மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
தமிழகமானது இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில் உள்ளது. அது வடக்கே வேங்கட மலையையும், தெற்கே இந்து மகா சமுத்திரத்தையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையையும் எல்லைகளாகக்கொண்டது ஆகும். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட இன்றையக் கேரளம் தமிழகத்தின் ஒரு பகுதியாக சேரநாடு என வழங்கியது. பண்டையத் தமிழகம் பற்றிய பனம்பாரனார் என்னும் புலவர் தொல்காப்பிய சிறப்புப்பாயிரக்கில்
"வடவேங்கடம் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து"
என்று கூறியுள்ளார்.
குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர்
“தெங்குமரி வட பெருங்கடல்
குணகுட கடலர் வெல்லை" (புறம் 17 / 1,2)
என்று கூறுவார்.
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழகம், தெற்கே இந்துமகா சமுத்திரத்தில் ஆழ்ந்துபோன லெமூரியாக்கண்டத்தில் ஓடிய பஃறுளியாற்றுக்கும், வடபெண்ணையாற்றுக்கும் இடைப்பட்ட தாயிருந்தது என்றும், பின்னர் பஃறுளி ஆறு கடல் கோளால் அமிழ அது குமரியாற்றுக்கும், வேங்கடத்திற்கும் இடைப்பட்டதாயிற்று. என்றும் அறிஞர் கூறுவர். பஃறுளி ஆறும், குமரி ஆறும் கடல் கோளால் அழியப் பாண்டியன் வடக்கே வந்து இமயம் கங்கை இவற்றைத் கைப்பற்றி, அதன் தெற்கேயுள்ள நிலப்பரப்பு முழுவதையும் ஆண்டான் என்பர். இதுபற்றி இளங்கோ அடிகள் கூறுவதாவது:
பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும் கொங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசையாண்ட தென்னவன் வாழி (சிலம்பு 11 / 19 - 22).
ஒரு காலத்தில் இந்திய நாடு முழுவதும் தமிழ் வேந்தர் ஆளுகையின் கீழ் இருந்ததென்பதற்கு, இந்திய நாட்டின் பல பகுதிகளில் தமிழுடன் தொடர்புடைய திராவிட மொழியின் பல கிளை மொழிகள் இன்று வழக்கில் உள்ளது சான்றாகும். பஃறுளி ஆறு மூழ்கிய பின் குமரி பெரியாறாயிருந்ததென்பது:
"தெனா அது உரு கெழுகுமரியின் தெற்கும்" (புறம் 6 / 2).
"குமரி அம்பெருந்துறை அயிரை மாந்தி" (புறம் 67 / 6)
என்ற சங்க இலக்கிய மேற்கோள்களால் புலனாகும். நிற்க, கடைச் சங்ககாலத்தில் தமிழகத்தின் வட எல்லையாகிய, வேங்கடத்திற்கு வடக்கே வேற்று மொழி பேசப்பட்டு வந்ததாக அறிகிறோம். இது மொழி பெயர் தேயம் என வழங்கியது. இதற்கு
"பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழி பெயர் தேயத்து ஆயினும் நல்குவர்" (அகம் 211 / 7 - 8)
"பல் வேற்கட்டி நன்னாட்டும்பர்
மொழி பெயர் தேயத்து ஆயினும் நல்குவர்" (குறுந் 11 / 6 - 7)
என்ற சங்க இலக்கிய மேற்கோள்கள் சான்றாகும்.தமிழகத்தை அக்காலத்தில் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் ஆண்டனர் என்பதுவும், அவர் தமிழர் என்பதுவும்
"மண்திணிக் கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழங்கு தாளை மூவர் உள்ளும் (புறம் 35 / 3, 4)
"தமிழ் கெழுமூவர் காக்கும்" (அகம் 31, 14)
வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்"
(தொல். பொருள் செ. இயல் 75 - 3)
என்ற இலக்கிய மேற்கோள்களால் தேற்றம்.இந்த மூன்று மன்னர்க்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளுடைய தனித்தனி நாடுகள் இருந்தன. சேரன் முதலில் காவிரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்திலுள்ள கருவூர் என்ற வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாகவும், பின்னர் மேற்கேயுள்ள அரபிக்கடல் பின் வாங்கிச் செல்ல தரை தென்படவும், அரபிக்கடலில் கலக்கும் பொருநையாற்றங்கரையிலுள்ள வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாகவும், வரலாற்று வல்லுநர் கூறுவர். பிற்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கேயுள்ள நிலப்பகுதி கொங்குநாடு எனப்பிரிந்தது. பாண்டியன் ஏற்கனவே அமிழ்ந்து போன பஃறுளி ஆற்றங்கரையிலுள்ள கபாடபுரத்திலும், முறையே முதற்சங்கம், இடைச்சங்கம் இவற்றை நிறுவி, தக்க புலவர்களைக் கொண்டு தமிழை ஆய்வு செய்தான் என்றும், கபாடபுரமும் கடல்கோளால் அழிய, தாமிரபரணி என்னும், பொருநை ஆற்றின் கரையிலுள்ள கொற்கை என்னும் துறைமுகப்பட்டினத்தில் தலைநகரை அமைத்து ஆண்டான் என்றும், பிறகு மணலூரையும், அதன் பின் கூடல் என்ற மதுரையையும் தலைநகராகக் கொண்டு. அங்கு மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினன் என்றும், சோழன் காவிரிக் கரையிலுள்ள உறையூரில் தலைநகரை அமைத்து ஆண்டான் என்றும், கரிகாலன் தன் காலத்தில் தலைநகரை உறையூரிலிருந்து காவிரி கடலோடு கலக்கும் புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்திற்கு மாற்றினான் என்றும், இடைக்காலத்தில், சோழர் தலைநகர் பழையாறை, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் இங்கெல்லாம் மாற்றப்பட்டது என்றும் வரலாறு கூறும்.
தமிழ் வேந்தர் ஆட்சி ஏற்பட்ட காலத்தில், பல்வேறு இனக்குழுக்கள் நாட்டில் இருந்திருக்கின்றன. அன்றிருந்த மக்களுள் எயினர் வேட்டையாடியும், சூறையாடியும், பசுக்களையும், எருதுகளையும் கவர்ந்து அவற்றைக் கள்ளுக்கு விற்று. அல்லது அவற்றைக் கொன்று ஊனைத் தின்று வாழ்க்கை நடத்தி வந்தனர். மழவர் பசு ஊனைத் தின்றனர் என்பது
"கொழுப்பு ஆதின்ற கூர்ம படைமழவர்
செருப்புடை அடியர் தெண்சுனை மண்டும்
அருஞ்சுரம் அரிய வல்ல ; வார்கொல்" (அகம் 123 / 12 / 14)
“பல் பூங்கானத்து அல்கு நிழல் இசை இத்
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகு ஆவீழ்த்து திற்றி தின்ற" (அகம் 249 / 11 - 13)
என்ற மேற்கோள்களால் புலனாகும்.அக்காலத்தில் காட்டு வாணர் பச்சை ஊனைத் தின்றனர் என்பது
“நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
பச்சூன் தின்று பைந்நிணம் பெருத்த “ (புறம் 258 / 3, 4)
என்ற மேற்கோளால் விளங்கும்.
அக்கால மக்களுள் சிலர் கூட்டுணவு உண்டனர். இதற்கு
“அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ” (அகம் 167 / 8, 9)
“கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்” (குந் 331 / 3)
“சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை
வரிக் கூட்டுணவின் வாட்குடிப்பிறந்த (பெரும் 136, 37) என்பவை சானறாகும்.
மகளிர் தழை உடை அணிந்திருந்தனர் என்பது :
“தழை அணி அல்குல் தாங்கல் செல்லா” (குறுந் 159 - 1):
“தழை அணி அல்குல் மகளிருள்ளும் " (குறுந் 125 - 3)
“தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல” (குறுந் 345 / 4)
“கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்” (புறம் 61 / 1)
என்ற மேற்கோள்களால் விளங்கும்.
மாங்குடி மங்கையர் தங்கள் அரையைச் சுற்றிக் கட்டிய கயிற்றில் மாட்டப்பட்ட தழைக் கொத்துகளை அணிந்திருந்தன்ர். இதற்கு
“பைவிரி அல்குல் கொய்தழைதைஇ” (குறிஞ்சி பாட்டு 100),
என்ற செய்யுள் சான்றாகும்.பாண் மகளிரும் விறலியரும் மன்னரிடம் பரிசுகள் பெறச் செல்லும் போது, உடை அணியாமல் இருந்தனர் என்பது
“அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து
ஈர்க்கு இடைபோகா ஏர் இளவன முலை
நீர்ப்பெயர்ச்சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டு என உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பு அன்ன பல்காழ் அல்குல் நடுவின்”
(பொருநர் 35 - 39).
என்ற மேற்கோளால் தெளிவு. ஆடல் மகளிர் அணிந்த மெல்லிய மம்மல் ஆடை அரையிலிருந்து இடை நடு வரைக்கும் மூடின. அதுவும் நெரியதாய் இருந்ததால் அது மேனியை முற்றிலும் மறைக்கவில்லை. (சிலம்பு 131 88) நாட்டில் பல மொழி பேசுவோர் இருந்தனர். அவருள் குறிப்பிடத்தக்கவர் நாகர், ஒளியர், அருவாளர், எயினர், குறும்பர் முதலியோர் ஆவர். அன்று தமிழை நன்றாய் அறிந்தவர் அறியாதவர் இருந்தனர். தமிழை அறியாதவர் பெரும்பான்மையினர் என்று கூற வேண்டும். அவர் பேசிய பேச்சானது விரவுமொழி, தழுவு மொழி, வழுவுச்சொல், சேரிமொழி என வழங்கின. தமிழ் தெரியாத மக்கள் நாட்டில் மிகுதியாய் இருந்ததால், தமிழ் வேந்தர், குறிப்பாகப் பாண்டியர் அதை நாட்டில் பரப்பப் பெரும் முயற்சி எடுக்க வேண்டியதாயிருந்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment