Saturday, November 25, 2017

மூவேந்தர் யார்? பகுதி-31

மள்ளரிய தந்தை 
இரா. தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

தேர் :
வெள்ளையானை, வெண்வட்டக்குடை போன்று தேரும் தெய்வதத்திற்கும், மன்னர்க்கும், அவர் தம் மரபினர்க்கும் ஏற்பட்டவை யாகும் என ஏற்கனவே கண்டோம். பெரிய ஆலயங்கள் உள்ள இடங்களில் கோயில் உற்சவ இறுதியில் தேரோட்டம் நடைபெறுவது நாம் அறிந்ததே. அப்போது கோயில் தேரை நன்கு அலங்கரித்து, அவற்றில் தெய்வத்தின் உருவச்சிலையை வைத்து அதை (தேரை) நகரின் நான்கு வீதிகள் வழியாகப் பக்தர்கள் ஊர்வலமாக மேளதாளம், வாணவேடிக்கை முதலியவற்றுடன் இழுத்து வருவதுவும் கண் கூடு. சங்க கால இலக்கியங்கள் பேசுவதைக் காண்போம்.
“நற்றேர் வழுதி கொற்கை முன்துறை” (அகம் 130 - 11) 
(பாண்டியனைக் குறிக்கும்)

“பொனணி நெடுஞ்தேர்த் தென்னர் கோமான்" (அகம் 209 - 3) 
(பாண்டியனைக் குறிக்கும்)

“திண்தேர் வளவற் கொண்ட கூற்றே” (புறம் 226 - 16) 
(சோழனைக் குறிக்கும்)

“மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய” (புறம். 39 - 16)
(சேரனைக் குறிக்கும்)

அக்காலத்தில் மன்னர் மட்டுமின்றி அவரது மரபினரும் தேரில் சென்றனர். இதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்வதாயுள.
“கண்டல் வேலிக்காமர் சிறுகுடி 
எல்லிவந்தன்றோ தேர்? எனச் சொல்லி, 
அவர் எழுந்தன்று இவ்வூரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை 
மணிப்பூமுண்டகம் கொய்யேன்.ஆயின்
அணிக்கவின் உண்மையோ அரிதே; மணிக்கழி 
நறம்பூங்கானல் வந்து, அவர் 
வறுந்தேர் போதல் அதனினும் அரிதே”
(நற்றினை 191 – 5 - 12)


“இனமணி ஒலிப்பப் பொழுது படப்பூட்டி 
மெய்ம்மலிகாமத்து யாம் தொழுது ஒழிய 
தேரும் செல்புறம் மறையும் ஊரோடு” 
(நற்றினை 187 – 4 -6)


“தாரணி புரவித் தண்பயிர் துமிப்ப 
வந்தன்று, பெருவிறல் தேரே 
உய்ந்தன்றாகும், இவள் ஆய் துதற்கவினே”
(நற்றினை 181 – 11 - 13)

பண்டைய நாளில் மன்னரும், அவரது மரபினரும் போருக்கு மட்டுமின்றிச், சாதாரண நிகழ்ச்சிகளுக்கும் தேரில் சென்ற வழக்கத்தை ஒட்டி, இன்று பள்ளர் / மள்ளர் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டு நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், இறந்த வரை மற்ற மரபினர் போலன்றி, தேர்கட்டி அதைத் தேர்ச் சேலைகளைக் கொண்டு நன்கு அலங்கரித்து, மேளதாளம், வாணவேடிக்கை, முதலிய ஆடம்பரத்துடன் இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருவது அறியத்தக்கது. மேலும் இவர் மற்ற மரபினர் போலன்றி இறந்தவரைப் படுக்கப்போடாமல் தேரில் உட்காரும் பாவைனையில் சாய்வாய்க்கட்டி இடுகாட்டுக்கு எடுத்துச்செல்வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்வது, பண்டைய நாளில் இவர் போர் மற்றும் சாதாரண நிகழ்ச்சிகளுக்கும் தேரில் சென்றதை நினைவூட்டுவதாயுள்ளது.
இறந்தவர் வயதானவர் எனில், அவரது பேரன்மார்களைத் தேர்மேல் ஏற்றிச் செண்டா வீசச் செய்வதுண்டு. கோயிற்தேர்களில் தேரோட்டியாக வருபவர் தேவேந்திர குலத்தாராகிய பள்ளர் / மள்ளர் மரபினரே எனச் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. வசதிக்குத் தக்கபடி இவர் 3, 5. தேர்கள் கட்டுவதுண்டு. கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் 2 தேரும், சீவிலிபுத்தூர் கல்வெட்டில் 3 தேரும் இவருக்கு உண்டு எனக் கண்டுள்ளது என்பது நாம் அறிந்ததுவே. ஆனால், நடைமுறையில் வசதிபடைத்தவர் 5 தேர்கள் கட்டி வருகிறார்களா? என்பது ஆய்வுக்குரியது. தேர் முகப்புகளின் உச்சியில் ஆலயக் கோபுரம் மற்றும் கோவில் தேர்களில் உள்ள கலசம் போன்று செம்புகளைக் கவிழ்த்து வைப்பது உண்டு. இறந்தவரைத் தேரில் எடுத்துச் செல்லும் உரிமையை, இம்மரபினர்க்குப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வழங்கியதாக ஏற்கனவே கூறியது மனதிற் கொள்ளத்தக்கது. இப்பாண்டியன் உக்கிரப் பெருவழுதி புராண மரபைச் சேர்ந்தவன் ஆவான். ஏற்கனவே கூறியபடி இவன் சுந்திரபாண்டியனாக வந்த சோமசுந்தரக் கடவுளுக்கும், தடாதகைப் பிராட்டியாகிய அம்மை மதுரை மீனாட்சி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்த முருகப்பெருமான் என்பர் ஆராய்ச்சியாளர். இம்மரபினர். தம் முன்னோர் சாதாரண நிகழ்ச்சிகளுக்கும். பண்டைய நாளில் தேரில் சென்றதை நினைவூட்டு முகத்தான் திருமணத்தின் போது, திருமணத் தம்பதிகளின் பட்டினப் பிரவேச ஊர்வலத்தில் இரதங்களை உபயோகித்து வருவது குறிப்பிடத் தக்கது. இம்மரபினர் அரச மரபைச் சேர்ந்தவர் என்பதினாலேயே, கோயில் விழாக்களில் இவருக்குக் கோயில் முதல் மரியாதை வழங்கும் பழக்கம், நடைமுறையில் இருந்து வருகின்றது. இவரது தலைவர்கள் தேர் வடத்தைத் தொட்டுக் கொடுத்த பின்னர்தான், தேரை ஊர், நகர வீதிகளில் இழுத்துச் செல்ல வேண்டும் என்ற மரபு பண்டு தொட்டு வழக்கில் இருந்து வந்திருக்கின்றது. காலப் போக்கில், இப்பழக்கம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுப் போனாலும், ஒரு சில இடங்களில் பழைய வழக்கத்தின் எச்சங்கள் இன்னும் நடைமுறையில் இருந்து வருவதாகத் தெரிகிறது. இம்மக்ளின் பொருளாதாரச் சீர்குலைவால் அரசியல், கல்வி, பொருளாதாரம் இவற்றில் முன்னேறிய சில வகுப்பினர் இவரது (தேவேந்திரகுலத்தார்) உரிமைகளை அபகரித்துள்ளனர் என்பதுவும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
பதினாறு கால் பந்தல் :
பண்டைய நாளில் மன்னர்க்கு ஏற்பட்ட சிறப்புகளில் பதினாறு கால்கள் நட்டு மண்டபம் அமைப்பதுவும் ஒன்றாகும். மன்னரது அரண்மணைகளைப் பின்பற்றி ஆலயங்களுக்கும் பதினாறு கால் மண்டபம் அமைக்கப்பட்டது எனலாம். சங்ககாலத்தில் சோழன் கரிகாலன் முன்னிலையில் காவிரிப் பூம்பட்டினத்தில் புலவர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை அரங்கேற்றத்திற்குப் பதினாறு கால் மண்டபம் அமைக்கப்பட்டது என்பதை
“வெறியார் தளவத் தொடைச் செயமாறன் வெகுண்ட தொன்று அயிர்த செம்பியன் காவிரி நாட்டிலரமியத்த பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப்பாலைக்கன்று நெறியால் விடுத்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே”

எனத் திருச்சிமாவட்டம் திருவெள்ளாறையில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம்.
மள்ளர் – பள்ளர் தேவேந்திர குலத்தார் என்பதால், இவர் பண்டு தொட்டு திருமணப் பந்தலுக்குப் பதினாறு கால்கள் நிறுவுவதுமரபாய் இருந்து  வருகின்றது எனலாம். இவரது திருமணவிழாக்களில் மணமக்களை வாழ்த்தும் போது, பதினாறு கால் பந்தலிட்டுத் திருமணம் நடைபெறுவதாகக் கூறுவது மரபாகும். இவருக்கு நன்மைக்குப் பதினாறு கால் பந்தல் இடும் உரிமை, பண்டு தொட்டு இருந்து வருகிறது என்பதற்குக் கரிவலம்வந்த நல்லூர், (ARE 432 / 1914) சீவிலிபுத்துர் (ARE 588 / 1926) ஆக இந்த இரண்டு கல்வெட்டுகளும் சான்றாகும்.
(தொடரும்)

No comments:

Post a Comment