மள்ளரிய தந்தை
இரா.தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
மல்லர் :
மல்லர் திணைநில மக்களாக நிகண்டுகளில் பேசப்படக் காணோம். சங்க இலக்கியங்களில் மல்லை, மல்லல், மல்லர் என்ற சொற்கள் பரவலாகக் காணப்படுகின்றன. மல்லல் என்பதற்கு வளம் என்றே உரையாசிரியர்கள் பொருள் கண்டுள்ளனர். தொல்காப்பியத்தில் மல்லல் வளனே (தொல், சொல் அதி. 8 - 7) என வருவது காண்க. மல்லல் வளத்தைக் குறிக்கும்போது மல்லன் என்பது வளமுடையவனைக் குறிக்க வேண்டும். எனவே, மல்லன் என்பதற்கு வளவன் என்று பொருள்கொள்ள வேண்டும். மருத நிலம் வளமுடையது. இங்குள்ள நாடுகள் வளநாடு என வழங்கின. ஆதலால் மருதநில மக்கள் வளவர் ஆவர் என்பது வெள்ளிடைமலை. எனவே இப்பெயர் மருதநில மக்களுக்கும் மற்றும் அவரது வேந்தராகிய சேர, சோழ, பாண்டியருக்கும் உரித்தாகும். எனினும் சேர பாண்டிய இரு நாடுகளைவிடச் சோழ நாடு முழுவதும் ஆறு மற்றும் நீர் நிலைகளைக் கொண்டு வளமுடையதாய் இருந்ததால், வளவன் என்ற பெயர் சோழருக்கே சிறப்பாக வழங்கலானது என்பர்.
பிங்கல நிகண்டில் 'மல்லன்' என்பதற்குப் பெருமையிற் சிறந்தோன் எனப் பொருள் கண்டுள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் 'மல்’ இல் மர், மருது(மருதநிலம்) என்ற சொல் தோன்றியதாகவும், மல், மல்லல் என்பதற்கு (1) வளம் (ஞா. தேவநேயப்பாவாணர் தமிழர் வரலாறு பக்கம் 18) மல்லல் வளனே (தொல்காப்பியம் சொல் அதி 8 - 7) (2) அழகு – மல்லன்னிற்றிற மொன்றில் திருக்கோவை 58) (3) பொலிவு (சூடாமணி) என்று பொருள் படுவதாகக் கூறுவார். “மல்லர்” எனில் வலிமையுடையவன், மற்போரில் தேர்ச்சி பெற்றவன் என்றும் பொருள் படும்.
எனவே மல்லர் என்பதற்குப் போர் வீரர் என்றும் பொருள் கொள்ள வேண்டும். ஆக மல்லர் என்பதுவும், மள்ளர் என்பதுவும் ஒரு பொருளையே உணர்த்துகின்றன என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஆனால் ஏற்கனவே கூறியது போன்று மள்ளரை மட்டும் மருத நில மக்களாக நிகண்டுகள் பேசுகின்றனவே ஒழிய, மல்லர் மருதநில மக்களாகப் பேசவில்லை. இலக்கியங்களில் வரும் மல்லை, மல்லல், மல்லன், மல்லர் என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் பற்றிப்பார்ப்போம்.
“மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என” (குறுந் 45 - 3)
“இரங்குபுனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர” (புறம் 174 – 8 - 9)
“விழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மருத்னன்” (நற்றினை 174 – 9 - 10)
“மழவின்று மல்லல் கேள் மன்னுக எனபாரும்”
(பரிபாடல் வையை - 121)
“மல்லல் மூதூர் மலப்பலி உணி இய” (நற்றினை 73 - 3)
இங்கெல்லாம் வரும் மல்லை, மல்லல் என்ற சொற்கள் வளத்தைக் குறிப்பதாயுள
“களம்புகு மல்லன் கடந்து அடு நிலையே (புறம் 80 - 9)
“மைந்துடை மல்லன் மதவலி முருக்கி” (புறம் 80 - 2)
“மல்லரை மறம் சாய்த்த மலர்த் தண்தார் அகலத்தோன்”
(கலித் 134 - 1)
“மறத்தொடு மல்லர் மறங்கடந்”
( புறபொருள் வெண்பா 9 – 4 )
“மல்ல மர்ந்த மார்பினுள்” (சூளாமணி - 1399)
இங்கு மல்லன், மல்ல இவைகள் மற்போர் வீரர் மற்றும் போர் மறவரைச் சுட்டுகிறது.
“மல்லல் பேரூர் மடியின் மடியா” (பெருபான் - 253)
“மாடமோங்கிய மல்லன் மூதூர்” (நெடுநல் - 29)
“மல்லன் மன்றத்து மதவிடைக் கெண்டி” (பெரும்பாண் - 143)
“மல்லன் ஆவணம் மாலையயர” (நெடுநல் - 45)
இங்கு வரும் மல்லன் என்ற சொல் மன்னரைச் சுட்டுவதாகும். ஆனால் உரையாசிரியர் மல்லன் என்பதை மல்லல் என்று கண்டு வளமுடைய எனப் பொருள் கண்டுள்ளனர். பெரும்பாணாற்றுப்படைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையனின் தலைநகராகிய காஞ்சிமாநகரை 'மல்லர் பேரூர்’ (பெரும்பாண் - 254) எனக்கண்டுள்ளது. இங்கு மல்லர் என்பது மன்னன் இளந்திரையனைக் குறிக்கும், அல்லது போர்வீரர் நிறைந்த ஊர் என்று பொருள்படும்.
அடுத்து அதே இளந்திரையனது மன்றத்தை மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி (பெரும்பாண் - 143) எனக் கண்டுள்ளது. ஆனால் உரையாசிரியர் அதை மல்லல் மன்றம் எனத் திரித்து வளமுடைய மன்றம் என்று பொருள் கண்டுள்ளனர். இவ்வாறு பொருள் கண்டுள்ளது சரியன்று. இதை “மறங்கெழு சோழருறைந்தை யவைத்து” (நற்றினை 400 - 7). “நலந்தருவிற் பாண்டியனவையத்து” (தொல் சிறப்புப்பாயிரம்) என்பதுடன் ஒப்பு நோக்குக. “மாடமோங்கிய மல்லன் மூதூர்” (நெடுநல் - 29) “மல்லன் ஆவணம் மாலையயர (நெடுநல் - 45) இந்த இரண்டு இடங்களிலும் வரும் ‘மல்லன் மூதூர்’ ‘மல்லன் ஆவணம்’ என்பவைகள் பழமையான நகர் என்றும், பாண்டியனாகிய நெடுஞ்செழியனுடைய அங்காடி என்றும் பொருள்படும். ஆனால் வழக்கம் போல், மல்லன் என்பதை மல்லல் என்று திரித்து வளமுடைய என்று உரையாசிரியர் பொருள் கண்டுள்ளனர். சிலப்பதிகாரத்தில் “மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போம்” (புகார் காண்டம் கடலாடும் காதை செ - 34) என்பதில் ‘மல்லன் மூதூர்’ என்பதற்குச் சோழ மன்னனின் தலைநகராகிய புகார் என்று பொருள் கொள்வதே முறை. ஆனால் இங்கும் வழக்கம்போல் மல்லல் எனத்திரித்து வளமுடைய பழமையான ஊர் என்று பொருள் கண்டுள்ளனர்.
தொண்டைமான் இளந்திரையனை நச்சினார்கினியர் ‘திருமால் மரபு’ என்று பெரும்பாணாற்றுப் படைக்குக் தான் எழுதிய உரையில் குறிப்பிடுகின்றார். இராசராச சோழனுலாவில் ‘மல்லன் மரபை ரகுவின் மரபென்று’ எனக் கண்டிருப்பது காண்க. ஆக மேலே, எடுத்தாண்ட இலக்கிய மேற்கோள்களில் வரும் மல்லன் என்ற சொல் மன்னரையே உணர்த்தும் என்பது வெள்ளிடை மலை. இடைக்கால இலக்கியங்கள் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் இவைகளில் எல்லாம் வரும் மல்லன் என்ற சொல்லை, மல்லல் என்று திரித்து வளமுடைய என்று பொருள் கண்டுள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
“பருவதீவலவ பொருதிறல் மல்ல” (பரிபாடல் 3 - 89)
“அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளி விழங்கும்
மல்லன் மாஞாலம் கரி” (குறள் - 245)
“மல்லன் மாஞாலத்து வாழ்பருள் எல்லாம்” (நாலடி - 296)
“மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(சிலப். வஞ்சி வரம் தருகாதை - 202)
“மல்லன் மாஞாலத்து வாழ்வோர் மருங்கிற்”
(சிலம்பு - வஞ்சி நடுகற்காதை - 151)
“மல்லன் மாஞாலத்து வாழ்வாரென்போர்” (மணிமேகலை - 130)
(தொடரும்)
அருமை
ReplyDeleteசவுக்கடி
மல்லர் மள்ளர் 2 வேறு பழந்தமிழ்க் குடிகள் https://www.facebook.com/sangathtamilmallar/
ReplyDelete