மள்ளரிய தந்தை
இரா. தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
பின் இணைப்பு - 1
கடைஞர் - (கடையர்)
நம்பி அகப்பொருள் அகத்திணையில் “இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன், கிழவன், கிழத்தி, உழவர், உழத்தியர், கடைஞர், கடைசியர் மருதநிலமக்களாகப் பேசப்படுகின்றனர். தமிழ் நிகண்டுகள் மேலே கண்டவர்கள் தவிர களமர், தொழுவர், கம்பளர், இளையர் வினைஞர், மள்ளர், ஆற்றுக்காலாட்டியர், மருதநிலமக்கள் எனக் கூறுகின்றன. இவைகளில் மள்ளர் தான் மரபுப் பெயர். உழவர், உழத்தியர், வினைஞர் என்பவைகள் மள்ளர் குடியினரையே சுட்டும், மற்றவை இவர்களை உணர்த்தாது கம்பளர், ஆற்றுக் காலாட்டியர், கடைஞர் இவர்கள் சங்க இலக்கியங்களில் பேசப்படக்காணோம். இப்பெயர்கள் பின்னாளில் தோன்றியவை. கடைஞர் பெரியபுராணத்தில் பேசப்படுகின்றனர். இவர் அந்நாளில் தீண்டப்படாத புலையர் ஆவர். திருநாளைப் போவார் என்று கூறப்படும் அறுபத்திமூன்று சைவ சமய அடியார்களில் ஒருவராகிய நந்தனார் புலையர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைஞர் புலையர் வகுப்பு எனில், தேவேந்திர குலத்தாருள் ஒரு உட்பிரிவாகப் பேசப்படும் கடையப்பள்ளர் யார்? என்ற கேள்வி எழுகின்றது. இக்கேள்விக்கு விடை காண எழுந்ததுவே இவ் ஆராய்ச்சியாகும்.
இன்றைய செடியூல் வகுப்புப்பட்டியலில் கடையர் இடம் பெற்றுள்ளனர். 1891 - ல் எடுத்த மக்கள் குடிக்கணக்கில் 18,830 பேர்கள் தங்கள் மரபைக் கடையர் எனப்பதிவு செய்துள்ளனர். இவற்றில் 16,528 பேர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். மதுரை, கோவை மாவட்டக் குறிப்புகளில் கடையர் என்ற பிரிவினர் அந்த மாவட்டங்களில் இருந்துவருவதாகக் கண்டுள்ளது. ஆனால் இவர் தேவேந்திரகுலத்தார் வாழ்ந்து வரும் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வருவதாகத் தெரிகிறது. 1935 இந்திய அரசு சட்டப்படி (Government of India Act 1935) தயாரிக்கப்பட்ட செடியூல் வகுப்புப் பட்டியலில் கடைஞர் (கடையர்) இடம் பெறவில்லை. 1935 க்குப் பிறகே, இவர் செடியூல் வகுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர் பெரும்பாலும்தேவேந்திர குலத்தார் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே இருந்து வருவதாகத் தெரிகிறது. திருச்சி மாவட்டக் குறிப்பில் இவர் பற்றிக் கண்டுள்ளதாவது; பள்ளக் கூத்தாடி, பள்ளப் பிச்சைக்காரன் தேவேந்திர குலத்தாரை அண்டியே வாழ்கின்றனர். கடையர் அல்லது கொட்டுக்காரர், பள்ளக் குருக்கள், பள்ள நாவிதர், பள்ள வண்ணார் இருக்கின்றனர்.
F.R. Hemingsway says: "There are Palla Kuthadis (dancers) Palla beggars depending on them. (Devendras) There are Devendras, Kadayars or Kottukarans, Pallagurus, Palla barbers and Palla washermen” [F.R. Hemingsway. Trichinopoly Dt. Gazetter. Page 129]
அண்மைக்காலம் வரை, இவர் சங்க காலத்தில் மருதநிலத் தலைமக்களை அண்டி வாழ்ந்த பாங்கன், தோழி போன்றே வாழ்க்கை நடத்திவந்ததாகத் தெரிகிறது. தேவேந்திரகுலத்தார் நன்மைதுன்மைச் சடங்குகளுக்கு இவர் மேலம் வாசிப்பதுண்டு தேவேந்திரகுலத்தார் கோயில் திருவிழாவின்போது, இவர் மேளம் வாசிப்பதுடன் கூத்து, நாடகங்கள் முதலியவை நடத்துவதுண்டு. நெற்போர்களங்களில் பொலிப்பாட்டுப் பாடி நெல்மணிகளைப் பெற்றுச் செல்வர். இராப்பாட்டுப் பாடுபவரும் இவரே ஆம். சங்க இலக்கியத்தில் கிணைப்பொருநராகவும், பாங்கன் தோழியாகவும் பேசப்படுபவர் இவராகவே இருக்கவேண்டும். சங்ககாலத்தில் மருதநிலத்தலைமக்களின் பெண்டிரை மணம் முடித்துக் கொடுக்கும் போது அவரது தோழியரையும் சீதனப்பொருளாகக் கொடுத்துவந்ததாகத் தெரிகிறது. மணமகள் கர்ப்ப முற்றிருக்கும்போது, அல்லது மாதவிடாய், மற்றும் நோயின் காரணமாய்க் கணவனைக் கூடமுடியாதவேலை, தன் இடத்தை நிரப்ப தன் தோழியைக் கணவனிடம் அனுப்புவதுண்டு. இம்மாதிரி உறவால் பிறக்கும். குழந்தைகளுக்குத் தகப்பன் சொத்தில் பங்கில்லை. ஆனால் வேறு பல உரிமைகளைப் பெற்றிருக்கின்றனர். இன்றையப் பிள்ளைமார் இந்தப் பாங்கன் தோழிவழித் தோன்றல்கள் என்று மறைமலையடிகள் கருதுவதாக இளங்காப்பியன் தனது "வரலாற்றுப்பாலம்” என்ற நூலில் கூறியிருப்பதை, இந்நூலின் பக்கம் 40 - ல் எடுத்தாண்டிருப்பதை வாசகர் அறிவர். மூவேந்தர் ஆட்சி காலத்தில் தேவேந்திரகுலத்தாரை அண்டி வாழ்ந்தவருள் பெரும்பாலோர், மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சியுற்றபின் தேவேந்திரகுலத்தார் அடக்கி ஒடுக்கப்பட்டு பண்ணை அடிமைப்பட்ட காலை, அவரை விட்டுப் பிரிந்து பல்வேறு குலப்பெயரைப் பூண்டுவர, இன்று கடையர் என்று பேசப்படுபவர் தேவேந்திர குலத்தாரைப் புறக்கணிக்காமல், நன்றிக் கடனாக் அவரிடம் விசுவாசமாகவே நடந்துவந்ததுடன், தங்களைக் கடையப்பள்ளர் என்றே வழங்கி வந்துள்ளனர் எனலாம். இதை அறியாத தமிழ்ப்புலவர்களும், வரலாற்றாசிரியரும் தேவேந்திரகுலத்தாரைக் கடைவருணம் என்றும், அவரது பெண்டிரைக் கடைசியர் என்றும் கூசாமல் எழுதி வர முற்பட்டுள்ளனர், பள்ளு இலக்கியங்களில் இம்மரபுப் பெண்டிரைக் கடைசியர் என்று இழிவாய்க் கூறியிருப்பது இதனாலே எனலாம். ஊருக்குக் கடைசியில் இவரது குடியிருப்பு இருந்ததால் கடையர் -கடைசியர் என்று பெயர் பெற்றிருக்கலாம். பண்டைய நாளில் கோட்டைக்கு வெளியே இருந்த குடியிருப்புகள் சேரி என்று வழங்கியது நினைவிருக்கத்தக்கது. நெல்லை மாவட்டத்தில் கடையம், கடையநல்லூர் என்ற ஊர்கள் கடையர் பெரும்பான்மையினராய் அங்கு வாழ்ந்ததால் அப்பெயர்கள் பெற்றதா? என்பது ஆராய்ச்சிக்குரியது ஆகும்.
(இக்கட்டுரை நெல்லை மாவட்டம் தென் திருப்பேரைக்கு அருகில் உள்ள கல்லாம்பாறையில் வாழும் கடையப் பிரிவினரின் சமீபகால வாழ்க்கை முறையை ஆதாரமாகக் கொண்டது.) இவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றியுள்ளனர் அனேகர் குடிபெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். நெல்லைக்கு அருகில் இவர் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிகிறது. முருகன் ஆலயங்களுக்கு பக்தர்களாக காவிடி ஆட்டத்திற்கு கொட்டு அடிப்பவர் இந்தப் பிரிவினரே ஆவர்.
பின் இணைப்பு - II
(சங்க காலத்தில் இருந்த மள்ளர் என்ற பெயருடைய புலவர்களும்
அவர்கள் இயற்றிய பாக்களும்.)
1. கடுவன் இளமள்ளனார் - நற்றினை பாடல் 150
2. கடுவன் மள்ளனார் – குறுந்தொகை - 82
3. மதுரை தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார் – அகநானூறு - 354.
4. மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் - அகநானூறு - 70, 256.
5. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் - நற்றிணை 297, 321, குறுந்தொகை – 188, 215, அகநானூறு - 33, 144, 174, 244, 344, 353, புறநானூறு - 388.
6. மதுரை அளக்கர் ஞாழா மகனார் அம்மள்ளனார் - அகநானூறு -
314.
7.அம்மள்ளனார், நற்றிணை - 82.
8. மள்ளனார் – நற்றிணை – 204, குறுந்தொகை - 72
9. திருக்குறளுக்கு உரை எழுதிய பத்துப் பேர்களுள் மல்லர் என்ற புலவரும் ஒருவர். அந்த உரை இப்போது கிடைக்கப்பெறவில்லை.
தகவல் :
Er. Dr. G. குருசாமிசித்தர் B.E., M.Sc., (Egg) PhD., (U conn. USA) தலைவர் தேவேந்திரர்சங்கம் , 5 / 1, குருசாமி நகர், கோவை - 641 046.
(முற்றும்).
No comments:
Post a Comment