Wednesday, November 8, 2017

மூவேந்தர் யார்? பகுதி-25

மள்ளரிய தந்தை 
இரா.தேவ ஆசிர்வாதம் 
முன்னாள் டிப்டி கலெக்டர்

ஈண்டு மல்லர், மல்லன் எனவரும் சொற்கள் இறைவனைக் குறிப்பதாயுள. ஆனால் வழக்கம் போல் மல்லர், மல்லன் என்பனவற்றை மல்லல் எனத்திரித்து வளமுடைய என உரையாசிரியர் பொருள் கண்டுள்ளனர். “மல்லன் மாஞாலம்” எனில் இறைவனுடைய பெரிய உலகத்து என்று பொருள்படும். “பருதிவலவ பொருதிறல் மல்ல” எனப்பரிபாடலில் வரும் வரியை இப்பு நோக்குக, மல்லன் மும்மதின்மாய தர வெய்தோர்” (திருஞானசம்பந்தர் தேவாரம் திருவேற்காடு) “மல்லற்பவனி சேவிதது” (பெரியபுராணம் கழற்றறிவார் புராணம் 37 - 80). “மல்லற் கருணை வளம் போற்றி நல்வணிகன்” (திருவிளையாடற் புராணம் போற்றிக் கலிவெண்பா) இங்குள்ள மல்லன், மல்லர் என்பனவற்றிற்கு வழக்கம் போல் மல்லல் என்று மாற்றி, வளமுடைய என்று பொருள் கண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே மல்லன் என்பது மற்போர் வீரர், போர் மறவர் மற்றும் மன்னர் மட்டுமின்றி அது இறைவனையும் சுட்டும் என்பது தெளிவு. இந்த மல்லன், மல்ல என்பது காரணம் அல்லது பண்புப் பெயரா? அல்லது மரபுப் பெயரா? என்பது பற்றிப்பார்ப்போம்.
முன்னர் குறிப்பிட்டது போல் மல்லரை நிகண்டுகளில் மருதநில மக்களாகக் கொள்ளாமல் பெருமையுடையோன் பெருமையிற் சிறந்தோன் என்று கண்டுள்ளனர். மல்லன் எனில் மற்போரில் ஈடுபடுபவன் என்று பொருள் கொள்வர். சங்ககாலத்தில் ஆமூர் மல்லனும், களாய்ப் போர்வைக் கோப்பெருநற் கிள்ளியும் மற்போரில் ஈடுபட்டதாக புறநானூறு கூறுகின்றது (செய் - 80). பாண்டியன் நெடுஞ்செழியனும் மற்போரில் சிறந்தவன் என்பதாக சங்க இலக்கியங்கள் சான்று பகரும். ஏற்கெனவே மல்லர் போர் மறவராகவும், மன்னராகவும் இறைவனாகவும் சங்க இலக்கியங்கள் மற்றும் இடைக்கால இலக்கியங்கள் கூறுவதாகக் கண்டோம். இராசராச சோழனுலாவில் “மல்லன் மரபை” இரகுவின் மரபு என்று கூறியிருப்பதையும் கண்டோம். 1875 - 76 ஆம் ஆண்டு கொச்சின் நிருவாக அறிக்கையிலும், கேரள பட்டியலிலும் சேரமான் பெருமாளை “மல்லன்” என்று கண்டுள்ளதாக அறிகிறோம். (K.P. Padmanabha Menon. History of Kerala). மள்ளரை உழவராகவும், மற்போர் வீரராகவும், மன்னராகவும் மற்றும் இறைவனாகவும் பேசும் போது மல்லரை உழவராகப் பேசாமல் அவரை மற்போர் வீரர், போர் மறவர், மன்னர் மற்றும் இறைவன் எனப் பேசுகின்றன.
சேரமான் பெருமாள் மட்டுமின்றி, சோழ பாண்டிய மன்னரும் மல்லன் என்ற பட்டம் தரித்திருந்ததாக அறிகிறோம். சோழ மன்னன் முதற் பராந்தகன் குஞ்சர மல்லன் என வழங்கினர். (K.A.N. Sastry - The Cholas. Page 417).
சிவகாசி சாசனத்தில் “பாண்டிய பரமேசுவரரான பரம்பரையில் வந்து தோன்றினர் மன்னர் கோன் இராசமல்லன் மணிமுடிமானாபரணன்” என்று பொறிக்கப்பட்டுள்ளதிலிருந்து பாண்டிய மன்னனுக்கு மல்லன் என்ற பட்டம் இருந்ததாக அறிகிறோம். (சதாசிவ பண்டாரத்தார் - பாண்டியர் வரலாறு. பக். 101).
இராசராசன் மூன்றாவது மகள் பெயர் அருண் மொழி சத்திரமல்லி ஆகும். (சு. இராஜகோபால் திருவையாறு. பக்.91) 
சோழர் காலத்தில் குஞ்சரமல்லி என்ற அதிகாரிச்சி இருந்ததாகத் தெரிகிறது. (SII. Vol. 321) இராசராசஇராச சேகரிவர்மன் கி.பி.1046 ஆம் ஆண்டு கல்வெட்டில் “பாண்டியன் மல்லன் மீனவன்” என்ற பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சி “மல்லல் பேரூர்” (பெரும்பாண். 253) எனவும், புகார் “மல்லன் மாநகர்” எனவும் மாமல்லபுரம் சோழன் கரிகாலன் காலத்தில் “மல்லை” எனவும் வழங்கியது என்றும் இலக்கியங்கள் கூறுவதாக ஏற்கனவே கண்டோம். இடைக்காலத்தில் மல்லி, மல்லன் என்ற பெயருடைய அரசியல் தலைவர்களும், பெருமாட்டிகளும், “மல்லிநாடு” என்ற இடங்களும் இருந்ததாகத் தெரிகிறது. இதற்கு “தேவர்க்கு இவ்வூர் மல்லன் திக்கன்குளம், பழவூர் சங்கரப்பாடி மல்லன் (ARE 371 / 1924) சாமரா பேரைத் தெரிஞ்ச கைக்கோள்மல்லன் அரையன் (ARE 528 / 1921) அளநாட்டைச் சேர்ந்த இனவெள்ளாட்டி சாத்தன் மல்லி (ARE 486 / 1904) இவைகள் சான்றாகும். இடைக்காலத்தில் தொண்டைமண்டலத்தில் மல்லர் என்ற பட்டம் தரித்தவர் இருந்தனர் என்பது மல்லன் சரநணி சிராகுத்தம் மகனார் வயிரவத் தேவர் என ஒரு நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (கொங்கு பத்திரிகை, காஞ்சி நடுகல். சூன் 1975).
மல்லபுரம், மல்லூர், மல்லல், மல்லன் கிணறு, மல்ல சமுத்திரம், திருமல்ல சமுத்திரம், மல்லிப்பட்டினம், மல்லன்பூர் (மைலாப்பூர்) சித்தமல்லி, பூந்தமல்லி, மல்லிநாடு எனப் பெயர் கொண்ட பல ஊர்கள் தமிழகத்தில் இன்று இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மதுரை சுந்தரேசுவரர் ஆலயத்தின் மேற்கு அம்மன் சந்நிதிக் கோபுரம் மல்லப்பன் என்ற ஒரு தலைவனால் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அக்கோபுரத்தின் கல்வெட்டால் அறியத்தக்கது.
டாக்டர் G. ஓப்பர்ட் சேர சோழ பாண்டிய மன்னர்களுக்குப் பெருமாள், மல்லன் என்ற பெயர்கள் வழங்கியதாகக்கூறுகிறார். அவர் கூறுவதாவது “தென்இந்திய சேர சோழ பாண்டிய மன்னர் தொன்முதற்குடி சார்ந்த பெயர் பெருமாள். பொல நாட்டில் மல்லூரைக் கட்டிய ஒரு பெருமாளின் பெயர் மல்லன். மல்லன் என்பது வயல் வெளிகளின் எல்லையில் அல்லது கரையில் வைத்து வணங்கப்படும் நாட்டுப்புறத் தெய்வத்தின் பெயரும் ஆகும்.
Dr.G. Oppert syss: ‘The indigenous tittle of the South India Chera Chola Pandian kings was Perumal. Mallan was the name of a Perumal who built Mallur in Polanadu. Mallan is also called a rural deity which is set up on the borders or ridges of the rice field'. (Dr. G. Oppert - The Original inhabitants of India. Page. 30).
டாக்டர். G. ஒப்பர்ட் மேலும் கூறுவார். “திருமால், பெருமாள் என்ற பெயர்கள் மாலா, மல்லா என்ற பெயர்கலிலிருந்து தோன்றியவை. இந்த இரண்டு பெயர்களும் (திருமால், பெருமாள்) மல்லர் அவரது மன்னர்களுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்களாகும். நாட்டை ஒவ்வொரு பெருமாளும் 12 ஆண்டுகள் ஆள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு காலத்தில் பெருமைக்குரியவர், சிறப்பு வாய்ந்தவர் எனக் கருதப் பட்ட மாலா, மல்லா என்ற பெயர்கள் தெய்வத்திற்குச் சூட்டப்பட்டபின் காலப்போக்கில் அப்பெயர்கள் உணர்த்திய பொருள்கள் மறைந்தும், மறந்தும் போய்விட்டன. இந்தப் பெயர்களுக்கு தமிழ் அகராதிகளில் வினோதமான அர்த்தங்கள் கொடுத்திருப்பதும், அகராதி ஆசிரியர் கெட்ட நோக்கத்தோடு குயுக்தியான முறையில் அப்பெயர்களின் பொருளை விளக்குவதும் அப்பெயர்களின் உண்மைப்பொருள் மறைக்கப்பட்டும் மறந்தும் வந்ததன் விளைவேயாகும். மலபாரில் பெருமாள் என்பது மலபார் அரச மரபினர் பட்டங்களில் ஒன்றாக வழங்கியது.”

Dr. G. Oppertsays: "The word Tirumal, Perumal are also derived from mala, malla. Both, terms were originally the titles given by the Mallas to their great chiefs and kings. Each Perumal was elected to rule for 12 years. The term sacred Mala or the great Mala being once connected with the deity lost their original meaning which was incourse of time entirely forgotten. This circumstance explains their peculiar derivation so often found in Tamil dictionaries and strange attempts of grammrians to explain their startling formation. The name perumal the great Mala is still a royal title in Malabar' (Dr. G. Oppert. The original inhabitants of India. Page 30).
தென் இந்தியாவின் பழங்கால மன்னர் பலர் மல்லன் என்ற பட்டம் தரித்திருந்தனர் எனத் தெரிகிறது. பல்லவர், சாளுக்கியர், இராஷ்டிர கூட்டர், கங்கர் இதற்கு எடுத்துக்காட்டாவர். இராச ராச சோழன் பட்டங்களில் பெருமாள் என்பதுவும் ஒன்று. இன்னும் சில சோழ மன்னரும், பாண்டிய மன்னரும் பெருமாள் பட்டம் தரித்திருந்தனர் என்பதைச் சரித்திர வாயிலாக அறியலாம். ஏன் சேரமன்னன் சேரமான் பெருமாள் என வழங்கியது நாம் ஆறிந்த ஒன்றே. சேர மன்னருக்கு இந்திரன், மல்லன் என்ற பட்டப் பெயர்களும் ஏற்பட்டிருந்ததென கேரளோப்பத்தி கேரள வம்சவளி மகான்மியம் மற்றும் கொச்சின் அரசு 1875 - 76 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகின்றன.(K.P.padmanatha Menon, History of Kerala)
(தொடரும்)

2 comments:

  1. பல்லவர், சாளுக்கியர், இராஷ்டிர கூட்டர், கங்கர் மல்லர் என்பதற்கு எடுத்துக் காட்டு அல்ல . அவர்கள் மல்லர் பாண்டியர் / பாண்டிய மல்லர் எனும் தமிழ் மரபில் வந்தவர்கள் என்பதற்கு சான்று.

    ReplyDelete
    Replies
    1. எல்லார் மூலத்திலும் தமிழும் தமிழரும் இருக்கிறார்கள். ஆனால் எல்லா அந்நியர்களும் தங்கள் மூலம் மறைத்து மறுத்து , தனித்துவம் மிக்க ஹீரோ போல காட்டிக் கொள்கிறார்கள்.

      Delete