து வந்ததாகவும் கூறுவர். ஆனால் இக்கூற்றுக்களை குடந்தை N.சேதுராமன் மறுக்கிறார். இவர் சுந்தரபாண்டியன் தன் தந்தையைக் கொலை செய்யவில்லை என்றும், மாலிக்கபூரைப் பாண்டிய நாட்டின் மீது படை எடுக்க அழைத்து வரவில்லை என்றும், குலசேகர பாண்டியன் மாலிக்கபூர் படை எடுப்பிற்குப் பின் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்ததாகவும், அவன் இயற்கை மரணம் எய்தியதாகவும், வீரபாண்டியனும் அவன் தம்பி சுந்தரபாண்டியனும் சேர்ந்தே மாலிக்கபூரை எதிர்த்துப் போரிட்டதாகவும், மாலிக்கபூரை அழைத்தவன் இராசேந்திர பாண்டியன் என்றும், அவன் குலசேகரபாண்டியன் தம்பி மகனாய் இருக்கலாம் என்றும், பின்னாளில் அவன் தன் தவறை உணர்ந்து சுல்தான் உறவை கத்தரித்துக் கொண்டு தன் சகோதரர்களான வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் இவர்களோடு சேர்ந்துகொண்டதாகவும் கூறுவார். (குடந்தை N.சேதுராமன் பாண்டியர் வரலாறு பக். 145)
கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலிக்கபூர் பாண்டிய நாட்டில் புகுந்து கொலை, கொள்ளைகள் பல நடத்தித் திரண்ட செல்வத்தை யானைகள், வண்டிகள் இவற்றில் ஏற்றி டில்லிக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். பாண்டியர் படையில் துருக்கர் 20,000 பேர் இருந்தனர் என்றும், மாலிக்கபூர் படை எடுப்பின் போது அவர்கள் பாண்டியனுக்கு எதிராக மாலிக்கபூருடன் சேர்ந்துகொண்டதாகவும் சில வரலாற்றாசிரியர் கூறுவர். இவரது துரோகச் செயலின் காரணமாய்ப் பாண்டியர் படை வலுவிழந்து மாலிக்கபூரை விரட்டியடிக்க முடியாது போய் விட்டது போலும். இக்காலக் கட்டத்தில் பாண்டியர் கீழிருந்த குறுநில மன்னர்கள் பாண்டியர் ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுயாட்சி நிலை எய்தினர். இச்சமயத்தில் சேர மன்னன் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்து அதன் வடக்கிலுள்ள சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். மதுரையை முகமதியத் தலைவன் ஜமாலுதீன் கைப்பற்றியதன் விளைவாய்ப் பாண்டியர் மதுரையைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிலை எழுந்தது. துருக்கர் மதுரையில் 40 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். இக்காலத்தில் அவர்கள் நடத்திய அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கி.பி. 14 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் விசயநகர அரசின் படைத்தலைவர்களில் ஒருவனாகிய குமாரகம்பண்ணன் மதுரை வந்து துருக்கருடன் பொருதி அவரைத் துரத்தி விட்டுத் தானே மதுரையில் இருந்து ஆட்சி புரிந்தான். துருக்கர்களை மதுரையை விட்டுத் துரத்துவதற்குப் பாண்டியர் உதவி புரிந்தனர். ஆனால் குமார கம்பண்ணன் ஆட்சியைப் பாண்டியரிடம் ஒப்படைக்காமல் அதைத் தானே வைத்துக் கொண்டான் என அறிகிறோம். குமாரகம்பண்ணனுக்குப் பின் அவன் மகனும், அதன் பின்னர் அவனது (குமாரகம்பண்ணன்) மருமகனும் ஆட்சி செய்தனர். அதன் பிறகு இலக்கண நாயக்கரும், மதன நாயக்கரும் மதுரைப் பகுதியை ஆண்டனர். இலக்கண நாயக்கர் பாண்டிய மன்னனுடைய வைப்பாட்டி, காளையார் கோவில் தாசி அபிராமி என்பவளின் மக்களாகிய சுந்தரத்தோள்மாவலிவாணாதிராயர், காளையார்சோமனார், அஞ்சாத பெருமாள், முத்தரசர் இவர்களை மதுரைக்கு அழைத்து வந்து பாண்டியனுக்குப் பிறந்த பிள்ளைகள் என்று பட்டம் கட்டி மதுரையை ஆண்டு வரச் செய்ததாகத் தெரிகிறது. இவர்கள் கி.பி.1428 முதல் 1477 வரை ஆட்சி செய்தனர் என்பர். பழைய பாண்டியர் வழி வந்தோர் இக்காலத்தில் மதுரையை விட்டுத் தெற்கே சென்றனர்.
முகமதியர் படையெடுப்பும், அதைத் தொடர்ந்து விசயநகர ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதன் விளைவாய் நாட்டில் குழப்பங்கள் மலிந்தன. பாண்டியர் வலிகுன்றி சிறுசிறு இடங்களைக் குறுநில மன்னர் நிலையில் ஆட்சி செய்துவந்தனர். சோழ பாண்டிய நாடுகள் மீது வடுகர் பல தடவை தாக்குதல்கள் நடத்திப் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நரச நாயக்கன் தமிழகத்திற்குள் புகுந்து ஏராளமான பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இக்காலத்தில் சேர மன்னருக்கும் பாண்டிய மன்னருக்கும் இடையே பல போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. விசயநகர அரசு கி.பி. 1565 - ல் முகமதியரால் தோற்கடிக்கப்பட அது வலிகுன்றியது. தமிழகத்தில் செஞ்சி, தஞ்சை மதுரை முதலிய இடங்களில் விசய நகர அரசுப் பிரதிநிதிகளாய் இருந்த தெலுங்கு நாயக்கர் தன்னுரிமை பெற்றனர். இக்காலத்தில் தெலுங்கர் பெருவாரியாகத் தமிழகத்தில் குடியேற்றப்பட்டு அரசு பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இதற்கு இடையே மதுரையில் விசய நகர ஆட்சிக்குத் திறை செலுத்தி வந்த சந்திரசேகர பாண்டியனை வீரசேகர சோழன் வென்று, பாண்டிய அரசையும் தன் வசப்படுத்திக் கொண்டான். இதுபற்றி சந்திர சேகரப் பாண்டியன் விசயநகர அரசனிடம் முறையிட, அவன் நாகம்மன் என்ற படைத்தலைவனைத் தெற்கே அனுப்பிவைத்தான். இவன் வீரசேகரனை. வென்று ஆட்சியை சந்திரசேகரபாண்டியனிடம் ஒப்புவிக்காமல் அதைத் தானே வைத்துக் கொண்டான். இங்கு கூறப்படும் வீரசேகர சோழன் தெலுங்குச்சோழன் எனக் கருதவேண்டியுள்ளது. ஏனெனில் சோழநாடு விசயநகர ஆட்சிக்கு உட்பட்ட போது, சோழ அரசவம்சம் முற்றிலும் மறைந்து விட்டதென்பர் வரலாற்றறிஞர். நாகம்மன் செய்கைபற்றி சந்திரசேகர பாண்டியன் விசயநகர மன்னனிடம் முறையிட நாகம்மநாயக்கன் மகன் விசுவநாதன் மதுரைக்கு அனுப்பப்பட்டான். இவன் தன் தந்தையை அடக்கி, அவனைக் கைதியாக விசயநகர அரசனிடம் அழைத்துப்போய் ஒப்பு வித்தான். விசயநகர மன்னன் விசுவநாதனின் வீரச்செயலைப் பாராட்டி அவனையே மதுரையில் தனது பிரதிநிதியாக இருந்து ஆளும்படி செய்தான். கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் சந்திரசேகர பாண்டியனோடு பொருதிய வீரசேகர சோழனைத் தவிர, இன்னுமொரு சோழ இளவரசன் கூடலூர்ப் பள்ளத்தாக்கில் நாயக்கர் ஆட்சியை எதிர்த்துப் போர் தொடுத்திருக்கின்றான். மதுரையை விட்டுத்தெற்கே சென்ற பாண்டியர் கொற்கை, திருநெல்வேலி, தென்காசி, கரிவலம் வந்த நல்லூர் முதலிய இடங்களிலிருந்து ஆட்சிசெய்து வந்திருக்கின்றனர். நாயக்கர் ஆட்சியை எதிர்த்துத் தமிழ் மன்னர் குறிப்பாகப் பாண்டியர் பல போர்கள் நடத்தியிருக்கின்றனர். இக்காலத்தில் கன்னடியர், தெலுங்கர், பார்ப்பனர் இவர்களைத்தவிர தொண்டை மண்டலத்திலிருந்து பலர் வரவழைக்கப் பட்டு சோழ பாண்டிய நாடுகளில் அரசுபணிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். படைத்தொழில், வரிவசூல், கணக்கெழுதுதல் முதலிய பணிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
(தொடரும்)
No comments:
Post a Comment