மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
படையில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப் படை, இவற்றோடு சோழருக்குக் கடற்படையும் இருந்ததென்பர் தமிழறிஞர். சேரருக்கு விற்கொடியும், சோழருக்கு புலிக்கொடியும், பாண்டியருக்கு மீனக்கொடியும் ஏற்பட்டிருந்தது. அடையாள மாலையாகச் சேரருக்குப் பனம் பூவும், சோழருக்கு அத்திப் பூவும், பாண்டியருக்கு வேப்பம் பூவும் ஏற்பட்டிருந்ததென்பது.
“போந்தை வேம்பே ஆரென வரூஉம்” (தொப். பொ. புற 63) என்பதால் தேற்றம்.மூன்று நாடுகளும் வெவ்வேறு விதத்தில் சிறப்புடையவை. சேரநாடு மலைவளம் மிகுந்து யானைகளுக்குப் பேர் பெற்றது. சோழநாடு வயல்வளம் மிகுந்தது. அங்கு நெல், கரும்பு, வாழை முதலிய உணவுப் பொருள்கள் மிகுதியாய் விளைவிக்கப்பட்டன. பாண்டிய நாடு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களையும் உள்ளடக்கியது என்பர். இந்நாடு முத்துக்குப் பேர் பெற்றது. இதன் கடலில் இருந்து முத்துக்கள் எடுத்து அவற்றைக் கடல் கடந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். இந்த மூன்று நாடுகளின் சிறப்பைப்பற்றி ஒளவையார் கூறுவதாவது:
"வேழமுடைத்து மலைநாடு மேதக்க
சோழவளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்
நின்னாடு நல்ல முத்துடைத்து"
சங்ககால மன்னருள் சேரன்செங்குட்டுவன், தலையாலங் கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரிகாலன் ஆகிய மூவரும் பிரசித்தி பெற்றவர் என் அறிஞர் கூறுவர்.
சங்ககாலத் தமிழர் உயர்ந்த பண்பாடு, நாகரிகம், கொடை, வீரம் இவற்றில் சிறந்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பரந்த நோக்குடன் வாழ்ந்தனர். தம்மை அண்டிவந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கி வாழ்வளித்தனர். தங்கள் வாழ்க்கையில் புகழ் பெற வேண்டும் என்பதே அவரது முக்கிய குறிக்கோள் ஆகும். போரிலும் அறத்தையே கடைப்பிடித்தனர். அதற்கென விதிமுறைகளையும் வகுத்திருந்தனர். நிராயுதபாணிகள், வலி குன்றியவர், புறமுதுகு காட்டி ஓடுபவர், பெண்டிர், குழந்தைகள், முதியோர், அறவோர் இவர்களுக்குத் தீங்கிழையார். கால்நடைகளுக்கும் சேதம் விளைவிக்கார். அக்காலத்தில் பெண்களில் பலர் பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். அமுதமே கிடைப்பதாயினும் அவற்றை அன்றையத்தமிழர் தனித்து உண்பதில்லை. அனாவசியமாய் ஒருவரிடம் சினங்கொள்ள மாட்டார். பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி வாழாது சோம்பி இருக்க மாட்டார். புகழ்தரும் செயலுக்காகத் தம் உயிரைப் பெரிது எனக்கருதி விலகியிருக்கமாட்டார். மாறாக அதைச் துச்சமாகக் கருதி உயிரை விடுவர். உலகம் முழுவதுவும் பெறுவதாயினும் தீச்செயலை செய்யார். அயர்வு அற்றவர், மாட்சிமைப்பட்டவராகவே வாழ்பவர். தமக்கென அவர் யாதும் செய்யாது, பிறர்க்கென வாழும் உண்மையான இயல்புடையவர். இம்மாதிரியான சிறப்பியல்புகளை அன்றையத் தமிழர் கொண்டிருந்ததனாலேயே அந்நாளில் உலகம் சிறப்புற்றிருந்தது என்பர். இச்சிறப்பு இயல்புகளைப் பற்றிக் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம்பெருவழுதி கூறுவதாவது:
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலா
அன்னமாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன் தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே.” (புறம் 182)
சங்க காலத்தில் நிலவிய மக்கள் பழக்க வழக்கம், நாகரிகம், பண்பாடு, ஆட்சிமுறை, மன்னர்கள் நடத்திய போர் இவைகள் பற்றி சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. அந்த இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணெண்கீழ் கணக்கு எனப்படும். தமிழ் எழுத்து, சொல், பொருள் பற்றித் தொல்காப்பியம் என்ற இலக்கண நூலும் சங்க காலத்தில் இயற்றப்பட்டுள்ளதென்பர் ஆராய்ச்சியாளர். இத் தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதென்பர் சில தமிழறிஞர். வையாபுரிப்பிள்ளை போன்றோர் அது மிகவும் பிற்காலத்தில் தோன்றியதென்பர். தொல்காப்பியத்திற்கு முன்னர் அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்ததென்றும், தொல் காப்பியர் அகத்தியர் மாணாக்கருள் ஒருவர் என்றும் கூறுவதுண்டு. நிற்க.
கிபி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர் என்ற ஒரு இனத்தார் கருநாடகம் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்ததால், மூவேந்தர் அரசும் நிலை குலைந்து மதுரையில் நடந்து வந்த மூன்றாவது தமிழ்ச் சங்கமும் அத்துடன் முடிந்து விட்டதென்பர். களப்பிரர் நாட்டில் புகுந்தபின், தமிழகத்தில் நடந்த செய்திகள் பற்றி ஒன்றும் சரியாய் அறிவதற்கில்லை. களப்பிரர் யார்? என்று ஒருவரும் திட்டவட்டமாகக் கூறக்கானோம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கே பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றி தொண்டை மண்டலப் பகுதியை ஆளத் தொடங்கினர் என்பர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இவரது ஆட்சி சோழ நாட்டையும் உள்ளடக்கித் தெற்கே புதுக்கோட்டைவரைப் பரவியிருந்ததென்பர் வரலாற்றிஞர். கி.பி. 6 ஆம் நூற்றாண்டு மத்தியில் பாண்டியன் கடுங்கோன் தோன்றி களப்பிரருடன் பொருதி அவரை வெற்றி கண்டு பாண்டிய அரசை மீண்டும் மதுரையில் தோற்றுவித்தான். இச்செய்தி வேள்விக்குடி, தளவாய்புரம் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் முடிவுற்று, பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று, மதுரையை மீட்கும் வரையிலுள்ள காலப்பகுதியை இருண்ட காலம் என்று வரலாற்றறிஞர் கூறுவர். கி.பி. 6 ம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு சோழனை வென்று அவன் நாட்டைக் கைப்பற்றியதாக வேலூர்ப் பாளையம், காசாக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. இக்காலத்தில் சோழ மன்னன் வலுவிழந்து கும்பகோணம் அருகிலுள்ள பழையாரையிலிருந்து வந்ததாகப் பெரிய புராணத்திலிருந்து தெரிகிறது. சமண சமயத்தை விட்டுத் சைவ சமயத்தைத் தழுவிய பாண்டியன் நெடுமாறன், என்ற கூன் பாண்டியினின் தேவி மங்கையர்க்கரசி சோழ இளவரசி என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பல்லவர் சோழநாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய போது பாண்டியர் வலுப்பெற்று பல்லவரோடு பொருதி சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றி காவிரி வரை தமது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியிருக்கின்றனர். இதற்காகப் பாண்டியர் பல்லவர் இடையே பல போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சோழர் மரபில் விசயாலயன் தோன்றி அப்போது தஞ்சையை ஆண்டு வந்த முத்துரையரை வென்று சோழ அரசை தஞ்சையில் நிறுவினான். இதற்குச் செந்தலைக் கல்வெட்டு சான்றாகும். இம்மன்னன் முத்தரையரோடு நடத்திய போர்களில் அவனது உடம்பில் 96 காயங்கள் ஏற்பட்டதென வரலாறு கூறும். சங்க காலத்திற்குப் பிறகு சேர அரசு எந்நிலை எய்தியது என்பது பற்றி அறிய சரியான வரலாறு எழுதப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சேரமான் பெருமாளும் அவனது மரபினரும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து சேரநாட்டை நம்பூதிரிகளின் கைப்பாவையாக இருந்து ஆண்டு வந்ததாகச் சில வரலாற்றறிஞர் கூறுவர். நாளாக ஆக சோழ அரசு வலுப்பெற்று வந்தது. அதேசமயம் பல்லவ அரசும், பாண்டிய அரசும் வலுவிழந்து அவை சோழரின் மேலாதிக்கத்திற்குட்பட்ட நிலையை எய்தின. சேரநாடும் சோழர் ஆட்சிக்குட்பட்டது. சோழ அரசின் எல்லை வடக்கே துங்கப்பத்திரை நதிவரை விரிவடையலாயிற்று. இக்காலத்தில் இந்திய நாட்டிலேயே சோழ அரசு ஒரு பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது என வரலாற்றறிஞர் கூறுவர். இடைக்காலச் சோழ அரசர்களில் முதலாம் இராசராசன், அவன் மகன் இராசேந்திரன் இருவரும் பிரசித்தி பெற்றவர் ஆவர். இராசேந்திரனுக்குப் பிறகு அவனது மைந்தர்கள் இராசாதிராசா - I, இராசேந்திரா - II, வீர இராசேந்திரா, வீர ராசேந்திராவிற்குப் பிறகு அவனது மைந்தன் ஆதிஇராசேந்திராவும் ஆட்சி செய்தனர். அதன்பிறகு முதலாம் இராசேந்திரனின் மகள் வயிற்றுப் பேரனும், சாளுக்கிய மன்னனான முதலாம் குலோத்துங்கனும், அவனுக்குப்பிறகு அவனது வழிவந்தோரும் சோழ நாட்டு மன்னர்களாக ஆட்சிக்கு வந்தனர். சாளுக்கியரும் சோழர் போன்று சூரியகுலம் என்பர். எனவே இவர் உறவினர் ஆவர். சோழ அரசு சுமார் நானூறு ஆண்டுகளாக ஒரு பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டில் குலசேகரபாண்டியனுக்கும். வீரபாண்டியனுக்கும் இடையே அரசுப்பதவிப் போட்டி காரணமாய் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. குலசேகர பாண்டியன் இறந்தபின், அவன் மகன் விக்கிரம பாண்டியன் இப்போர்களில் ஈடுபட்டான். சோழமன்னரும், இலங்கை மன்னன் பராக்கிர பாகுவும் எதிர் தரப்பில் இப்போர்களில் கலந்து கொண்டனர். சிங்களப் படைகள் பாண்டிய நாட்டின் கீழ் பகுதியில் சில ஊர்களைப் பிடித்தன. இராமேசுவரம் இதன் கைவசமாகி விட்டது. இப்படை நீண்ட காலமாய் இராமேசுவரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. கடைசியாக, இது தமிழகத்தின் கீழ் பகுதியிலேயே நிலைத்துவிட்டதாகத் தெரிகிறது. கி.பி.13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோழ அரசு வலி குன்றியது. இந்நிலையில் வடக்கேயுள்ள குறுநில மன்னர் சோழர் ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தங்கள் தங்கள் ஆளுகைக்குபட்ட பகுதிகளை தன்னுரிமையுடன் ஆளத் தொடங்கினர். அதே போன்று பாண்டியரும், சேரரும் வலுப்பெற்று தங்கள் தங்கள் நாடுகளைச் சோழர் ஆதிக்கத்திலிருந்து மீட்டு சுயேட்சையுடன் ஆளத் தொடங்கினர். அதோடு மட்டுமின்றிப் பாண்டிய அரசு வலுப்பெற்று ஒரு பெரிய வல்லரசு நிலையை எய்தியது. பாண்டியன் சடாவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து சோழனை வென்று அவனைப் பாண்டியருக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக்கினான். சோழன் பாண்டிய அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதால் சடாவர்மன் சுந்தரபாண்டியன் இரண்டாவது முறை சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அப்படை எடுப்பில் அவன்_சோழநாட்டில் பல பகுதிகளை அழித்தான். “தஞ்சையைத் தனல் கொண்டு கொழுத்தினான்” என அவனது மெய்க்கீர்த்தி கூறுகின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில் கரிகாலன் முன்னிலையில் பட்டினப்பாலை அரங்கேற்றத்திற்கு அமைக்கப்பட்ட பதினாறுகால் மண்டபம் மட்டும் இடிக்கப்படாமல் விடுபட்டது என்பர் ஆராய்ச்சியாளர். சுந்தர பாண்டியன் சோழநாட்டின் அனேகப்பகுதிகளைத் தனக்கு உதவியவர்களுக்கும், வைதீகர்களுக்கும், கோயில்களுக்கும் பங்கிட்டு கொடுத்திருக்கிறான். அருப்புக்கோட்டை முதலிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகரும். மூன்றாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் பாண்டியன் சோழன் செய்த உதவியை மறந்து சிங்களப்படையுடன் சேர்ந்துகொண்டு சோழநாட்டிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதினால் மதுரை நகரைச் சோழரின் படைகள் அழித்தன. அத்துடன் மூன்றாம் குலோத்துங்கன் பாண்டியனை மிகவும் அவமானப்படுத்தினான். பின்னாளில் இதை மனத்திற்கொண்ட சுந்தரபாண்டியன் சோழ நாட்டைத் தணல் கொண்டுகெழுத்தினான் என்பர். பாண்டியப் பேரரசு ஒரு நூற்றாண்டு புகழுடன் விளங்கியது. அக்காலத்தில் இங்கு வந்து போன மேனாட்டு அறிஞன் மார்க்கப்போலோ பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பு மற்றும் சிறப்புகள் பற்றி வெகுவாகப் புகழ்ந்திருக் கின்றான்.
(தொடரும்)
No comments:
Post a Comment