மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
ஆக மேலே கண்ட அறிஞரின் கருத்துக்களிலிருந்தும், மற்ற மேற்கோள்களிலிருந்தும் சங்க இலக்கியங்களில் பேசப்படும் மள்ளர் இன்று பள்ளர் எனத் திரிந்து வழங்குகின்றனர் என்பது வெள்ளிடை மலை. இவ் ஆசிரியரின் “பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மள்ளர்” (மூவேந்தர் யார்? முற்பகுதி) சங்க இலக்கியங்களில் பேசப்படும் மள்ளர் இன்று பள்ளர் என வழங்கும் தேவேந்திர குலத்தார் என்பதை தக்க சான்றுகளுடன் நிருவியிருப்பது காண்க. அதேபோழ்து இலக்கியங்களில் பேசப்படும் மல்லர் என்ற பெயர் பள்ளருக்குப் பொருந்துமா? என்பது பற்றி அடுத்துப் பார்ப்போம்.
டாக்ட்ர். G.ஒப்பர்ட், தமிழ் மன்னர் தரித்திருந்த பெருமாள் என்ற பட்டம் மல்லர் என்பதிலிருந்து தோன்றியதென்று கூறுவதாக ஏற்கனவே கண்டோம். பள்ளர் மல்லர் மரபு என்பதற்குச் சான்றாக, அவருள் ஒரு சிலர் மல்லன் என்ற பெயரையும், ஒரு சிலர் பெருமாள் என்ற பெயரையும் தரித்து வருவதாகத் தெரிகிறது. ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பி இவர்கள் பெரிய மல்லன், சின்ன மல்லன் என்ற பெயர்களைத் தாங்கி வருவதும் சர்வ சாதாரணமாகும். டாக்டர் G. ஒப்பர்ட் இது பற்றிக் கூறுவதாவது பள்ளருள் ஆண்பாலர் மல்லன், குழந்தை முருகன் என்ற பெயர்களையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தெய்வானை என்பது தேவசேனா என்பதன் மருவு. அதே போன்று குழந்தை என்பது குழிமை என்பதன் மருவு. மல்லன் என்பது ஒரு நாட்டுப்புறத் தெய்வம் என்றும், அது ஊர்ப்புறத்து எல்லை மற்றும் வயல் வரப்புகளில் வைத்து வண்ங்கப்படுகிறது. டாக்டர் G. ஒப்பர்ட் குறிப்பிடும் மல்லன் கோயில்கள் பள்ளரின் (தேவேந்திர குலத்தார்) அடியிற்கண்ட ஊர்களில் இருந்து வருவது காணத் தக்கவை ஆகும்.
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்துர் தாலுக்கா : பேரூர்
திருச்சி மாவட்டம் : முசிறி தாலுக்கா
1. பேரூர்
2. ஒமாந்தூர்
3. கோட்டாத்தூர்
4. பாளையூர்
5. திருத்தளையூர்
லால்குடி தாலுக்கா
1. கரியமாணிக்கம்
2. நகர் திருமங்கலம்
குளித்தலைத் தாலுக்கா
1. கடம்பர் கோயில்
2. மாழாராம்
கரூர் தாலுக்கா
1. புலியூர்
2. பள்ளப் பாளையம்
திருச்சி தாலுக்கா
1. புத்தூர்
2. உறையூர் (காவிரிக்கு அருகில் மிசன் மருத்துவ மனைக்குச் சமீபம்)
நெல்லை மாவட்டம் - செங்கோட்டைத் தாலுக்கா
1.மல்லபுரம்
மல்லன் கோயில்கள் பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தில் பள்ளர் குடியிருப்புகளில் இருந்து வழிபடப்பட்டு வருகின்றன. பிறமரபினர் இவற்றை வழிபடுவதில்லை. மல்லன் கோயில்கள் பள்ளர் குடியிருப்புகளில் மட்டும் இருந்து வருவதும், அவற்றை இம்மரபினர் மட்டும் வழிபட்டு வருவதும் பன்டைக் காலத்தில் போரில் ஈடுபட்டு மடிந்த வீரர்களுக்கு எடுப்பித்த நடுகற்களை இவை நினைவூட்டுவ தாயுள்ளுது. பண்டைய நாளில் ஏர்த்தொழில் செய்தவர் போருக்குச் சென்றனர் என்றும், அதனால், ஏரும் போரும் இணை பிரியாது, என்ற தொடர்மொழி வழக்கில் வந்ததென்றும் முன்னர் குறிப்பிட்டிருப்பது ஈண்டு நினைவிருக்கத்தக்கது. நெல்லை மாவட்டத்தில் இம்மரபினர் மத்தியில் இராசாக்கள் கோயில்கள் இருந்து வருவதாக அறிகிறோம். மதுரை மாவட்டத்தில் பாண்டி கோயில்கள் இருந்து வருவது கண்கூடு. எனவே மல்லர் என்பதும் மள்ளர் என்பதும் ஒரே மரபு.
திராவிடராகிய மூவேந்தர் இன்றையப் பள்ளரே ஆம்
சேர சோழ பாண்டியர் திராவிடர் எனவும், அவர் மள்ளர் / மல்லர் மரபினர் என ஏற்கனவே வழங்கினதாகவும், ஆனால் இன்று அவர் பள்ளன், கடைஞன், காலாடி, குடும்பன், தேவேந்திர குலத்தான், பண்ணாடி என வழங்கி வருவதாகவும் கண்டோம். இவர் திராவிடராகிய மள்ளர், மல்லர் மரபினர் என்பதற்கும், மூவேந்தரும் இவர் மூதாதையர் என்பதற்கும் புறச் சான்றுகள் இன்றியமையாதவை ஆகும். பொதுவாய் மூவேந்தரும் தம் மரபிற்குள்ளேயே கொள்வினை, கொடுப்பு வினை வைத்திருந்தனர் என வரலாறு கூறும். இடைக்காலத்தில் கங்கர், கடம்பர், சாளுக்கியர், இராஸ்டிரகூடர் முதலிய வேற்று நாட்டு அரச மரபுகளுடன் தமிழ்வேந்தர் மணஉறவு வைத்திருந்ததாக வரலாறு கூறும், இந்த அரச குலங்களும் “மள்ளர் மல்லர்” மரபைச் சேர்ந்தவர்களே என்பது ஆராய்ச்சியால் விளங்கும். இந்திய நாட்டின் பெரும்பாலான தொன்மை அரச குலங்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இந்திய நாகரிகத்திற்கே திராவிடர்தான் மூல காரணம் என முன்னர் குறிப்பிட்டுள்ளதும் ஈண்டு நினைவிருக்கத்தக்கது.
மூவேந்தரின் அமைச்சர்கள், படைத்தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் அதிகாரிகள் பொதுவாய் அரச மரபினரிலிருந்தே நியமனம் ஆனர் என்பதில் ஐயம் கொள்ளவதற்கில்லை. எனவே மன்னர் அனுபவித்த உரிமைகளில் பல அவரது மரபினருக்கும் உரியவை யாயின. “மன்னர் பாங்கின் பின்னோகுப்” (தொல் பொருள். அகத்தினை செ. 32) எனத் தொல்காப்பியம் கூறுவது இதற்குச் சான்றாக அமையும். பள்ளர் தாம் அரசகுலம் என்பதற்குச்சான்றாக முதற்கண் அவர் தம்மைத் தேவேந்திரகுலத்தார் என்றும் தமிழகத்திலுள்ள மற்ற எல்லா மரபினரையும்விடத் தாம் உயர்ந்தவர் என்றும், பிற இனத்தவர் இல்லங்களில் தாம் உணவு உண்பதில்லை என்றும் நீண்ட காலமாய் கூறி வந்துள்ளுனர். இதற்கு மாவட்டக் குறிப்புகளும் எட்கர் தர்ஸ்டன் குலங்களும் குடிகளும் சான்றாகும். இவர் அரச குலத்தைச் சேர்ந்தவர் என்பதற்குச் சான்றாக வழக்கில் உள்ள தேவேந்திர குலம் பற்றி முதலில் ஆராய்வோம்.
தேவேந்திர குலம் :
மள்ளர் / மல்லர் மருதநில மக்கள். அவர் தெய்வம் வேந்தன்; “வேந்தன் மேயத் தீம்புனல் உலகம்” (தொல் பொருள். அகத்திணை 5) எனத் தொல்காப்பியம் கூறுவதை நாம் அறிவோம். வேந்தன் என்பது முடியுடையவன் என்று பொருள்படும். அது வேய்ந்தோன் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாக அறிஞர் கூறுவர். பிற்காலத்தில் வேந்தன் என்பது இந்திரன், தேவேந்திரன், புரந்தரன் என வழங்கியது. பிங்கல நிகண்டில் இந்திரன் என்பதற்கு தேவர்வேந்தன், புரந்தரன், மருதக்கிழவன், வேந்தன், கரியவன் என்று பொருள் கண்டுள்ளது.
பள்ளர் மருதநில உழவராகவே பண்டு தொட்டு தொடர்ந்து இருந்து வருவது கண்கூடு. அதற்குச் சான்றாகத் தம்மைத் தேவேந்திரகுலத்தார், இந்திரகுலத்தார், இந்திரனின் வழித்தோன்றல்கள் என உரிமை பாராட்டி வருகின்றனர். (FR. Hemingsway. Trichirapalli Dt. Gazetteer Page 129) நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் ஆலத்திலுள்ள கல்வெட்டு (ARE 432 / 1914) இராமநாதபுரம் மாவட்டம் சீவில்லிபுத்தூர் ஆலயத்திலுள்ள கல்வெட்டு (ARE 588 / 1926) இவைகளில் தேவேந்திரக் குடும்பன் என்று பொறிக்கப்பட்டுள்ளது இதற்குச்சான்றாகும். முதுகுடிக்கல்வெட்டில் இம்மரபைச்சேர்ந்த ஒருவர் “பெரிய தேவப்பள்ளன்” என்று பொறிக்கப்பட்டுள்ளது (கொங்கு. செப்டம்பர் 1974).
இம்மரபினர் பற்றிக் கி.பி.17 - ஆம் நூற்றாண்டிலிருந்து தோன்றிய பள்ளு நூல்களில் “தேவேந்திரப்பள்ளன்” (வையாபுரிப் பள்ளு. செ.81) “புரிந்தான் குலம்” (செங்கோட்டுப் பள்ளு செ. 208) என்று இம்மக்கள் பேசப்படுகின்றனர். 1891 - ல் அரசினர் எடுத்த மக்கள் குடிக்கணக்கில் இவருள் ஒருசாரார் தம்மைத்தேவேந்திர குலத்தார் எனப் பதிந்துள்ளனர். (H.A.Stuart 1891. Census Report. Vol XIII. Page 247) தமிழக அரசு செடியூல் வகுப்புப் பட்டியல் இணைப்பு 11(2) (4) ல் “தேவேந்திர குலத்தார்” என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் இம்மக்களின் நிலக்கிரையம், ஒத்திப் பத்திரங்களில் தேவேந்திர குலம், இந்திரகுலம் எனப் பதித்து வருகின்றனர். இம்மரபுப் பெண்டிர் நாற்று நடுவை துவங்குமுன் இந்திரனை வழிபடுவர். இதற்குப் பெரிய புராணத்தில் மேற்கோள் உண்டு.
உழதசால் மிகவூறித் தெளிந்த சே(று)
இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்
தொழுது நாற நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்
(திருத்தொண்டார் புராணம், திருநாட்டுச் சிறப்பு. செ. 12)
தற்காலத்திலும் கூட இம்மரபுப் பெண்டிர் நாற்று நடும் போது பாடும் உழத்தி பாட்டின் இடையிடையே தேவேந்திரகுலப்பெண்டுகளா! என விளித்துப்பாடுவதை நாம் காணலாம். இம்மரபினர் வயலில் உழவு வேலை தொடங்குமுன் இந்திரனைத் தொழும் பழக்கம் வழக்கில் இருந்து வருகின்றது. இதைக் காளைச் சித்தர் பாடலில் காணலாம்.
எல்லோரும் கொல்லையுழ - என் தோழர்!
என் கணவர் பள்ளமுழ
பள்ளம் படுத்தனவே - என் தோழா!
பார்த்து வரப் பிள்ளையிரே
முன்னேரும் பின்னேரும் - என் தோழா!
மூவணையும் ஓரனைதான்
முன்னேர் உழுதுமிட - என் தோழா!
முகவெள்ளைக் காளையடா
சந்திரரும் சூரியரும் - என் தோழா!
சந்திபன்னும் பொய்கையிலே
இந்திரனை நோக்கியடா - என் தோழா!
எடுத்தேன் உழக்கோலை
(இங்கு சந்திரரும், சூரியரும் என்பவர் முறையே பாண்டியரும் சோழரும் ஆவர்)
(தொடரும்)
https://www.facebook.com/thontamilarnagarigam/posts/1519469471530941?__xts__[0]=68.ARBMZ1D_SC31AoiuHCSaq8khinNNOw_DXiS-1eJ6_2f8P4zu1TaE6rzFSFIvGMRIDSj5z98lLuEfhR-1cLiV5jiTvRs3q0vYgWpRZdUzSMltifdLchc1MZdcxXVC-cnTyok5JFL_vMOOiMm-U5IPXQQY7akWtmsYjDuvBj_MDAQt88Bh16ScqVaObYQkjH6Rv8TJ_3ihbd8BEFv5-jGVlvToQTLWgGQOXDkE9gA3TvuEFZ1-NWwHaFLrOaSvXKovbOh7WIttrNIqqcMRR0WVrhfaCX0bgwgasTOSZOpw4LGtvW65l5xFZO5dY2sRob11KAbw&__tn__=-R-R மல்லர் வேறு மள்ளர் வேறு
ReplyDelete